காக்கும் கார்த்திகைச் செல்வன் - 3

கந்தனின் அறுபடை வீடுகள்: 1 – திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் கோயில்...
திருப்பரங்குன்றம் கோயில்...

தமிழ்க் கடவுள் முருகப் பெருமானுக்கு சிறப்பானவையாகக் கொள்ளப்படும் 6 கோயில்கள் ஒவ்வொன்றும் அவரது படைவீடு என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆறு இடங்களும் ஒருமித்து ‘அறுபடை வீடுகள்’ என்று அழைக்கப்படுகின்றன. அவை திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழநி, சுவாமிமலை, திருத்தணி மற்றும் பழமுதிர்ச் சோலை ஆகும்.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படைவீடாகத் திகழ்கிறது. மதுரைக்கு தென்மேற்கே 8 கி.மீ தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. முருகப் பெருமான் தெய்வானையைத் திருமணம் செய்து கொண்ட நிகழ்வு இத்தலத்தில் நிகழ்ந்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன. இங்கே முருகப் பெருமான் மணக்கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

தல வரலாறு

சூரபத்மன் என்ற அசுரன், தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் தீராத இன்னல்கள் விளைவித்து வந்தான். செய்வதறியாது தவித்த தேவர்கள், இதுகுறித்து சிவபெருமானிடம் முறையிட்டனர். தேவர்களை அசுரனிடம் இருந்து காத்தருள்வதாக உறுதியளித்த சிவபெருமான், தன் நெற்றிக் கண்ணில் இருந்து 6 தீப்பொறிகளை உருவாக்கினார். அதில் இருந்து ஆறு முகங்களுடன் முருகப் பெருமான் தோன்றினார். சூரனுடன் போரிட்டு அசுரனை மயிலாகவும், சேவலாகவும் மாற்றி ஆட்கொண்டார் முருகன். இச்சம்பவம் திருச்செந்தூர் தலத்தில் நிகழ்ந்தது.

சூரபத்மனை வெற்றி கொண்ட முருகப் பெருமானுக்கு தனது மகள் தெய்வானையை மணம் முடித்துக் கொடுப்பதாக இந்திரன் சம்மதித்தார். அதன்படி முருகப் பெருமான் - தெய்வானை திருமணம் நாரத மகரிஷி முன்னிலையில், அனைத்து தெய்வங்கள், தேவர்கள், மகரிஷிகள் சூழ திருப்பரங்குன்றத்தில் நிகழ்ந்தது. இதே திருமண கோலத்தில் முருகப் பெருமான் இத்தலத்தில் சுப்பிரமணிய சுவாமி என்ற திருநாமத்துடன் எழுந்தருளினார்.

வேலுக்கு அபிஷேகம்

5 அறுபடை வீடுகளில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கும் முருகப் பெருமான், இத்தலத்தில் மட்டும் தெய்வானையை மணமுடித்த கோலத்தில் அமர்ந்தபடி அருள்பாலிக்கிறார். அருகே நாரதர், இந்திரன், பிரம்மதேவர், நின்ற கோலத்தில் சரஸ்வதி தேவி, சாவித்திரி உள்ளனர். மேலே சூரிய சந்திரர், கந்தர்வர்கள் உள்ளனர். கீழே முருகப் பெருமானின் வாகனங்கள் யானை, ஆடு உள்ளன. இத்தலத்தில் குடவரை மூர்த்தியாக முருகப் பெருமான் இருப்பதால், அவருக்கு புனுகு மட்டும் சாத்தப்படுகிறது. வேலுக்கு மட்டுமே அபிஷேகம் நடைபெறும். புரட்டாசி மாதம் கடைசி வெள்ளிக்கிழமையில் இந்த வேல், மலை மீதுள்ள சிவன் கோயிலுக்குக் கொண்டு செல்லப்படும். சூரபத்மனை ஆட்கொண்டு வெற்றிவேலுடன் முருகப் பெருமான் திருப்பரங்குன்றம் வந்து அமர்ந்ததால், இங்கே வேலுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது.

நக்கீரரைக் காத்த வேல்

சிவபக்தரான நக்கீரர், ஒருசமயம் சிவபெருமானை எதிர்த்து வாதம் செய்தார். அது அவருக்கு தவறாகவே பட்டது. அந்தப் பாவம் நீங்க, திருப்பரங்குன்றம் வந்திருந்து, தவம் மேற்கொண்டார். அப்போது அருகில் இருந்த குளத்தில் ஓர் இலை பாதி மீனாகவும், பாதி பறவையாகவும் காட்சி அளித்தது. இதில் நக்கீரரின் தவம் கலைந்தது. ஏற்கெனவே சிவவழிபாட்டில் தவறிய 999 பேரை சிறை பிடித்திருந்த பூதம், நக்கீரரையும் சிறைபிடித்து குகையில் அடைத்தது. சிறையில் உள்ளவர்களை மீட்பதற்காக, நக்கீரர் ‘திருமுருகாற்றுப்படை’ பாடினார். முருகப் பெருமான் அவருக்கு காட்சி அருளி, பூதத்தை சம்ஹாரம் செய்தார். தனது வேலால் குகையைத் தகர்த்து அனைவரையும் முருகப் பெருமான் காத்தருளினார்.

பூதம் தன்னை தீண்டியதால், தான் கங்கையில் நீராடி, தனது பாவத்தைப் போக்க உள்ளதாக நக்கீரர் தெரிவித்ததும், உடனே முருகப் பெருமான், தனது வேலால் பாறையில் ஊன்றி, கங்கை நதியை பொங்கச் செய்தார். நக்கீரர் அதில் நீராடி பாவம் நீங்கப் பெற்றார். இந்த காசித் தீர்த்தம் இன்றும் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ளது. அருகில் காசி விஸ்வநாதர், விசாலாட்சி, எதிரில் சுப்பிரமணியர் சந்நிதிகள் உள்ளன.

நவ வீரர்கள் சந்நிதி

சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து 6 தீப்பொறிகள் வெளியேறியபோது, வெப்பம் தாளாமல் பார்வதி தேவி அங்கிருந்து கிளம்பியதும், அவரது கால் சிலம்பு தெறித்து நவரத்தினங்கள் சிதறின. அவை நவசக்திகளாக (நவகாளிகள்) உருவெடுத்தனர். அவர்கள் அனைவரும் சிவபெருமானை விரும்பியதை அறிந்த பார்வதி தேவி, அவர்கள் காலம் முழுவதும் கர்ப்பிணிகளாக இருக்குமாறு சபித்தார். இதைத் தொடர்ந்து, நவகாளிகளும் சிவபெருமானிடம் இதுகுறித்து முறையிட்டனர்.

சிவபெருமான் பார்வதி தேவியை சமாதானப்படுத்தி, அவர்கள் அனைவருக்கும் குழந்தைகள் பிறந்து அக்குழந்தைகள் வளர்ந்து முருகப் பெருமானுக்கு துணையாக இருக்கட்டும் என்று அருளினார். பார்வதிதேவியும் மனமிரங்கி ஒன்பது குழந்தைகளை பிறக்கச் செய்தார். அவர்கள் வளர்ந்து, நவ வீரர்களாக இருந்து, சூரபத்மனை அழிக்க முருகப் பெருமானுக்கு உதவி புரிந்தனர். வீரபாகு, வீரகேசரி, வீர மகேந்திரன், வீர மகேஸ்வரரன், வீர ராட்சசன், வீர மார்த்தாண்டன், வீராந்தகன், வீரதீரன், வீரசூரன் ஆகிய நவவீரர்களுக்கு கோயிலின் முன்மண்டபத்தில் தனி சந்நிதி உள்ளது. திருப்பரங்குன்றம் கோயிலில் வெள்ளை நிற மயில்கள் காணப்படும். தேவர்களும், முனிவர்களும் சுப்பிரமணியரை தரிசனம் செய்வதற்காக, வெண்ணிற மயில் வடிவில் வசிப்பதாக கூறப்படுகிறது.

தேவி லிங்கம்

சிவபெருமான் பார்வதிதேவிக்கு பிரணவ மந்திரத்தை உபதேசித்தபோது, பார்வதி தேவி மடியில் இருந்த முருகப் பெருமான் அதைக் கேட்டுக் கொண்டிருந்தார். குருவிடம் இருந்து முறையாக கற்காமல் இப்படி மறைமுகமாக கேட்டது தவறு என்று எண்ணிய முருகப் பெருமான் இத்தலத்துக்கு வந்து சிவபெருமானை நோக்கி தவம் புரிந்தார். தைப்பூச தினத்தில் முருகப் பெருமானுக்கு சிவபெருமான் காட்சி அருளினார். இவரே ஆதிசொக்கநாதராக சுப்பிரமணியர் கோயிலுக்கு எதிரே அருள்பாலிக்கிறார். விழாக்காலங்களில் சிவபெருமானுக்கே கொடியேற்றப்படுகிறது. ஆனால், முருகப் பெருமான் வீதியுலா செல்கிறார். சிவபெருமானின் அம்சமாக முருகப் பெருமான் இருப்பதால் இங்குள்ள முருகருக்கு ‘சோம சுப்பிரமணியர்’ என்ற பெயரும் உள்ளது.

கருவறையில் சிவலிங்கத்துக்குப் பின்புறம் சிவபெருமான், பார்வதி மற்றும் முருகப் பெருமான் (சோமாஸ்கந்தர் - சோமன், உமா, கந்தன்) இருப்பது சிறப்பு அம்சமாக கருதப்படுகிறது. மகிஷாசுரனை அழித்த சமயத்தில் துர்கை அம்மனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. அதில் இருந்து அவருக்கு விமோசனம் அளித்தபோது, சிவபெருமான் சோமாஸ்கந்தராக காட்சியளித்தார். இதன் அடிப்படையில் சோமாஸ்கந்தர் வடிவம் அமைக்கப்பட்டுள்ளது. துர்கை அம்மனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கம் என்பதால், ‘தேவி லிங்கம்’ என்றே அழைக்கப்படுகிறது. சுவாமிக்கு ‘சாந்தாகாரம்’ என்ற மருந்து பூசப்பட்டுள்ளதால், சாம்பிராணி தைலம் மட்டும் பூசப்படுகிறது. வேத வியாசர், பராசர முனிவர் இத்தல சிவபெருமானை வழிபட்டுள்ளனர்.

கோயில் அமைப்பு

திருப்பரங்குன்றம் கோயிலின் கோபுரம் 7 நிலைகளைக் கொண்டு 46 மீட்டர் உயரத்துடன் அமைந்துள்ளது. கோபுரத்தின் அடிப்பகுதி சிற்ப வேலைப்பாடுமிக்கது, சிகரப் பகுதியில் சுதைச் சிற்பங்கள் காணப்படுகின்றன. இத்தலத்தில் சத்தியகிரீஸ்வரர், பவளக்கனி வாய் பெருமாள், கற்பக விநாயகர், சுப்பிரமணியர், துர்கையம்மன் என பஞ்ச தெய்வங்களும் மூலஸ்தானத்தை ஒட்டி, ஒரே குடவரையில் அருள்கின்றனர்.

மேலும், அன்னபூரணி குகைக் கோயிலும், ஜெஷ்டா தேவிக்கான குகைக் கோயிலும் உள்ளன. அர்த்தமண்டபத்தில் திருமாலின் அவதாரங்களைக் குறிக்கும் புடைப்புச் சிற்பங்கள் காணப்படுகின்றன. கோயிலின் நுழைவாயிலில் உள்ள 10 பெரிய கற்றூண்கள், நாயக்கர் கால சிற்பக் கலைத்திறனை வெளிப்படுத்துகின்றன. ‘முருகன் தெய்வானை திருமணக் கோலம்’ போன்ற கற்றூண்கள் குறிப்பிடத்தக்கவை ஆகும்.

கோயில் சிறப்புகள்

இத்தலத்தில் தட்சிணாமூர்த்திக்கு ருத்ராபிஷேகம் செய்யப்படும். வெள்ளிக்குடத்தில் சுவாமியை ஆவாகனம் செய்து 11 வேத விற்பன்னர்கள் ருத்ரம், சமஹம் போன்ற மந்திரங்களை சொல்லி வழிபடுவது வழக்கம். இதை செய்வதால் நீண்ட நாட்களாக நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் பலன் அடைவர் என்பது ஐதீகம்.

கிழக்குப் பார்த்த கருவறையில் சிவபெருமான் அருள்பாலிக்கிறார். இவருக்கு எதிரே திருமால், பவளக்கனிவாய் பெருமாளாக மகாலட்சுமியுடன் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார். நந்திதேவர் இருக்கவேண்டிய இடத்தில் திருமால் இருப்பதால் இக்கோயில் ‘மால்விடை கோயில்’ (மால் - திருமால், விடை - நந்திதேவர்) என்று அழைக்கப்படுகிறது. திருமால் சிவபெருமானுக்கு சேவை புரிவதற்காகவே நந்திதேவர் இடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இவரே, மீனாட்சி - சொக்கநாதர் திருமணத்தின்போது, பார்வதி தேவியை தாரை வார்த்து கொடுக்கச் செல்கிறார்.

ARAVINDHAN A

பரம்பொருளாகிய சிவபெருமான் (சத்தியகிரீஸ்வரர்) குன்று வடிவில் அருள்வதால், ‘பரங்குன்றநாதர்’ என்று அழைக்கப்படுகிறார். சிவன் கோயிலாகவே இருந்த திருப்பரங்குன்றம், முருகன் தெய்வானையை மணம் புரிந்த தலம் என்பதால், அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, சுப்பிரமணிய சுவாமி கோயிலாக மாறிவிட்டது. இத்தலம் ‘பரங்குன்றம்’ என்று அழைக்கப்பட்டு, பின்னாளில் ‘திருப்பரங்குன்றம்’ என்று பெயர் பெற்றது.

கோயில் குடவரையாக இருப்பதால் மலையே விமானமாகக் கருதப்படுகிறது. அதனால் கருவறைக்கு மேல் தனி விமானம் இல்லை. பௌர்ணமிதோறும் பக்தர்கள் இங்கே கிரிவலம் வருவது வழக்கம். இம்மலையை நித்தம் வலம் வந்து வழிபட்டால், அனைத்து வினைகளும் தீர்த்துவிடும் என்று திருஞானசம்பந்தர் தனது தேவாரத்தில் பாடியுள்ளார்.

நக்கீரர், அருணகிரி நாதர், பாம்பன் சுவாமிகள், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் முதலானோரும் இத்தலத்தைப் போற்றிப் பாடியுள்ளனர்.

திருவிழாக்கள்

வைகாசி விசாகம், ஆடிக் கிருத்திகை, புரட்டாசி வேல் திருவிழா, கந்த சஷ்டி, திருக்கார்த்திகை, பங்குனி உத்திரத் திருவிழாக்கள் இங்கே சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

தைப்பூச தினத்தில் முருகப் பெருமானுக்கு சிவபெருமான் காட்சி அருளியதால், தைப்பூச விழா 10 நாட்களும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் சிவபெருமானையும் முருகப் பெருமானையும் வழிபட்டால் இஷ்ட சித்திகளைப் பெறலாம் என்பது ஐதீகம். திருமணத் தடை விலக, புத்திர தோஷம் நீங்க, ராகு காலத்தில் இங்கே துர்கை அம்மனுக்கு வழிபாடு நடைபெறுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in