’கணுப்பிடி’ வைக்கும் நேரம் எப்போது? : அண்ணன், தம்பி நலனுக்கான பெண்களின் வழிபாடு!

- புகுந்த வீட்டில் பெண்ணின் வாழ்க்கை எப்படி? உணர்த்துகிற ‘கணு வைத்தல்’ சடங்கு!
’கணுப்பிடி’ வைக்கும் நேரம் எப்போது? : அண்ணன், தம்பி நலனுக்கான பெண்களின் வழிபாடு!

தைத்திருநாள் என்பது மக்களுடனும் மக்களின் வாழ்வுடனும் இரண்டறக் கலந்துவிட்ட பண்டிகை. தீபாவளியை எப்படி பட்டாசு வெடித்துக் கொண்டாடுகிறோமோ பொங்கலை அதற்கு நேர்மாறாக அமைதியாகக் கொண்டாடுவது நம் வழக்கம். தீபாவளிக்கு ஊரில் திருவிழாக்கள், விளையாட்டுகள், கலைநிகழ்ச்சிகள் எல்லாம் இருக்காது. ஆனால், பொங்கலுக்கு ஊரே திருவிழாக் கோலத்தில் அழகு ஒளிர்ந்து காட்சியளிக்கும். போதாக்குறைக்கு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிகள் வேறு!

பொங்கல் திருநாள் இந்த முறை ஜனவரி 15-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. முதல்நாள் சனிக்கிழமை போகித் திருநாள். பொங்கலுக்கு மறுநாள் திங்கட்கிழமை 16-ம் தேதி, கணுப் பண்டிகை. பொங்கலுக்கு மறுநாள் செய்யப்படும் முக்கியமான விசேஷச் சடங்கு இது! ’கணுப்பிடி’ என்றும் சொல்லுவார்கள்.

இது முழுக்க முழுக்க பெண்களுக்கான வைபவம். பெண்கள், பொங்கல் பானையில் கட்டிவைத்த மஞ்சள் கிழங்கை எடுத்து, வயதில் முதிர்ந்த ஐந்து சுமங்கலிகளிடம் கொடுத்து, கல்லில் இழைத்து தங்கள் நெற்றியில் தீற்றி இட்டுக் கொள்வார்கள். சிலர், கணவரிடம் மஞ்சளைத் தந்து தங்களின் நெற்றியில் தீற்றச் செய்வார்கள் என்கிறார் முநீஸ்வர சாஸ்திரிகள்.

இரண்டு வாழை இலைகளை கிழக்குப் பக்கமாக நுனி இருக்கும்படி வைத்து, ஆற்றங்கரை அல்லது வீட்டு மொட்டைமாடியில் கூட கணுப்பிடி வைப்பார்கள். முன்னதாக, அந்த இடத்தில் நன்றாக அலம்பி, சுத்தம் செய்துவிட்டு, கோலமிட்டுக் கொள்ளவேண்டும். பிறகு, செம்மண் பூசி மெழுகுவது இன்னும் சிறப்புக்கு உரியது.

முதல் நாள் பொங்கல் நாளில் சாதம் கொஞ்சம் மிச்சம் வைத்திருக்கவேண்டும் என்பது மரபு. அப்படி மீதமிருக்கும் சாதத்தில் மஞ்சள் குங்குமம் கலந்து, மஞ்சள் சாதம், வெள்ளை சாதம், சிவப்பு சாதம் என்று தனித்தனியே தயார் செய்து, சர்க்கரைப் பொங்கலை பழுப்பு நிற சாதமாக எடுத்து வைத்துக் கொள்ளவேண்டும்.

ஒவ்வொரு வகை சாதத்தையும் ஏழு அல்லது ஒன்பது என ஒற்றைப்படை எண்ணிக்கையில் வரும்விதமாக, இலைகளில் மூன்று வரிசைகளாக வைத்துக்கொள்ள வேண்டும். இவற்றை பூஜை செய்து, தீபாராதனை காட்டி, நமஸ்கரிப்பார்கள் பெண்கள்! அத்துடன், வெற்றிலை-பாக்கு, பழம், தேங்காய், கரும்புத் துண்டு, மஞ்சள் அட்சதை (முனை முறியாத அரிசி கொண்டது), உதிரிப்பூக்கள் ஆகியவற்றை தட்டிலும், மற்றொரு தட்டில் ஆரத்தியும் (மஞ்சள், சுண்ணாம்பு, குங்குமம் கலந்து கரைத்த நீர்) தயாராக வைத்துக்கொள்ளவேண்டும்.

கணுப்பிடி வைக்கும் விடியற் காலை நேரத்தில் ராகு காலம், எம கண்டம் ஆகியவை இல்லாத நேரமாகப் பார்த்து பூஜை செய்யவேண்டும் என்பது முக்கியம். கணு வைக்கும் நேரம் என்பது 16-ம் தேதி அதிகாலை 5.40 மணியில் இருந்து 6.40 மணி வைக்குள் வருகிறது என்கிறார் பாஸ்கர சிவாச்சார்யர்.

அட்சதையையும் பூக்களையும் இட்டு (கணுப்பிடியாக வைத்த சாத வகைகளுக்கு), “கணுப்பிடி வைத்தேன். காக்கைப் பிடி வைத்தேன். காக்கைக்கு எல்லாம் கல்யாணமாம் கல்யாணம்’’ என்று கிராமங்களில் இன்றைக்கும் பாடுவார்கள் பெண்கள். பிறகு தேங்காய் உடைத்து, சூடம் ஏற்றி, கணுப்பிடி வைத்த இலைகளையும் சூரிய பகவானையும் வணங்கி ஆரத்தி எடுப்பார்கள். கணுப்பிடி வைத்த சாதத்தை, நாய்-பூனை முதலானவை எச்சில் பண்ணிவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

கணுப்பிடி நாளில், எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம், புளியஞ்சாதம், தயிர் சாதம் முதலான சாத வகைகளும், அவியல் அல்லது கூட்டு, பாயசம், தேங்காய்த் துவையல், அப்பளம் முதலானவையும் உணவாக சமைப்பது அந்தக் காலந்தொட்டு இன்றைக்கும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

கணுப்பிடி வைத்த பெண்கள் அன்று இரவு சாப்பிட மாட்டார்கள். இந்த கணுப்பிடி நோன்பு என்பது உடன் பிறந்தவர்களின் நன்மைக்காகவும் அவர்களின் சந்ததி செழிக்கவேண்டும் என்பதற்காகவும் புகுந்த வீட்டுக்குச் சென்ற பெண்களும் சகோதரிகளும் செய்யவேண்டும். இதை உணர்த்தும் விதமாக, ‘கார்த்திகை எண்ணெயும் கணுப்பழையதும் கூடப் பிறந்தவர்களுக்கு’ எனும் சொலவடையே உண்டு என்கிறார் பாஸ்கர சிவாச்சார்யர்.

அதாவது, கார்த்திகையில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதும், பொங்கல் அன்று சமைத்த சாதத்தை, (பழையதை) மறுநாள் கணுப்பிடியாக வைப்பதும் உடன்பிறந்தவர்களின் நலனுக்காக என்பதே இதன் விளக்கம்!

இந்த பண்டிகையையொட்டி, பிறந்த வீட்டுச் சீராகப் பெண் களுக்குப் பணமோ, துணியோ பிறந்த வீட்டில் இருந்து வரும். அந்த நாளில், வீடே குதூகலமாகிவிடும். வசதியானவர்கள், அரிசி, பருப்பு, வெல்லம், புத்தாடைகள், குந்துமணியேனும் ஏதேனும் ஒரு தங்க அணிகலன் என வழங்குவார்கள்.

வீட்டில் பிறந்த பெண், புகுந்த வீட்டில் பூஜை புனஸ்காரங்களுடன் வலம் வந்தால், அவள் சௌக்கியமாகவும் ராஜபோகமாகவும் நிம்மதியாகவும் இருக்கிறாள் என்று அர்த்தம். அப்படி புகுந்த வீட்டில் இருந்தபடி, உடன்பிறந்தானின் நலனுக்காக, விரதம் மேற்கொண்டால், சீரும் சிறப்புமாக வாழ்கிறாள் என்பதை பிறந்த வீட்டாரும் சகோதரர்களும் அக்கம்பக்கத்தாரும் உறவுக்காரர்களும் புரிந்து உணர்ந்து மகிழ்ந்து நிம்மதிப் பெருமூச்சு விட்டுக் கொள்வார்கள். அப்படி, வீட்டுக்குப் பிறந்த பெண் புகுந்த வீட்டில் சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் வாழ்ந்தால்தான், சகோதரர்களும் பிறந்த வீடும் சுபிட்சமாகவும் ஐஸ்வர்ய கடாட்சத்துடன் வாழ முடியும் என சாஸ்திரம் விவரிக்கிறது.

பொங்கல் பண்டிகைத் திருநாளை, கணுப் பண்டிகையை ஆத்மார்த்தமாகவும் முழு பக்தியுடனும் பிறந்த வீடும் புகுந்த வீடும் சிறப்புறச் செழித்து வாழவேண்டும் என வேண்டிக்கொண்டு வழிபாடு செய்கிற பெண்களைப் போற்றுவோம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in