தை வெள்ளியில் சாந்தரூப காளி வழிபாடு; வியாபாரத்தில் ஏற்றம்; வேலையில் உயர்வு!

தை வெள்ளியில் சாந்தரூப காளி வழிபாடு; வியாபாரத்தில் ஏற்றம்; வேலையில் உயர்வு!

தை வெள்ளிக்கிழமையில் சாந்தரூபமாக காட்சி தரும் காளி தேவியை வணங்குவது நம் வாழ்வில் எண்ணற்ற நல்லதிர்வுகளை உண்டாக்கும். தீயசக்திகளை நம்மிடம் அண்டவிடாமல் செய்யும்.

தை மாதம் என்பது புனிதமான மாதம். வழிபாடுகளுக்கு உரிய மாதம். தை மாத செவ்வாய்க்கிழமையும் வெள்ளிக்கிழமையும் அம்பிகை வழிபாட்டுக்கு உரிய நாட்கள். தை வெள்ளியில், எல்லாக் கோயில்களிலும் குடிகொண்டிருக்கும் அம்பிகையைத் தரிசிக்கலாம். அம்மன் குடிகொண்டிருக்கும் ஆலயங்களுக்குச் சென்று மனதாரப் பிரார்த்தனை மேற்கொள்ளலாம்.

குறிப்பாக, உக்கிரமாகவே இருக்கிற காளி, பிரத்தியங்கிரா, துர்கை முதலான தெய்வங்கள் சாந்த ஸ்வரூபினியாகத் திருக்காட்சி தரும் ஆலயங்களுக்குச் சென்று வணங்குவதும் வழிபடுவதும் இன்னும் மகத்தான பலன்களை வழங்கும் என்பது ஐதீகம்.

சென்னை பாரிமுனையில் உள்ளது ஸ்ரீகாளிகாம்பாள் கோயில். சக்தியும் சாந்நித்தியமும் நிறைந்த அற்புதமான திருக்கோயில். இங்கே உள்ள ஸ்ரீகமடேஸ்வரர் சந்நிதியும் ஸ்ரீமுருகப்பெருமான் சந்நிதியும் விசேஷமானது. ஆனாலும் காளிகாம்பாளே இங்கு கண்கண்ட தெய்வம். கருணையும் கனிவுமாகக் காட்சி தருபவள். இவளிடம் அமர்ந்து நம் பிரார்த்தனையை முன் வைத்து வேண்டிக்கொண்டால் போதும்... நம்மை ஒருபோதும் கைவிடமாட்டாள் காளிகாம்பாள்!

ஸ்ரீகாளிகாம்பாள் கோயில்... மூன்று அம்பிகையர் குடிகொண்டி ருக்கும் ஒப்பற்ற திருத்தலம். மூலவராக குடிகொண்டிருக்கும் ஸ்ரீகாளிகாம்பாள் மிகுந்த வரப்பிரசாதி. காளி என்றால் உக்கிரமாகத்தானே இருப்பாள். ஆனால் இங்கே அவள், சாந்த சொரூபியாக இருந்து அருள்பாலிக்கிறாள். சத்ரபதி சிவாஜியும் மகாகவி பாரதியாரும் வழிபட்ட பழைமை மிக்க ஸ்தலம் இது!

அடுத்து பிராகாரத்தில் உள்ள ஸ்ரீதுர்கையும் சக்தி மிக்கவள். ராகுகாலத்தில் துர்கை வழிபாடு விமரிசையாக நடந்தேறுகிறது இங்கே! செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் ஸ்ரீதுர்கைக்கு ராகுகால வழிபாடு நடைபெறுகிறது. அப்போது சென்னை மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள பெண்கள் இங்கு வந்து, காளிகாம்பாளையும் துர்கையையும் வழிபடுவார்கள். துர்கைக்கு எலுமிச்சை தீபமேற்றி வழிபடுகிறார்கள்.

அதேபோல், ஸ்ரீபிரத்தியங்கிரா தேவியின் சந்நிதியும் இங்கே அமைந்துள்ளது. பிரம்மாண்ட திருக்கோலம். சுதைச் சிற்பமாக காட்சி தருகிறாள். அமாவாசை பௌர்ணமி முதலான நாட்களிலும் செவ்வாய், வெள்ளி , ஞாயிறு முதலான கிழமைகளிலும் ஸ்ரீபிரத்தியங்கிரா தேவிக்கு சிறப்பு பூஜைகளும் பரிகார வழிபாடுகளும் நடைபெறுகின்றன .

காளிகாம்பாளுக்கு தாமரை மலர்கள் சார்த்தி வேண்டிக்கொள்ளுங்கள். துர்கைக்கும் பிரத்தியங்கிரா தேவிக்கும் செவ்வரளி மலர் சூட்டி பிரார்த்தனை செய்வோம். மூவருக்குமே எலுமிச்சை மாலை சார்த்தி வேண்டிக்கொள்வதும் திருஷ்டியையும் தடைகளையும் திருமணம் முதலான மங்கல காரியங்களில் இதுவரை இருந்த தடைகளையும் நீக்கியருளுவார்கள்.

தை மாத வெள்ளிக்கிழமைகளில், ஸ்ரீகாளிகாம்பாளையும் ஸ்ரீதுர்கையையும் ஸ்ரீபிரத்தியங்கிரா தேவியையும் தரிசிப்போம். அனைத்து நலன்களையும் தந்து காப்பார்கள் தேவியர்!

இதேபோல், கும்பகோணம் அருகே உள்ள பட்டீஸ்வரம் ஆலயத்தில் தனிச்சந்நிதியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீதுர்கையும் அழகும் அருளும் நிறைந்தவள். கனிவும் கருணையும் கொண்டவள். புன்முறுவல் பொங்கக் காட்சி தருபவள். இவளையும் தை வெள்ளிகளில் வணங்கி வரலாம். வாழ்க்கையில் வளமும் வியாபாரத்திலும் வேலையிலும் வெற்றிகளையும் குவிப்பாள் பட்டீஸ்வரம் துர்கை!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in