இன்று வசந்த பஞ்சமி: ரதி - மன்மத வழிபாடு; மகாலக்ஷ்மி ஆராதனை!

இன்று வசந்த பஞ்சமி: ரதி - மன்மத வழிபாடு; மகாலக்ஷ்மி ஆராதனை!

இன்று வியாழக்கிழமை சுக்ல பஞ்சமி. வசந்த பஞ்சமி என்றும் சொல்லப்படும் இந்த நாளில் புதுமணத் தம்பதிக்கு புத்தாடை உள்ளிட்ட மங்கலப் பொருட்களைப் பரிசாக வழங்கி வாழ்த்துவோம். அதேபோல், மகாலஷ்மிக்கு வெண்மை நிற மலர்கள் சூட்டி வழிபட்டால், சகல ஐஸ்வர்யங்களும் பெருகும்.

அமாவாசையை அடுத்த ஐந்தாம் நாள் பஞ்சமி திதி வரும். அதேபோல் பெளர்ணமியை அடுத்த ஐந்தாம் நாளும் பஞ்சமி திதி வரும். அமாவாசைக்கு அடுத்து வருவது வளர்பிறை பஞ்சமி. இதை சுக்ல பஞ்சமி என்பார்கள். அதேபோல், பெளர்ணமிக்கு அடுத்து வருவது தேய்பிறை. இதை, கிருஷ்ண பட்ச பஞ்சமி என்பார்கள்.

தை மாத அமாவாசைக்குப் பிறகு வருகிற சுக்லபட்ச பஞ்சமி திதி என்பது விசேஷமானது. ரதியையும் மன்மதனையும் வணங்கக் கூடிய நாளாகப் போற்றப்படுகிறது. இந்த நாளில், ரதியையும் மன்மதனையும் ஆராதிக்கும் வகையில், புதிதாகத் திருமணமான தம்பதிக்கு புத்தாடைகள், வளையல், மஞ்சள் சரடு, வளையல், ஜாக்கெட் பிட்டுகள், பூக்கள், பழங்கள், இனிப்பு வகைகள் முதலானவற்றை வழங்கி அவர்களை ஆசீர்வதித்து வாழ்த்துகளைச் சொல்லவேண்டும். புதுமணத் தம்பதியர், நெடுங்காலம் ஒற்றுமையாக வாழ்ந்த வயது முதிர்ந்த தம்பதிக்கு பாதபூஜை செய்து நமஸ்கரிக்க வேண்டும்.

இதனால், ரதியும் மன்மதனும் குளிர்ந்து போவார்கள். அந்தத் தம்பதிக்கு அருளுவார்கள். அவர்களின் அருளாசியால், புதுமணத் தம்பதிகள் கருத்து வேற்றுமைகள் இல்லாமல், மனம் ஒருமித்து வாழ்வார்கள். இல்லறத்தில் மேன்மை அடைவார்கள் என்கிறது தர்மசாஸ்திரம்.

அதேபோல், புதிதாகத் திருமணமான தம்பதியர், இந்தநாளில், தம்பதி சமேதராக அருகில் உள்ள கோயிலுக்குச் சென்று வழிபடுவதும், கோயில் கொடிமரத்துக்கு அருகே இருவரும் ஒருசேர நமஸ்கரித்து வேண்டிக்கொள்வதும் எண்ணற்ற பலன்களைக் கொடுக்கும். வீட்டில் இருக்கும் முதியவர்கள், அக்கம்பக்கத்தில் உள்ள வயதில் மூத்தவர்கள் முதலானோரிடம் நமஸ்கரித்து ஆசி பெறுவது, குடும்பத்தில் ஒற்றுமையையும் பலத்தையும் அதிகப்படுத்தும். வம்சம் தழைக்கும் வகையில் சந்ததியினர் பிறப்பார்கள் என விவரிக்கிறது தர்ம சாஸ்திரம்.

மேலும், சுக்ல பஞ்சமி நாளில், வாராஹி தேவியை வழிபடுவோம். வாராஹி, நம் கண்ணுக்குத் தெரியாமல் இருந்தபடி நமக்குத் தடைக்கல்லாகவும் எதிர்ப்பாகவும் இருக்கிற துர்சக்திகளிடம் இருந்து நம்மைக் காத்தருளுவாள்.

தை மாத சுக்ல பட்ச பஞ்சமியான வசந்த பஞ்சமி நன்னாளில், மகாலக்ஷ்மி வழிபாடு மிக மிக விசேஷம். இந்தநாளில், மகாலஷ்மி தாயாரை வெண்மை நிற மலர்களால் அலங்கரித்து, பாயசம் முதலான ஏதேனும் ஒன்றை நைவேத்தியம் செய்து வணங்கினால், இல்லத்தில் சகல ஐஸ்வர்யங்களும் கிடைத்து இனிதே வாழச் செய்வாள் மகாலஷ்மி தாயார்!

சுக்ல பஞ்சமி நாளில், கனகதாரா ஸ்தோத்திரம் பாராயணம் செய்வதும் ஸ்ரீமகாலஷ்மியின் மூலமந்திரம் பாராயணம் செய்வதும் இல்லத்தில் இதுவரையிலான தரித்திர நிலையைப் போக்கி சுபிட்சத்தைத் தந்தருளும்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in