தடைகளை தகர்ப்பாள் விஷ்ணு துர்கை!

பேராவூரணி - பாலதளி கோயில் துர்கையின் மகிமை
தடைகளை தகர்ப்பாள் விஷ்ணு துர்கை!

பாலதளியில் உள்ள விஷ்ணு துர்கையை தரிசித்து வேண்டிக்கொண்டால் நம் தரித்திர நிலையை நீக்கியருளுவாள். கல்யாணத் தடைகளைத் தகர்த்து அருளுவாள் என்பது ஐதீகம்.

பொதுவாகவே சிவாலயங்களில் உள்ள துர்கையே, பல கோயில்களில் இருப்பாள். தனிக்கோயிலாகவும் இருந்துகொண்டு காட்சி தருவாள். சிவன் கோயிலில் உள்ள துர்கை சிவதுர்கை என்றும் விஷ்ணு கோயிலில் உள்ள துர்கை விஷ்ணு துர்கை என்றும் சொல்வார்கள். விஷ்ணு துர்கை தனிக்கோயிலில் இருப்பது அரிது. அப்படியான விஷ்ணு துர்கை கோயில், பேராவூரணி அருகே பாலதளியில் அமைந்திருக்கிறது. சக்தியும் சாந்நித்தியமும் கொண்ட துர்கை என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.

பாலமரங்கள் அடர்ந்த வனமாக அந்தப் பகுதி இருந்தது. வனத்துக்கு அருகில் இருந்த கிராமத்து மக்கள், பசுக்களை மேய்ச்சலுக்காக வனத்துக்கு ஓட்டி வருவது வழக்கம். மேய்ச்சலுக்குச் சென்ற பசுக்கள், திரும்பி வரும்போது மடியில் பாலின்றி இருந்தன. மக்கள் அனைவரும் குழம்பித் தவித்தார்கள். மாடுகளை ஓட்டிச் செல்பவர்கள், பாலைக் கறந்து விற்றுவிடுகிறார்களோ என்று சந்தேகப்பட்டார்கள்.

ஒருநாள், மேய்ச்சல்காரர்களைப் பின் தொடர்ந்தார்கள். மாடுகள் மேடான ஒரு பகுதிக்குச் சென்றன. அங்கே நின்றுகொண்டு, தாமாகவே பாலைச் சுரந்து பொழிந்தன. அதிர்ந்து போன மக்கள், ஓடிவந்து பார்த்தார்கள். அந்த மேட்டுப் பகுதியைத் தோண்டினார்கள். அங்கே அழகிய கற்சிலை வெளிப்பட்டது. இன்னும் தோண்டிப்பார்த்தார்கள். சயனித்த நிலையில் துர்கையும் பீடமும் கிடைத்தன.

பாலதளி துர்கை
பாலதளி துர்கை

மேலேயும் துர்கை. பீடத்துக்குக் கீழேயும் சயன நிலையில் துர்கை. அப்போது, “நான் இந்தப் பகுதியை வளமாக்குவதற்காக வந்திருக்கிறேன். என்னைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வாருங்கள். இந்த கிராமம் எல்லா வளமும் பெற்றுக் கொழிக்கும்” என அசரீரி கேட்டது. அந்த வாக்குப்படியே அந்த இடத்தில் சிறியதொரு கோயிலைக் கட்டி வழிபடத் தொடங்கினார்கள் மக்கள் என்கிறது ஸ்தல வரலாறு.

பாலதளி கிராமத்தில் சிறியதொரு ஆலயத்தில், சங்கு சக்கரத்துடன் விஷ்ணு துர்கையாக தரிசனம் தந்து தன்னை நாடி வருவோரையெல்லாம் காத்தருளுகிறாள் துர்காதேவி. இங்கே செவ்வாயும் வெள்ளியும் வந்து மனதார வேண்டிக்கொண்டு, பாலபிஷேகம் செய்து, எலுமிச்சை மாலை சார்த்தி வேண்டிக் கொண்டால், மாங்கல்ய பலம் கிடைக்கப் பெறலாம். கல்யாண மாலை தோள் சேரும். குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். பிரிந்த தம்பதி ஒன்று சேருவார்கள் என்பது ஐதீகம்.

துர்கைக்கு இங்கே சந்தனக்காப்பு செய்து வேண்டிக்கொண்டால், கடன் தொல்லையில் இருந்தும் வீட்டின் தரித்திர நிலையில் இருந்தும் நம்மை மீட்டெடுப்பாள் என்கிறார்கள் பக்தர்கள்.

செவ்வாய்க்கிழமை ராகுகாலம், வெள்ளிக்கிழமை ராகுகாலம், ஞாயிற்றுக்கிழமை ராகுகாலம் முதலான வேளைகளில் வந்து விஷ்ணு துர்கையை தரிசிப்பதும் பிரார்த்தனை செய்வதும் மகத்தான பலன்களைத் தந்தருளும் என்கிறார்கள் ஊர்மக்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in