திருக்கார்த்திகையில் நெல் பொரி, அவல் பொரி ஏன்?

திருக்கார்த்திகையில் நெல் பொரி, அவல் பொரி ஏன்?

நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையில், திருக்கார்த்திகை தீபத் திருவிழா விமரிசையாக நடைபெறும். திருவண்ணாமலை மட்டுமின்றி, அனைத்து சிவாலயங்களிலும் கார்த்திகை தீப விழாவானது அமர்க்களப்படும்.

சிவாலயங்கள் மட்டுமின்றி, அம்மன் குடிகொண்டிருக்கும் ஆலயங்களிலும் முருகப்பெருமான் அருள்பாலிக்கும் ஆலயங்களிலும் திருக்கார்த்திகை வைபவம் கோலாகலமாக நடைபெறும்.

முருகக்கடவுளின் வளர்ப்பு அன்னையர்களான கார்த்திகைப் பெண்கள், நம் இல்லம் தேடி இந்த நாளில் வருவார்கள். அவர்களை வரவேற்பதே இவ்விழாவாகும் என்பர் சிலர். அவர்களுடன் கார்த்திகேயனும் வருவான். அவனருளால் நம் வாழ்வில் வளமையும் செல்வமும் பெருகும் என்பது நம்பிக்கை. கொற்றவையாகிய துர்காதேவிக்கும் கார்த்திகா என்றொரு திருநாமம் உண்டு. துர்கை அக்னி மண்டலத்தில் வீற்றிருப்பவள். அக்னிமயமானவள். அதனால் அவள் கார்த்திகைப் பெண்களுக்கு நடுவே அக்னி துர்கையாக இருக்கின்றாள் என்கின்றன ஞானநூல்கள். எனவே சுவாமிமலை முதலான ஆலயங்களில், கார்த்திகை தீபத் திருவிழா சிறப்புற கொண்டாடப்படுகிறது. நம் இல்லங்களிலும் அகல் விளக்குகள் ஏற்றி, ஜோதியே கடவுள், கடவுளே ஜோதி என வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

இந்தத் திருநாளில் ஆலயங்கள்தோறும், வீடுகள்தோறும் ஏராளமான விளக்குகளை ஏற்றுகின்றனர். விண்ணில் விளங்கும் நட்சத்திரக் கூட்டங்களை மண்ணில் ஒளிர்வதாகக் காட்டுவதே திருக்கார்த்திகை தீபத்திருநாள் என்கிறது சாஸ்திரம்.

அதையொட்டியே, திருக்கார்த்திகை நன்னாளில், ஆலயங்களிலும் வீடுகளிலும் ஏராளமான விளக்குகள் ஏற்றப்படுகின்றன. பூஜையறைகளிலும் வாசல் மாடங்களிலும் வாசல்களிலும் என வரிசையாக அகல்விளக்குகளை ஏற்றி வைத்து, நட்சத்திர ஒளியை, ஜோதி ஸ்வரூபமானத் திகழும் தெய்வங்களை வரவேற்று, அவர்கள் நம் வீடுகளுக்கு வந்து நமக்கு அருள்பாலிப்பதாக ஐதீகம்!

கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டதாலும், கார்த்திகாவான துர்கையின் புதல்வன் என்பதாலும் முருகனுக்குக் கார்த்திகேயன் எனும் திருநாமம் அமைந்தது. கிருத்திகா புத்திரன், கார்த்திகை மைந்தன் என்கிற திருநாமங்களும் முருகக் கடவுளுக்கு உண்டு. கார்த்திகை என்பது போரைக் குறிக்கும் நட்சத்திரம். வெற்றியை விரும்புபவர்கள், கார்த்திகை நட்சத்திர தினத்தில் முருகனை வழிபடவேண்டும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்!

மகாவிஷ்ணு, பிரம்மா இருவருக்கும் ஜோதிப் பிழம்பாய், சிவபெருமான் காட்சி அளித்த நன்னாள்... கார்த்திகை பௌர்ணமி! கடும் தவம் மேற்கொண்ட பார்வதிதேவி, கார்த்திகை மாதத்தில், கார்த்திகை நட்சத்திரம் கூடிய பௌர்ணமி நாளில்தான் வேயுறு தோளிபங்கனின் இடப் பாகத்தைப் பெற்றாள். அப்படி, அர்த்தநாரீஸ்வரராக சிவபெருமானார் திருக்காட்சி தந்த தலம் திருவண்ணாமலை என்கிறது அருணாசல புராணம்.

கார்த்திகை மாத துவாதசி நாளில், துளசிதேவி மகாவிஷ்ணுவைத் திருமணம் செய்து கொண்டதாகச் சொல்கிறது விஷ்ணு புராணம். எனவே, கார்த்திகை மாதம் முழுவதும், துளசி தளங்களால் மகாவிஷ்ணுவை அர்ச்சித்து வழிபட்டு வந்தால், நம் முன் ஜென்ம பாவங்கள் அனைத்தும் விலகும். அதனால்தான், சபரிமலைக்கு கார்த்திகை மாதத்தில் விரதம் மேற்கொள்ளத் தொடங்குகிறார்கள். அப்படி விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள், கழுத்தில் துளசி மாலை அணிந்துகொள்கிறார்கள்.

ஒவ்வொரு துளசி தளத்துக்கும் ஒவ்வொரு அஸ்வமேத யாகம் செய்த பலன் உண்டு என்கிறது தர்மசாஸ்திரம். நம் கழுத்தில் துளசி மாலை அணிந்துகொண்டால், மகாலட்சுமி எப்போதும் வாசம் செய்வாள். இல்லத்தில் சகல ஐஸ்வர்யமும் குடிகொள்ளும் என்பது ஐதீகம்.

திருக்கார்த்திகை நாளில், அன்னதானம் செய்தால், கங்கைக் கரையில் ஆயிரம் பேருக்கு அன்னமிட்ட பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம்!

மகாபலி சக்கரவர்த்தி, தன் உடலில் ஏற்பட்ட வெப்பத்தைத் தணிப்பதற்காக, கார்த்திகை விரதம் இருந்து சிவனாருக்கு பொரி படைத்து வணங்கினான். இதனால் வெம்மை நோயில் இருந்து விடுபட்டான். அதனால்தான், கார்த்திகை தீபத் திருநாளில், நெல் பொரி, அவல் பொரியில் வெல்லம் கலந்து படைக்கும் வழக்கம் ஏற்பட்டது என்கின்றன ஞானநூல்கள்.

ஆகமத்தில் சொல்லப்பட்டிருப்பது போல் சிவ பெருமானுக்கு முப்பத்திரண்டு உபசாரங்களுடன் வழிபாடு செய்வது சிறப்புடையது. இயலாதவர்கள் பதினோரு உபசாரங்களுடன் வழிபடலாம். அதுவும் இயலாதவர்கள் சந்தனம், பூ, நைவேத்யம், தூபம், தீபம் என்ற ஐந்து உபசாரங்களுடன் வழிபடலாம். எதையுமே செய்யமுடியவில்லையே என வருந்துவோர், விளக்கேற்றி வழிபட்டாலே நமக்குப் பலன்களைத் தந்தருளுவார் சிவனார்.

கார்த்திகை விரதம் அனுஷ்டிப்பவர்கள், மாலையில் தீபம் ஏற்றுவதற்கு முன்பு வரை பழரசம், பழங்கள் சாப்பிடலாம். பழங்களைக் கூட சாப்பிடாமல், ‘நிர்ஜலம்’ எனும் வெறும் நீரை மட்டுமே ஆகாரமாக உட்கொள்பவர்களும் இருக்கிறார்கள். இயலாதவர்கள், ஒருவேளை மட்டும் இட்லி போன்ற மிதமான உணவை எடுத்துக் கொள்ளலாம்.

பூஜை முடித்து விளக்கேற்றிய பின் விரதத்தை முடிக்கலாம். அந்த நாள் முழுக்க முருகப் பெருமான், சிவபெருமான் பாடல்களை பாராயணம் செய்வதும், அருகில் உள்ள ஆலயங்களுக்குச் சென்று இறைவனைத் தரிசனம் மேற்கொள்வதும், நம் இல்லத்தின் தரித்திரத்தைப் போக்கும். சகல ஐஸ்வரியமும் கிடைக்கப் பெற்று இனிதே வாழச் செய்யும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in