கல்யாண வரம்; குழந்தையின் நலம்; தம்பதி ஒற்றுமை!

கல்யாண வரம்; குழந்தையின் நலம்; தம்பதி ஒற்றுமை!

வாழ்க்கையில் ஒவ்வொரு குடும்பத்திலும், வீட்டில் இருக்கும் ஆண்களுக்கோ பெண்களுக்கோ திருமணம் நடக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பும் பிரார்த்தனையும் இருக்கும். அதேபோல், குழந்தை ஆரோக்கியமாக இருக்கவேண்டும் என எதிர்பார்ப்போம். முக்கியமாக, தம்பதிக்கு இடையே கருத்து வேறுபாடோ பூசலோ இல்லாமல் ஒற்றுமையோ இருக்கவேண்டும் என்பதுதான் ஒரு இல்லத்தின் பூரண நிம்மதி; அமைதி!

வாழ்க்கையை தி.மு. என்றும் தி.பி. என்றும் அதாவது திருமணத்துக்கு முன், திருமணத்துக்குப் பின் என்று பிரித்துப் பார்க்கலாம்.! ‘நம்ம பொண்ணுக்கு இன்னும் கல்யாண வரன் தகையலையே...’, ‘கை நிறைய சம்பளம் வாங்கி என்ன புண்ணியம். என் புள்ளைக்கு கல்யாண யோகம் இன்னும் வரலையே’ என்று வருத்தப்படுகிற பெற்றோர்கள் உண்டு. ஆயிரங்காலத்துப் பயிர் என்றும் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிற காரியம் என்றும் போற்றப்படுகிற திருமண வரம் தரக்கூடிய அற்புதமான ஸ்லோகம் இது!

காமேஸ் வராய காமாய காம பாலாய காமினே நம:

காம விஹாராய காம ரூபதராய ச

மங்களே மங்களாதாரே மாங்கல்யே மங்களப்ரதே

மங்களார்த்தம் மங்களேசிமாங்கல்யம் தேஹிமே சதா:

- இந்த ஸ்லோகத்தை செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் சொல்லி வந்து சிவ பார்வதியை மனதார வேண்டி பிரார்த்தனை செய்து வந்தால்,இல்லத்தில் மங்கல காரியங்கள் தடையின்றி நிகழும். நல்ல மணவாழ்க்கை அமையும்!

பாலாரிஷ்ட நோய்!

உலகின் மிகப்பெரிய செல்வம், பிள்ளைகள்தான்! குழந்தைச் செல்வம் இல்லாத வீட்டில், வேறு எத்தனைச் செல்வங்கள் இருந்தாலும் பயனில்லை. ‘எவ்வளவு சொத்துகள் இருந்து என்ன... அள்ளியெடுத்துக் கொஞ்சி விளையாடக் குழந்தை இல்லை’ என்பதே பலரின் ஏக்கமும் துக்கமும்!

அந்தக் குழந்தைக்கு சின்னச் சின்ன நோய்கள் வந்து சரியாகச் சாப்பிடாமல் இருந்தாலோ, சாப்பிட்டதையெல்லாம் வாந்தி எடுத்தாலோ, சரிவரத் தூங்காமல் எப்போதும் எதற்காகவோ அழுதுகொண்டே இருந்தாலோ... அவற்றை பாலாரிஷ்ட நோய் என்பார்கள். இவற்றில் இருந்து குழந்தைகளை மீட்டெடுக்கவும் குழந்தைகள் சத்தாகவும் ஆரோக்கியத்துடனும் வளரவும் இந்த ஸ்லோகத்தைச் சொல்லி பிரார்த்திக்கச் சொல்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

பால க்ரஹ விநாச தர்மநேதா கிருபாகர:

உக்ரக்ருத்யோக்ரா வேகச உக்ர நேத்ர: சதக்ரது:

- இந்த ஸ்லோகத்தை, இந்தக் கிழமை என்றில்லாமல், அம்பிகையை மனதார நினைத்து, தினமும் 11 முறை சொல்லி வேண்டிக்கொள்ளலாம். முக்கியமான நாட்களில், குழந்தைகளின் நட்சத்திர நாளில், பால் பாயச நைவேத்தியத்தை அம்பாளுக்கு செய்து, அக்கம்பக்க குழந்தைகளுக்கு வழங்கி வந்தால், குழந்தைகளுக்கு ஏற்படுகிற சின்னச்சின்ன நோய்கள் விலகும். குழந்தைகள் ஆரோக்கியமாக வளருவார்கள்.

தம்பதி ஒற்றுமைக்கான ஸ்லோகம்!

தேவியைப் போற்றிச் சொல்கிற இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லுங்கள். செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தவறாமல் சொல்லுங்கள். சகல சௌபாக்கியங்களும் பெறலாம்!

சர்வ மங்கள மாங்கல்யே சிவே சர்வார்த்த ஸாதி கே

சரண்யே த்ரயம்பகே தேவி நாராயணி நமோஸ்துதே

குடும்பத்தில் இதுவரை இருந்த குழப்பங்கள் நீங்கும். தேவையில்லாமல் நிகழ்கிற கருத்துவேற்றுமைகள் அகலும். பரஸ்பரம் இருவரும் புரிந்து கொள்வார்கள். விட்டுக்கொடுப்பார்கள். அனுசரித்துப் போவார்கள். கணவன் மனைவி ஒற்றுமை மேலோங்கும்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in