வைகுண்ட ஏகாதசி; ஒரேயொரு முறை விரதம்; ஒரேயொரு முறை ரங்க தரிசனம்!

வைகுண்ட ஏகாதசி;  ஒரேயொரு முறை விரதம்; ஒரேயொரு முறை ரங்க தரிசனம்!

வைகுண்ட ஏகாதசிப் பெருவிழாவில், விரதமிருந்து பெருமாளை தரிசித்தால், முக்தி நிச்சயம். இம்மையில் உள்ள சகல பிரச்சினைகளையும் தீர்த்தருளுவார் பெருமாள் என்பது ஐதீகம்.

ஏகாதசி என்றாலே மார்கழி மாதமும் மார்கழி என்றாலே வைகுண்ட ஏகாதசியும் வைகுண்ட ஏகாதசி என்றதும் பரமபத வாசலும் நினைவுக்கு வரும். வைகுண்ட ஏகாதசி - பரமபத வாசல் என்றாலே, நினைவுக்கு வருவது ஸ்ரீரங்கமும் ரங்கநாதரும்தான்! இந்தநாளில் விரதமிருந்து பெருமாளைத் தரிசித்து, பரமபதவாசலை அடைந்தால், நம் ஏழு ஜென்மப் பாவமெல்லாம் விலகும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள். இன்று வைகுண்ட ஏகாதசிப் பெருவிழா.

ஒரு வைகுண்ட ஏகாதசி நாளில்தான், நம்மாழ்வார் பரமபதம் அடைந்தார் என்கிறார்கள் ஆச்சார்யர்கள். வைணவத்தின் தலைநகரம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் தலத்துக்கு வந்தாலே புண்ணியம். அரங்கனை ஸேவித்துப் பிரார்த்தித்தால், மகா புண்ணியம்!

ஸ்ரீரங்கம் திருத்தலம், மிகப் பிரம்மாண்டமான கோயில். சொல்லப் போனால், ஏழு பிராகாரங்களைக் கொண்ட பிரமிப்பூட்டும் ஆலயம். இங்கு ஆண்டுதோறும் இருபது நாட்கள் ‘அத்யயன உற்சவம்’ நடைபெறுகிறது. நாலாயிர திவ்யப் பிரபந்தத்தை செவிமடுக்கவே திருமங்கை ஆழ்வாரால் இந்த அத்யயன உற்சவம் ஏற்படுத்தப்பட்டதாகச் சொல்கிறது ஸ்தல புராணம். .

ஆழ்வார்கள் காலத்துக்கு முன் வேதப் பயிற்சிக்கு ‘அத்யயன காலம்’ என்றும் ஓய்வு காலத்துக்கு ‘அநத்யாயன காலம்’ என்றும் வடமொழியில் வழங்கி வந்துள்ளனர். வேத நெறியையட்டி தென்மொழி மறைவாணர்களும் வேதப்பயிற்சி, விடுமுறை (ஓய்வு கால) வழக்கங்களைப் பின்பற்றலாயினர்.

ஆழ்வார்கள் காலத்துக்கு முன்னர் திருவரங்கம் பெரிய கோயிலில், வைகுண்ட ஏகாதசியன்று வடமொழியில் வேதங்களை செவிமடுத்து, பரமபத வாசல் திறப்பு விழாவை நடத்தி வந்ததாகவும் நாளடைவில் அந்த வழக்கம் நலிவுற்றதாகவும், அதை ஈடு செய்ய தமிழ் வேதங்களை அரங்கன் செவிமடுக்க... இப்போதைய ‘அரையர் சேவை’ ஏற்பட்டதாகவும் சொல்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

திருமங்கை மன்னன் காலத்துக்குப் பின் இந்த அத்யயனத் திருவிழா வழக்கொழிந்தது. நாலாயிரமும் இடைக் காலத்தில் மறைந்தது. பின்னர் ஒன்பதாம் நூற்றாண்டில் தமிழகத்தில் காட்டுமன்னார் கோவிலில் தோன்றிய நாதமுனிகள் பெரும் தவமியற்றி, யோக நெறியில் நின்று நம்மாழ்வாரிடமிருந்து மறைந்த நாலாயிர திவ்விய பிரபந்தத்தைப் பெற்று, இசையமைத்து, தாளம் வழங்கி ‘முத்தமிழ்’ ஆக்கி நாடெங்கும் பரவச் செய்தார். வைணவர்கள் அறிய வேண்டிய முக்கிய மந்திரங்களை மனதில் கொண்டு நாலாயிர திவ்விய பிரபந்தத்தை முறைப்படுத்தி, தொகுத்து அளித்தார் என விவரிக்கிறது ஸ்தல புராணம்.

நாதமுனியின் பேரன் ஆளவந்தார். இவருக்கு ஐந்து சிஷ்யர்கள். அவர்களில் ஒப்பற்ற சிஷ்யராகவும், புகழ்பெற்ற ஆசிரியராகவும் விளங்கிய பகவத் ராமானுஜரோடு இணைந்து, ஆயிரங்கால் மண்டபத்தில் பல்லாயிரம் மக்கள் அரங்கனோடு இணைந்து அனுபவிக்கும் வகையில் இந்த ‘அத்யயன’ உற்சவத்தை ஸ்ரீரங்கத்தில் மீண்டும் அமைத்தனர். அப்போது திருமங்கையாழ்வாரை நினைவுகூர்ந்து சிறப்பிக்க அவரது திருநெடுந்தாண்டகத்தை முதன்மைப்படுத்தினார்கள் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

திருமங்கையாழ்வார் காலத்தில், நம்மாழ்வார் திருவாய்மொழிப் பாடல்களை இசையுடன் ஓதி பத்து நாட்கள் மட்டுமே விழா எடுத்தனர். அதற்காக திருமங்கையாழ்வார் நெல்லை மாவட்டம் ஆழ்வார்திருநகரில் கோயில் கொண்டுள்ள நம்மாழ்வார் திருமேனியை ஸ்ரீரங்கத்துக்கு எழுந்தருளச் செய்து மிகப் பெரிய விழாவாகக் கொண்டாடினார். பின்னர் ஸ்ரீரங்கத்திலேயே ஆழ்வார்களுக்கு விக்கிரகங்கள் அமைத்துக் கோயில் எழுப்பி, எழுந்தருளச் செய்தததாக விவரிக்கிறது ஸ்தல புராணம்.

திருவிழாவின்போது அவர்களது பாடல்களை ‘அரையர் சேவை’யாக நடத்தினர். ‘அரையர்’ என்ற சொல் முத்தமிழ் வித்தகரைக் குறிக்கும். ‘அத்யயன உற்சவம்’ என்பது ‘முத்தமிழ் விழா’ என்றே அழைக்கப்பட்டது.

இப்போது - திருநெடுந்தாண்டகம் தொடங்கி பத்து நாட்கள் பகல்பத்து எனவும், நம்மாழ்வாரின் திருவாய்மொழித் திருநாள் இராப்பத்து எனவும் கொண்டாடப்படுகிறது. வைகுண்ட ஏகாதசிக்கு முன்னதாக பகல் பத்து விழாவும் வைகுண்ட ஏகாதசிக்கு அடுத்து ராப்பத்து விழாவும் நடைபெறும். இதையொட்டி தினமும் சர்வ அலங்காரத்தில் உற்சவர் ஒவ்வொரு வாகனத்தில் வீதியுலா என விழா அமர்க்களப்படும்.

பகல் பத்துக்கும் இராப் பத்துக்கும் இடையே உள்ள நாளே வைகுண்ட ஏகாதசியாக போற்றப்படுகிறது. வைகுண்ட ஏகாதசி தொடங்கி பத்து நாட்கள் திருவாய்மொழி பாடப்பட்டு இறுதி நாளில் நம்மாழ்வார் பரமபதம் எய்தும் காட்சி நடைபெறும்.

மார்கழி மாதத்தில் அரங்கனை என்றேனும் ஒருநாள் தரிசிப்பது சிறப்பு. சொர்க்கவாசல் திறப்பின் போது தரிசிப்பதும் ஸ்ரீரங்கம் தலத்துக்கு வந்தாலே மகா புண்ணியம்.

வாழ்வில், மனிதராகப் பிறப்பெடுத்தவர்கள் அனைவருமே ஒருமுறையேனும் மார்கழி மாத வைகுண்ட ஏகாதசி நன்னாளில் விரதம் மேற்கொள்ளவேண்டும். துவாதசியில் விரதத்தை நிறைவு செய்யவேண்டும். அதேபோல், வைஷ்ணவத்தில் பெரியகோயில் என்று போற்றப்படுகிற ஸ்ரீரங்கம் திருத்தலத்துக்கு, வைகுண்ட ஏகாதசி நன்னாளில், அந்த பரமபதவாசலில் நம் பார்வையும் பாதமும் படவேண்டும். ரங்கனின் திருவடியில் நமக்கும் இடமுண்டு என்கிறார்கள் ஸ்ரீரங்கம் கோயிலின் ஆச்சார்யர்கள்!

அரங்கனை ஸேவிப்போம். ’ரங்கா... ரங்கா... ரங்கா...’ என அன்புருக அழைத்து ரங்கனின் பேரருளைப் பெறுவோம்!

அரங்கனே... உன் திருவடி சரணம்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in