2023 எப்படியிருக்கும்? பொதுப்பலன்கள்

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
2023 எப்படியிருக்கும்? பொதுப்பலன்கள்

இறைவன் அருளாலும் பரம சைதன்யமான கிருபையாலும் புத்தொளி தரும் 2023 வருஷம் - 01 ஜனவரி அன்றைய தினம் பிறக்கிறது. இந்தப் புத்தாண்டில் நம்முடைய வாழ்வில் மாற்றம் ஏற்றமும் வருவதற்கும் - இயற்கைச் சீற்றங்கள் ஏற்படாமல் இருக்கவும், நல்ல மழை பொழியவும், அனைத்து ஜீவ ராசிகளுக்கும் நல்ல ஆரோக்கியம் ஏற்படவும், விவசாயம் செழிக்கவும் நாம் இறைவனை வணங்குவோம். இந்த ஆங்கிலப் புத்தாண்டு கேதுவின் நட்சத்திரமான அஸ்வினி நட்சத்திரத்தில் பிறக்கிறது.

நிகழும் மங்கலகரமான ஸ்வஸ்திஸ்ரீ சுபக்ருத் வருஷம் தக்ஷிணாயனம் ஹேமந்த ரிது மார்கழி மாதம் 16-ம் தேதி பின்னிரவு - 17-ம் தேதி முன்னிரவு இதற்குச் சரியான ஆங்கிலம் 01 ஜனவரி 2023 அன்றைய தினம் தினசுத்தி அறிவது சனிக்கிழமை பின்னிரவு - ஞாயிற்றுக்கிழமை முன்னிரவு - சுக்லபக் ஷ தசமியும் - அஸ்வினி நட்சத்திரமும் - சிவ நாமயோகமும் - கௌலவ கரணமும் - மேஷ ராசியில் - ரிஷப நவாம்ச சந்திர அம்சத்தில் - கன்யா லக்னத்தில் - ரிஷப நவாம்சமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 43.35-க்கு - நள்ளிரவு 12.00-க்கு ஆங்கிலப் புத்தாண்டு பிறக்கிறது. திசா இருப்பு கேது திசை 03 வருஷம் 06 மாதம் 21 நாட்கள்.

புத்தாண்டின் கிரக நிலைகளைப் பார்க்கும்போது உலா வரும் நவக்கிரகங்களும் சார பலத்தின் அடிப்படையில் உலகத்திலிருக்கும் அனைத்து ஜீவராசிகளுக்கும் நல்ல பலன்கள் கிடைக்கும் வழியில் அமைந்திருக்கிறது, இந்தப் புத்தாண்டு.

புத்தாண்டு உபய நில லக்னமான கன்யா லக்னத்தில் பிறக்கிறது. லக்னாதிபதி புதன் சுக ஸ்தானத்தில் குரு வீட்டில் சஞ்சாரம் பெற்றிருக்கிறார். மேஷ ராசி அஸ்வினி நட்சத்திரத்தில் ஆண்டு பிறக்கிறது. ஆண்டின் தொடக்கத்தில் குருபகவான் ராசியைப் பார்ப்பதும் - ஐந்தாமிடத்தில் சுக்கிரன் - சனி கிரக கூட்டணி அமைந்து இருப்பதும் மிக நல்ல யோக அமைப்பாக அமைந்திருக்கிறது.

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

வருடம் பிறக்கும்போது கிரகங்களுடைய பாதசாரங்கள்

லக்னம் - ஹஸ்தம் 2ல் - சந்திரன் சாரம்

சூரியன் - பூராடம் 1ல் - சுக்கிர சாரம்

சந்திரன் - அஸ்வினி 2ல் - கேது சாரம்

செவ்வாய்(வ) - ரோகிணி 3ல் - சந்திர சாரம்

புதன்(வ) - மூலம் 3ல் - கேது சாரம்

குரு - உத்திரட்டாதி 3ல் - சுய சாரம்

சுக்கிரன் - உத்திராடம் 2ல் - சூர்ய சாரம்

சனி - திருவோணம் 4ல் - சந்திர சாரம்

ராகு - பரணி 3ல் - சுக்கிரன் சாரம்

கேது - விசாகம் 1ல் - குரு சாரம்

பொது பலன்கள்:

வெளிநாட்டின் வருவாய் அதிகரிக்கும். முதலீடுகள் அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் தொழில் வளர்ச்சி பெறும். முக்கிய பதவிகளில் இருப்பவர்கள் நாடு முன்னேற்றமடைய பாடுபடுவார்கள். உள்நாட்டில் வேலைவாய்ப்பு பெருகும். புதிய நவீன ஏவுகணைைகள் ராணுவத்தில் சேர்க்கப்படும்.

புதிய வகை விமானங்கள், போர்க் கருவிகள் ராணுவத்திற்கு பலம் சேர்க்கும். பலம் வாய்ந்த நாடுகளில் நமது நாட்டிற்கும் தனித்தன்மை ஏற்படும். மழையின் அளவு ஓரளவு இருக்கும். ஆறு, குளம், கண்மாய், அணைகள் நிரம்பும். விவசாயம் செழிக்கும். உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளில் விலை ஏறும். உணவு உற்பத்தி அதிகரிப்பதுடன் ஏற்றுமதி வளம் பெறும்.

கல்வித்துறையில் சீர்திருத்தம் ஏற்படும். கல்வியின் தரம் மேம்படும். மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரிக்கும். விளையாட்டில் நமது நாட்டைச் சார்ந்தவர்கள் சாதனைகள் பெறுவார்கள். அமெரிக்கா, ரஷ்யா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான், ஈராக், இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் பூமி அதிர்வு ஏற்பட வாய்ப்பு உண்டு. .

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in