வரலட்சுமி பூஜையை நீங்கள் செய்ய விருப்பமா? - பெண்களுக்கு சில வழிமுறைகள்

வரலட்சுமி பூஜை
வரலட்சுமி பூஜை

ஆவணி மாத பெளர்ணமிக்கு முன்னதாக வரும் வெள்ளிக்கிழமையிலும் சிலசமயம் ஆடி மாதத்திலுமாக வருவது வரலட்சுமி பூஜை. வரங்கள் தந்தருளும் வரலட்சுமி விரதத்தை யாரெல்லாம் மேற்கொள்ளவேண்டும் என்கிற குழப்பமும் நிறைய பேருக்கு இருக்கிறது.

பெண்ணானவள், கல்யாணமாகி, தன் கணவர் வீட்டுக்கு வருகிறார். அங்கே, கணவர் வீட்டில், வரலட்சுமி பூஜை செய்கிற வழக்கம் உண்டு. இதுவரை பிறந்தவீட்டில் செய்யாத பெண், புகுந்த வீட்டில் பூஜையைச் செய்யலாமா? தாராளமாகச் செய்யலாம்.

முதல்கட்டமாக, அதாவது கல்யாணமான வருடத்திலேயே, அம்மன் திருமுகம் கொண்ட கலசத்தை சீர்வரிசைகளில் பெற்றுக்கொள்ள வேண்டும். அந்த அம்மன் கலசத்தைக் கொண்டு, மாமியார் மற்றும் வீட்டில் உள்ள பெரியவர்களிடம் சேர்ப்பித்து, நமஸ்கரித்து ஸ்ரீவரலட்சுமி பூஜையை, நோன்பை, விரதத்தைத் துவக்கவேண்டும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

‘வீட்டில் பிறப்போ அல்லது இறப்போ என தீட்டு வந்துவிட்டதே. என்ன செய்வது?’ என்று சிலர் கேட்கலாம். பூஜை நாளில் தீட்டு முதலானவை வந்தால் என்ன செய்வது? அந்த வருடம் பூஜை செய்யக்கூடாது. அடுத்த வருடம் ஆடி மாதத்தில் வரலட்சுமி பூஜை வந்தால் ஒரு வருடம் பூர்த்தியாகி இருக்காது என்பதால் அப்போதும் பூஜை செய்யக்கூடாது. ஆவணி மாதத்தில் வந்தால், அப்போது தாராளமாக பூஜை மேற்கொள்ளலாம் என விவரிக்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். .

நிறையப் பெண்களுக்கு இன்னுமொரு குழப்பமும் உண்டு. கலசம் ஒரேயொரு கலசம்தான். அந்தக் கலசத்தைக் கொண்டு, பலரும் சேர்ந்து வரலட்சுமி விரத பூஜையைச் செய்யலாமா என்று சந்தேகம் வரலாம். இது எல்லோருக்கும் இருக்கிற குழப்பம்தான். சுமங்கலிகள் ஒரே இடத்தில் கூடுவதே மிகப்பெரிய நல்லதொரு அதிர்வை அங்கே உண்டுபண்ணும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். ஆகவே சுமங்கலிகள் சிலர், ஒன்றாகச் சேர்ந்து, ஒரேவீட்டில், ஒரே இடத்தில் பூஜை செய்வது தனியே செய்வதைக் காட்டிலும் சிறந்தது; உன்னதமானது; மகத்துவம் மிக்கது!

வரலட்சுமி பூஜை
வரலட்சுமி பூஜை

ஆனால் அந்த பூஜையில், ஒரு குழுவாக எல்லோரும் உட்கார்ந்திருந்தாலும் அனைவருமே தனித்தனியே சங்கல்பம் செய்துகொள்ளவேண்டும் என்கிறது சாஸ்திரம். அதேபோல், அர்ச்சனையாகட்டும், நைவேத்தியமாகட்டும் எல்லாமே தனித்தனியே வைத்துக் கொண்டு, ஒவ்வொருவரும் வரலட்சுமி பூஜையைச் செய்யவேண்டும்.

முக்கியமாக, ஒவ்வொருவருக்கும் ஒரு கலசம். அதாவது தனித்தனியே கலசம் வைத்து, அம்பாள் வரைந்து பூஜிக்கவேண்டும். ஒரே கலசத்தில் ஒரேயொரு பூஜை என்றும் ஒரேயொருவர் மட்டுமே பூஜை செய்தார் என்பதாக மட்டுமே பார்க்கப்படும். விளக்குப் பூஜையில், எப்படி ஒவ்வொருவரும் விளக்கேற்றி பூஜை செய்கிறார்களோ, அதேபோல் ஒவ்வொருவரும் தனித் தனியே கலசம் அமைத்து, அம்பாளை ஆவாஹனம் செய்து எல்லோரும் ஓரிடத்தில் பூஜை செய்யலாம்.

அடுத்து, கையில் கயிறுகட்டிக் கொள்வதிலும் குழப்பம் இருக்கிறது நிறையப்பேருக்கு. வலது கையில் கயிறு எனப்படும் ரக் ஷையைக் கட்டிக்கொள்ளவேண்டுமா அல்லது இடது கையில் கட்டிக் கொள்ளவேண்டுமா என்று கைபிசைந்து தவிப்பார்கள் பெண்கள். பொதுவாக, ஆண்கள் வலது கையில் ரக் ஷை கட்டிக்கொள்ளவேண்டும். பெண்கள் இடது கையில் கட்டிக் கொள்ளவேண்டும் என்பதே வழக்கம். ஆனாலும் வரலட்சுமி பூஜை மற்றும் விரதத்தில் இருக்கிற பெண்கள், மட்டும் தங்களின் வலது கையில் ரக் ஷையை கட்டிக்கொள்ளவேண்டும் என்கிறது சாஸ்திரம்.

முன்னதாக, வரலட்சுமி பூஜை செய்யும்போது, ஒரு மஞ்சள் கயிற்றில் ஒன்பது முடிச்சுகள் போட்டு, நடுநடுவே உதிரிப் பூக்களை வைத்துக் கட்டி, அந்த சரடை, அம்பிகையின் அருகில் பூஜையில் வைத்துவிடுங்கள். பூஜை நிறைவடைந்ததும் அந்த ரக் ஷையானது, மகாலட்சுமியின் பிரசாதமாக மாறிவிடுகிறது. அந்த ரக் ஷையை, கணவரிடம் கொடுத்து, கையில் கட்டிக் கொள்ளவேண்டும். கணவர் அருகில் இல்லை. வெளியூர் அல்லது வெளிநாட்டில் இருக்கிறார் என்றால், தன்னைவிட வயதில் மூத்த சுமங்கலியிடம் கொடுத்து, கட்டிக் கொள்வதே உத்தமம். கன்னிப்பெண்களுக்கு, அம்மாவோ பாட்டியோ அல்லது வயதில் பெரியவர்களோ ரக் ஷை கட்டிவிடலாம்.

முக்கியமான விஷயம்... கர்ப்பிணியாக இருக்கும் போது, இந்த வரலட்சுமி விரதம் மேற்கொள்ளலாமா என்கிற சந்தேகமும் பலருக்கு இருக்கிறது. சுமங்கலிகளும் கர்ப்பிணிகளும் தாராளமாக வரலட்சுமி பூஜையில் விரதம் அனுஷ்டிக்கலாம். பூஜை செய்யலாம். ஒருவேளை, பிரசவத்துக்காக பிறந்தவீட்டுக்கு வந்திருக்கும்போது வரலட்சுமி பூஜை வந்தால், பிறந்த வீட்டில் தரப்பட்ட அம்மன் திருமுகத்தையும் கலசத்தையும் புகுந்த வீட்டில் இருந்து எடுத்து வந்து, பூஜை செய்து வழிபடலாம். சுகப்பிரசவம் நிகழும் என்பது மட்டும் அல்ல. அந்தக் குழந்தை தெய்வகடாட்சம் பொருந்தியதாகவும் பிறந்து வளரும் என்கிறது சாஸ்திரம்.

வரலட்சுமி பூஜை நன்னாளில், வீடு முழுக்க அம்பாளின் சாந்நித்தியம் பெருகியிருக்கும். மகாலக்ஷ்மியின் வாசம் நிறைந்திருக்கும். வெற்றிலைப் பாக்குடன், உங்களால் முடிந்த மங்கலப் பொருட்களை சுமங்கலிகளுக்கு வழங்குங்கள். கணவரின் ஆயுள் பெருகும்; ஆரோக்கியம் அதிகரிக்கும்; தனம் தானியம் இல்லத்திலும் மகிழ்ச்சியும் அமைதியும் உள்ளத்திலும் நிறைந்திருக்கும்.

நாளை ஆகஸ்ட் 5-ம் தேதி வரலட்சுமி பூஜை.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in