வளம் தரும் வாஸ்து நாளில் இல்லம் முழுக்க தூப ஆராதனை

வாஸ்து பகவான்
வாஸ்து பகவான்

இன்று (ஆகஸ்ட் 22) திங்கட்கிழமை வாஸ்து நாள். இந்த நாளில், வாஸ்து நேரத்தில், நம் வீடு முழுக்க தீப தூப ஆராதனைகள் செய்வோம். இல்லத்தில் இருக்கின்ற வாஸ்துப் பிரச்சினைகளை எல்லாம் சரி செய்து, நம் வீட்டில் நிம்மதியையும் ஆனந்தத்தையும் தந்தருளுவார் வாஸ்து பகவான்.

‘பணமும் பத்தா இருக்கணும்; குணமும் முத்தா இருக்கணும்’ என்பது போல், லட்சம் லட்சமாகச் செலவு செய்து வீட்டைக் கட்டுவது பெரிய விஷயமல்ல. அந்த வீடு, வாஸ்து கட்டிடக்கலை அமைப்பின் படி இருக்கவேண்டும் என்பதே முக்கியம் என்பது ஐதீகம்.

அஷ்டதிக் பாலகர்கள் எனப்படும் திசை நாயகர்களுக்கெல்லாம் நாயகனாக இருந்து நல்ல தேவதைகளை நம்மிடம் வரச்செய்பவரும் துர்தேவதைகளை நம் வீட்டுக்குள் அண்டவிடாமல் காப்பவரும் வாஸ்து பகவான் என்று போற்றுகின்றனர் வாஸ்து நிபுணர்கள்

சிலர், தங்களின் வீடுகளை வாஸ்து அமைப்பின்படி கட்டியிருப்பார்கள். ஆனால், புழங்குகின்ற பொருட்களை, மருந்து மாத்திரைகளை, குழந்தைகளின் பாடப்புத்தகங்களை வாஸ்துவுக்கே உரிய இடங்களில் வைக்காமல்கூட இருப்பார்கள். இதனால், அடிக்கடி ஆஸ்பத்திரி, சிகிச்சை, மருந்து மாத்திரைகள் என்றும் குழந்தைகள் படிப்பில் அதிக நாட்டமில்லாமல் இருப்பார்கள் என்றும் குடும்பத்தில் சலசலப்பு, அமைதியின்மை ஏற்படும் என்றும் வாஸ்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

வாஸ்து புருஷன் என்பவன், எட்டுத்திசைகளையும் ஒவ்வொரு அங்குலம் கூடவிடாமல் எல்லா இடங்களையும் கட்டியாளுபவன். வாஸ்து புருஷனுக்கு உரிய நாட்கள் என சில நாட்களை குறிப்பிட்டு வைத்திருக்கிறார்கள். அந்த நாட்களில், நாம் வாஸ்து புருஷனை வழிபடுவது நம் குடும்பத்துக்கும் சந்ததிக்கும் உகந்தது என்பது ஐதீகம்.

நாம் சொந்த வீட்டில் இருந்தாலும் வாடகை வீட்டில் குடியிருந்தாலும் வாஸ்து நாளில் வாஸ்து பகவானை வணங்கலாம். இன்று வாஸ்து நாள். இன்று காலை 7.23 முதல் 7.59 மணி வரை வாஸ்து நேரம். வாஸ்து புருஷனுக்கான நேரம். முதல்நாளே, நம் வீட்டை ஒட்டடைகள் இல்லாமல், தூசு இல்லாமல், சுத்தப்படுத்திக் கொள்ளவேண்டும். பூஜையறையைச் சுத்தம் செய்து, கோலமிட்டுக் கொள்ளவேண்டும். அன்றைய தினம் காலையில் எழுந்து, வீட்டில் விளக்கேற்றி வைத்து, நம் இல்லம் முழுக்க தீப தூப ஆராதனைகளைச் செய்யவேண்டும்.

வீட்டில் உள்ள அஷ்டதிக்குகளிலும் அதாவது எட்டுத்திசைகளின் மூலைகளிலும் தூப ஆராதனை எனப்படும் சாம்பிராணிப்புகை இடுவதாலும் சூடத்தால் தீபாராதனை செலுத்துவதாலும் நம் வீட்டில் வாஸ்து புருஷனை மகிழ்ச்சிப்படுத்தி அவரின் ஆசிக்கும் அருளுக்கும் பாத்திரமாகலாம்.

நம் வீட்டின் தரித்திரத்தை சரி செய்து, நம்மை வாழ்வில் மேம்படச் செய்வார் வாஸ்து புருஷன். வாஸ்து நன்னாளில், வாஸ்து பகவானை வணங்குவோம். வாடகை வீட்டிலிருந்து சொந்த வீட்டுக்குச் செல்லும் மனை யோகத்தையும் பெறுவோம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in