பல தலைமுறைகளாக தொடரும் வழிபாடு: வைத்தீஸ்வரன் கோயிலில் குவிந்த ஒரு லட்சம் நகரத்தார்
பாதயாத்திரையாக வரும் பக்தர்கள்

பல தலைமுறைகளாக தொடரும் வழிபாடு: வைத்தீஸ்வரன் கோயிலில் குவிந்த ஒரு லட்சம் நகரத்தார்

சீர்காழி அருகே உள்ள நவக்கிரக தலங்களில் செவ்வாய்க்கு உரிய தலமான வைத்தீஸ்வரன் கோயிலில் பாதயாத்திரையாக வந்து சேர்ந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட நகரத்தார் மக்கள் இன்று வழிபாடு நடத்தினர்.

பாதயாத்திரை பக்தர்கள்
பாதயாத்திரை பக்தர்கள்

மயிலாடுதுறை மாவட்டம், வைத்தீஸ்வரன் கோயிலில் உள்ள தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்தியநாத சுவாமி கோயிலில் செல்வமுத்துக்குமார சுவாமி, செவ்வாய்க்கு அதிபதியான அங்காரகன், தன்வந்திரி சுவாமி ஆகியோர் தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

இங்குள்ள தையல் நாயகி அம்மனை நகரத்தார் எனப்படும் செட்டிநாட்டு பகுதி மக்கள் தங்களது குலதெய்வமாக கொண்டுள்ளனர். ஆண்டுதோறும் சித்திரை மாதம் 2-வது செவ்வாய்கிழமையன்று அவர்களுக்காக கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். அதில் கலந்து கொள்வதற்காக நகரத்தார் மக்கள் தங்கள் பகுதியில் இருந்து மாட்டு வண்டிகள் மூலமும், நடைபயணமாகவும் வருவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.

வழித்துணை கம்புகளை கோயிலில் செலுத்தும் பக்தர்கள்
வழித்துணை கம்புகளை கோயிலில் செலுத்தும் பக்தர்கள்

காரைக்குடி கீழச்சிவல்பட்டி, புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பாதயாத்திரையாக 100 கிலோ மீட்டருக்கும் மேல் ஒரு வார காலத்திற்கு நடந்தே வந்து சேரும் இந்த மக்கள் முதல் நாள் இரவில் கோயிலில் தங்கி, மறுநாள் சித்திரை இரண்டாவது செவ்வாய் அன்று நடைபெறும் சிறப்பு பூஜையில் கலந்து கொள்வது வழக்கம். பல தலைமுறைகளாக தொடரும் இந்த வழிபாடு கடந்த இரண்டு ஆண்டுகளாள கரோனா தொற்று பரவல் காரணமாக நடைபெறவில்லை.

இந்தாண்டு கரோனா தொற்று குறைந்து கட்டுபாடுகள் தளர்த்தப் பட்டுள்ளதால் ஒரு வாரத்திற்கு முன்பு புறப்பட்டு விட்ட பக்தர்கள் நேற்று மாலை முதல் வைத்தீஸ்வரன்கோயிலுக்கு வந்து சேரத் தொடங்கினர். தங்கள் குலதெய்வமான தையல்நாயகி அம்மனுக்கு சீர்வரிசை பொருட்களை எடுத்துக்கொண்டு வந்த பக்தர்கள் சித்திரை 2-ம் செவ்வாய் கிழமையான இன்று அம்மனை வழிபட்டு, தாங்கள் வேண்டி எடுத்து வந்த வழித்துணை குச்சிகளை கோயில் கொடிமரம் அருகே போட்டு நேர்த்திக்கடனை செலுத்தினர்.

வைத்தீஸ்வரன் கோயிலில் நகரத்தார் மக்கள்
வைத்தீஸ்வரன் கோயிலில் நகரத்தார் மக்கள்

நகரத்தார் வழிபாட்டை முன்னிட்டு வைதீஸ்வரன் கோயில் பகுதியில் காவல் கண்காணிப்பாளர் மற்றும் சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளர் லாமெக் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பக்தர்கள் பாதுகாப்பாக ஊர் திரும்ப சிறப்பு பேருந்துகள் வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in