நாளை வாஸ்து நாள்; உரிய நேரத்தில் வழிபட்டால் வளம் பெருகும்!


நாளை வாஸ்து நாள்; உரிய நேரத்தில் வழிபட்டால் வளம் பெருகும்!

சுக்கிர வாரம் என்று சொல்லப்படும் வெள்ளிக்கிழமையில், வாஸ்து நாளும் இணைந்து வருவது விசேஷம் என்கிறார்கள் வாஸ்து நிபுணர்கள். நாளை வெள்ளிக்கிழமை அக்டோபர் 28-ம் தேதி வாஸ்து நாள்.

மனை என்று சொல்லப்படும் பூமியானது எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், அந்த மனையில் கட்டிடம் கட்டும் போது, அது வீடாகவோ கடையாகவோ அலுவலமாகவோ மாறிவிடுகிறது. மனையில் வாஸ்து பார்ப்பதை விட, கட்டிடமாக கட்டும் தருணத்தில் வாஸ்து பார்த்து, அதன்படி நம் இல்லத்தையோ கடையையோ அமைப்பது நமக்கு நற்பலன்களை வழங்கிக் கொண்டே இருக்கும் என்பது ஐதீகம்.

ஒரு வீட்டுக்கு வாஸ்து பகவானின் அருள் ரொம்பவே முக்கியம். ஒரு வீட்டின் வாசற்படி வாஸ்துப்படி அமைக்கவேண்டும். அதேபோல் அடிக்கடி புழங்குகிற சமையலறை, நாம் ‘அக்கடா’வென அமரும் வரவேற்பு அறை, எத்தனையோ கவலைகள் இருந்தாலும் அதையெல்லாம் சற்றே மறந்து தூங்குவதற்கான படுக்கையறை உள்ளிட்டவை வாஸ்துமுறைப்படி சரியான திசையில் இருக்க வேண்டும். அதேபோல் பணம், நகை முதலான ஆபரணங்கள், சொத்து, சேமிப்பு முதலான பத்திரங்கள் இவற்றை வைத்திருக்கிற பீரோ முதலான பொருட்களையும் சரியான இடத்தில் வாஸ்து முறைப்படி வைக்கவேண்டும் என்கிறது மனையடி சாஸ்திரம்.

வீடு கட்டும்போதே வாஸ்துப்படி அமைக்கவேண்டும். அதேபோல், வீட்டுக்கு குடிவந்த பிறகு, நம் குழந்தைகள் படிக்கும் புத்தகங்கள், நாம் உட்கொள்ளும் மருந்து மாத்திரைகள் முதலானவற்றை உரிய இடங்களில் வைத்தால்தான் குழந்தைகள் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவார்கள் என்றும் நோய்நொடியில்லாமல் ஆரோக்கியத்துடனும் வாழலாம் என்றும் சொல்கிறார் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்.

அதேபோல, வாஸ்து பகவான் கண் விழிக்கும் நேரத்தையே வாஸ்து பகவானுக்கு உரிய நாள் என்று சொல்கிறோம். அப்போது அவர் உணவு எடுத்துக் கொண்டு, தாம்பூலம் தரிப்பார். அதை வாஸ்து நேரம் என்கிறோம். அந்த நேரத்தில், வாஸ்து பகவானை நினைத்து நாம் என்ன வேண்டுதல் வைக்கிறோமோ அவற்றை நிறைவேற்றித் தருவார் என்பது ஐதீகம்.

வாஸ்து நாளானது எந்தக் கிழமையில் வந்தாலும் அவை சிறப்பான நாளாகப் போற்றப்படுகிறது. குறிப்பாக, சுக்கிர வாரம் எனப்படும் வெள்ளிக்கிழமையில் வாஸ்து நாள் அமைவது மிகவும் உன்னதமான நாள் என்கிறார்கள் ஜோதிட வல்லுநர்கள்.

அதன்படி நாளை காலை 7.44 முதல் 8.20 மணி வரை வாஸ்து நேரமாக அனுஷ்டிக்கப்படுகிறது. எனவே, இந்த நாளில், வீட்டை தூபாராதனை செய்து மணக்க மணக்க இல்லத்தை வைத்திருப்பது அவசியம். ஊதுபத்தி ஏற்றி, மகாலக்ஷ்மி படத்துக்கும் குபேரர் படத்துக்கும் நம் குலதெய்வத்துக்கும் முன்னோர்களுக்கும் பூக்களால் அலங்கரித்து தீபமேற்றி வழிபடுங்கள்.

இந்த நேரத்தில், பூஜையறையில் அமர்ந்து, கண்களை மூடியபடி, வாஸ்து புருஷனை மனதார வேண்டிக்கொள்வோம். வாடகை வீட்டில் இருப்பவர்கள், சொந்த வீட்டில் இருப்பவர்கள் என எவர் வேண்டுமானாலும் வாஸ்து வழிபாட்டை மேற்கொள்ளலாம். வாஸ்து நாளில், வாஸ்து நேரத்தில் வழிபட்டால், வாஸ்து பகவானின் அருளை முழுமையாகப் பெறலாம். வாஸ்து முதலான தோஷங்கள் விலகும். வீடு மனை சொந்தமாகும் யோகத்தைத் தருவார் வாஸ்து பகவான். அதேபோல் இல்லத்தில் தம்பதியிடையே ஒற்றுமையை மேம்படுத்தி, இல்லத்திலும் உள்ளத்திலும் நிம்மதியை அருளச் செய்வார் வாஸ்து பகவான்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in