வெள்ளி சஷ்டியில் வேலவன் வழிபாடு!

வெள்ளி சஷ்டியில் வேலவன் வழிபாடு!

வெள்ளிக்கிழமையும் சஷ்டியும் இணைந்த நாளில், வெற்றிவேலனை வழிபட்டால், நம் காரியங்கள் அனைத்திலும் வெற்றியைத் தந்தருளுவான் என்கின்றனர் முருக பக்தர்கள்.

ஆறுபடை நாயகன் என்று முருகக் கடவுளைச் சொன்னாலும் ஆறுபடைகளாக கோயில்கள் இருந்தாலும், முருகப்பெருமானுக்கு ஏராளமான ஆலயங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு ஊரிலும் முருகப்பெருமான் குடிக்கொண்டிருக்கும் ஆலயங்கள் பிரசித்திப் பெற்றுத் திகழ்கின்றன.

சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ள கபாலீஸ்வரர் கோயிலில் தனிக்கோயிலாகவே எழுந்தருளியுள்ளார் முருகப்பெருமான். அதேபோல் சைதாபேட்டையில் முருகக் கடவுளுக்கென்றே கோயில் இருக்கிறது. சென்னை பாரிமுனைப் பகுதியில் கந்தகோட்டம் முத்துக்குமார சுவாமி திருக்கோயில் பிரசித்தி பெற்ற திருத்தலமாக அமைந்துள்ளது.

காஞ்சியில் குமரக்கோட்டமும் குரோம்பேட்டை அருகில் குன்றத்தூர் முருகன் கோயிலும் குமரன்குன்றம் முருகன் கோயிலும் சிறப்பான ஆலயமாகத் திகழ்கின்றன. திருச்சி ரயில் நிலையத்துக்கு அருகில் உள்ள வழிவிடும் வேல்முருகன் கோயிலும் தஞ்சாவூர் பூக்காரத் தெருவில் அமைந்துள்ள முருகன் கோயிலும் பிரசித்திப் பெற்றுத் திகழ்கின்றன.

இப்படி தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோயில்களில், சஷ்டி திதியில் சிறப்பு வழிபாடுகளும் ஆராதனைகளும் அமர்க்களப்படும். சஷ்டி திதி நாளில், விரதம் மேற்கொள்ளும் முருக பக்தர்கள் ஏராளம். காலையிலும் மாலையிலும் முருகப்பெருமான் கோயிலுக்குச் சென்று அல்லது முருகன் குடிகொண்டிருக்கும் சந்நிதிக்குச் சென்று இரண்டுவேளையும் தரிசிப்பார்கள் பக்தர்கள்.

வெள்ளிக்கிழமையும் சஷ்டியும் இணைந்து வருவது ரொம்பவே விசேஷம். இந்தநாளில், முருக வழிபாடு செய்வதும் கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்வதும் எதிர்ப்புகளையெல்லாம் தவிடுபொடியாக்கும். தீய சக்திகளை நம்மிடமிருந்து விரட்டியடிப்பார் கந்தகுமாரன் என்பது ஐதீகம்.

இன்று 30-ம் தேதி வெள்ளிக்கிழமை சஷ்டி திதி. இந்த நன்னாளில், அருகில் உள்ள முருகன் கோயிலுக்குச் சென்று, செவ்வரளி அல்லது செந்நிற மலர்கள் சார்த்தி நெய்தீபமேற்றி வணங்கி வழிபடுவோம். வீட்டில் எலுமிச்சை சாதம் நைவேத்தியம் செய்து அக்கம்பக்கத்தாருக்கு வழங்குவது இன்னும் பல பலன்களையும் பலத்தையும் நமக்கு அள்ளித்தந்தருளும் என்பது பக்தர்களின் நம்பிக்கை!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in