வைகுண்ட ஏகாதசி; முக்கோடி பிரதட்சணம்; விருட்சிக ஏகாதசி!

வைகுண்ட ஏகாதசி; முக்கோடி பிரதட்சணம்; விருட்சிக ஏகாதசி!

மார்கழி மாதம் வரும் சுக்ல பட்ச (வளர்பிறை) ஏகாதசி திருநாளை, ‘வைகுண்ட ஏகாதசி’ என்று போற்றுவார்கள். வழிபடுவார்கள். பெருமாளை ஸேவிப்பார்கள்.

வைஷ்ணவத் திருத்தலங்களில், பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறப்பு வைபவம் சிறப்பாக நடைபெறும். சில திருத்தலங்களில் இந்த வைபவம், வித்தியாசமான முறையில் கொண்டாடப்படுகிறது.

புதுக்கோட்டையில் இருந்து சுமார் 17 கி.மீ. தொலைவில் உள்ள தலம் திருமயம். அந்தக் காலத்தில் திருமெய்யம் என்று அழைக்கப்பட்ட இந்தத் தலத்தில், ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதரை விட பெரிய திருமேனியில் பள்ளிக்கொண்டிருக்கிறார் பெருமாள்.

சந்நிதி வாயிலில் இருந்து பெருமாளின் முழு உருவையும் தரிசிக்க முடியாது. எனவே, இவரை தரிசிக்க வசதியாக இரண்டு சாளரங்கள் உண்டு. ஒரு சாளரம் வழியே இவரின் திருமுகத்தையும் மற்றொன்றின் வழியே திருவடியையும் தரிசிக்கலாம். பெருமாளின் திருப்பாத தரிசனம், மிகுந்த புண்ணியம் தரும் என்பதை புராணமே விவரித்திருக்கிறது.

வைணவக் கோயில்களில் ஏகாதசி திதியைக் கணக்கில் கொண்டு, சொர்க்க வாசல் திறக்கப்படுவது வழக்கம். ஆனால், திருமயத்தில், ஏகாதசி திதி நாளில், பரணி நட்சத்திர திருநாளன்று சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. சில நேரம், ஏகாதசி திதியுடன் பரணி நட்சத்திரம் சேர்ந்து வந்தால், அன்றே பரமபத வாசல் திறக்கப்படும். பரணி நட்சத்திரத்துக்காகக் காத்திருந்து, இரண்டொரு நாட்கள் கழித்தும் சொர்க்க வாசல் திறக்கப்படுவது உண்டு.

திருமலை திருப்பதியில் சொர்க்கவாசல் கிடையாது. பதிலாக வைகுண்ட ஏகாதசி திருநாளை முன்னிட்டு, ‘முக்கோடி பிரதட்சணம்’ என்ற பிராகார திறப்பு விழா வைபவம் நடைபெறும்.

திருப்பதி திருக்கோயிலில் சம்பங்கி பிராகாரம் (முதல் பிராகாரம்) மற்றும் விமான பிரதட்சணம் (2-ம் பிராகாரம்) ஆகியவை தவிர ‘முக்கோடி பிரதட்சணம்’ என்றொரு பிராகாரமும் உண்டு.

இந்த பிராகாரம், வருடத்தில் மூன்று நாட்கள் அதாவது, மார்கழி மாதம்- வைகுண்ட ஏகாதசிக்கு முதல் நாளான தசமி திருநாள் முதல் துவாதசி வரை திறந்துவிடப்படும். திருப்பதியில், இந்த முக்கோடி பிரதட்சணம், சொர்க்கவாசலுக்கு சமம் என்கிறார்கள் பக்தர்கள்.

கேரள மாநிலத்தில் வைகுண்ட ஏகாதசியை, ‘விருட்சிக ஏகாதசி’ என்கிறார்கள். குருவாயூர் கோயிலில் இந்த விழாவைப் பதினெட்டு நாட்கள் கொண்டாடுகின்றனர். இதையொட்டி, தீப ஸ்தம்பங்களில் விளக்குகள் ஏற்றப்படுவதால், கோயில் சொர்க்கலோகமாகக் காட்சி அளிக்கும் என்று மெய்சிலிர்க்கச் சொல்லும் பக்தர்கள் உண்டு.

ஏகாதசி அன்று அதிகாலை 3 மணி முதல் மறு நாள்- துவாதசி வரை கோயில் திறந்தே இருக்கும். விருட்சிக ஏகாதசியையொட்டி, அதிகாலை வேளையில் குருவாயூரப்பனை தரிசிப்பது, ‘சொர்க்க வாசல் வைபவ’த்துக்குச் சமமாகக் கருதுகிற வழக்கம் கேரளாவில் இருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in