வெள்ளிக்கிழமையில் கார்த்திகை விரதம்; வேலவன் இருக்க பயமேன்!

வெள்ளிக்கிழமையில் கார்த்திகை விரதம்; வேலவன் இருக்க பயமேன்!

இன்று (ஆகஸ்ட் 19) கார்த்திகை நன்னாள். வெள்ளிக்கிழமையும் கார்த்திகை விரதமும் இணைந்த நாளில், முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்யுங்கள். இல்லத்தில் எலுமிச்சை சாதம் நைவேத்தியம் செய்து அக்கம்பத்தாருக்கு வழங்குங்கள். நமக்கு உண்டான எதிர்ப்புகளையெல்லாம் தவிடுபொடியாக்குவான் தணிகைவேலன்.

மொத்தம் 27 நட்சத்திரங்கள் இருக்கின்றன என்பதை அறிவோம். ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் நட்சத்திர நாளுக்கும் சிறப்பும் மகத்துவமும் இருக்கின்றன. சிவனாருக்கு திருவாதிரை நட்சத்திரம் உகந்தது என்பது போல, பெருமாளுக்கு திருவோண நட்சத்திரம் உகந்தது என்பது போல, முருகப்பெருமானுக்கு உரிய உத்திரம், விசாகம், பூசம் முதலான பல நட்சத்திரங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. இருந்தாலும் அவற்றில் மிக முக்கியமான நட்சத்திரமாக, கார்த்திகை நட்சத்திரம் போற்றப்படுகிறது. கார்த்திகைப் பெண்கள் வளர்த்த கார்த்திகேயனை வணங்கி ஆராதிக்க, கார்த்திகை நட்சத்திர நாள் மிகவும் உகந்த நாள் என்று சொல்லி சிலாகிக்கிறார்கள் முருக பக்தர்கள்.

மாதந்தோறும் வருகிற கார்த்திகை நட்சத்திர நாளில், விரதமிருந்து முருகப்பெருமானை தரிசித்து விரதத்தை நிறைவு செய்பவர்கள் ஏராளம். விரதம் மேற்கொள்ளாமல், முருகக் கடவுளை கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்து, செவ்வரளி மாலை சார்த்தி பிரார்த்தனையும் செய்யலாம்.

கந்த சஷ்டி கவசம், ஸ்கந்த குரு கவசம் பாராயணம் செய்து, பாலகுமாரனை வேண்டுவது இன்னும் வாழ்வில் நல்ல ஏற்றங்களையும் மாற்றங்களையும் தந்தருளும் என்று கெளமார வழிபாடு எனப்படும் முருக வழிபாடு செய்யும் பக்தர்கள் சொல்கிறார்கள்.

முருகப்பெருமான் தனிக்கோயிலில் இருந்தபடியும் சிவாலயங்களில் இருந்தபடியும் அம்மன் கோயிலில் வீற்றிருந்தபடியுமாக காட்சி தந்து அருளுகிறார். வெள்ளிக்கிழமையும் கார்த்திகை நட்சத்திர நாளும் இணைந்த இந்த அற்புத நாளில், செந்தில் வடிவேலனை வணங்குவோம். அபிஷேகத்துக்கு நம்மால் முடிந்த பொருட்களை வழங்கி ஆராதிப்போம். ஸ்ரீவள்ளி தெய்வானை சமேதராக இருக்கும் முருகப்பெருமானை தரிசித்துப் பிரார்த்திப்போம். நம் வாழ்வில் இருக்கும் தடைகளையும் எதிர்ப்புகளையும் தகர்த்து அருளுவார் ஸ்ரீபாலமுருகன்.

கார்த்திகை விரத நன்னாளில் கார்த்திகேயனைத் தொழுவோம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in