கன்னி பூஜையின் விசேஷம்!

கன்னி பூஜையின் விசேஷம்!

நவராத்திரியில் ஒவ்வொரு நாளும் இரண்டு முதல் பத்து வயதுக்கு உட்பட்ட கன்னியர்களை வழிபட வேண்டும். இக்கன்னியர்களுக்கு குமாரி, திரிமூர்த்தி, கல்யாணி, ரோகிணி, காளி, சண்டிகா, சாம்பவி, துர்க்கா, சுபத்திரா என்று பெயர் சூட்டி ஸ்ரீரஸ்து, ஸ்ரீயுக்தம் என்ற சொற்களை முதலாகக் கொண்ட மந்திரங்களைக் கூறி பூஜிக்க வேண்டும்.

ஒவ்வொரு கன்னி பூஜைக்கு ஏற்ப நமக்குப் பலன்கள் கிடைக்கும். நமது எண்ணம் அனைத்தும் ஈடேறும் என்பது திண்ணம்.

நவராத்திரியின் முதல் நாளான பிரதமை திதியில் மது, கைடபர் ஆகிய அரக்கர்களை அழித்த ஸ்ரீ மகேஸ்வரியை வணங்கி, 2 வயது சிறுமியை ‘குமாரி’ அவதாரத்தில் பூஜிக்க வேண்டும்.

இரண்டாம் நாளான துவிதியை திதியில் மகிஷனை வதம் செய்ய புறப்படும் ஸ்ரீராஜராஜேஸ்வரியை வணங்கி, 3 வயது சிறுமியை ‘கவுமாரி’ வடிவமாக பூஜிக்க வேண்டும்.

மூன்றாம் நாளான திருதியை திதியில் மகிஷனை அழித்த ஸ்ரீவாராகியை வணங்கி, 4 வயது சிறுமியை ‘கல்யாணி’ வேடத்தில் பூஜிக்க வேண்டும்.

நான்காம் நாளான சதுர்த்தியில் சிம்மாசனத்தில் வெற்றிக் கோலத்தில் அமர்ந்திருக்கும் மகாலட்சுமியை வணங்கி, 5 வயது சிறுமியை ‘ரோகிணி’ வேடத்தில் பூஜிக்க வேண்டும்.

ஐந்தாம் நாளான பஞ்சமி திதியில் சும்ப, நிசும்பனின் தூதர்களிடம் தூது சென்ற ஸ்ரீமோகினியை வணங்கி, 6 வயது சிறுமியை ‘வைஷ்ணவி’ வேடத்தில் பூஜிக்க வேண்டும்.

ஆறாம் நாளான சஷ்டி திதியில் சர்ப்பராஜ ஆசனத்தில் அமர்ந்திருக்கும் ஸ்ரீ சண்டிகா தேவியை வணங்கி, 7 வயது சிறுமியை ‘இந்திராணி, காளிகா’வாக நினைத்து வழிபட வேண்டும்.

நவராத்திரியின் ஏழாம் நாளான சப்தமி திதியில் தாமரை மலரில் உள்ள பொற்பீடத்தில் அமர்ந்து வீணை வாசிக்கும் ஸ்ரீ சாம்பவி துர்க்கையை வணங்கி, 8 வயது சிறுமியை ‘பிராமி மகா சரஸ்வதி, சுமங்கலி’யாக கருதி பூஜிக்க வேண்டும்.

எட்டாம் நாளான அஷ்டமி திதியில் கரும்பு, வில்லுடன் சுற்றிலும் அணிமா முதலிய அஷ்ட சக்திகளுடன் ரக்த பீஜனை சம்ஹாரம் செய்த ஸ்ரீ நரசிம்ம தாரிணியை வணங்கி, 9 வயது சிறுமியை ‘மகா கௌரி’ வேடத்தில் பூஜிக்க வேண்டும்.

ஒன்பதாம் நாளான நவமி திதியில், கையில் வில், பாணம், அங்குசம், சூலத்துடன் தோற்றமளிக்கும் ஸ்ரீபரமேஸ்வரி, சுபத்ரா தேவியை வணங்கி, 10 வயது சிறுமியை ‘சாமுண்டி’ வடிவில் வழிபட வேண்டும். தசமி திதியில் ஸ்தூல வடிவத்தில் இருக்கும் ஸ்ரீ அம்பிகையை (விஜயா) வழிபட வேண்டும்.

புரட்டாசி மாதம் சுக்ல பட்ச விஜய தசமியே மூன்று சக்திகளும், தீய சக்தியை அழித்து, வெற்றி கொண்ட அனைவருக்கும் நன்மைகளை அள்ளித் தந்து அருள்பாலிக்கும் சுபநாள்.

விஜயதசமியில் தொடங்கும் அனைத்து செயல்களும் வெற்றி பெறும். இந்த நவராத்திரியில் அனைத்து நாட்களும் முப்பெரும் தேவியருக்கு சுண்டல் நைவேத்தியம் செய்வது நடைமுறையில் இருக்கும் வழக்கம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in