வாத நோய் தீர்க்கும் வாதவூர் சனீஸ்வரர்

சனீஸ்வரர்- திருவாதவூர்
சனீஸ்வரர்- திருவாதவூர்

திருவாதவூர் திருத்தலத்துக்கு வந்து சாபம் நீங்கிய சனீஸ்வரரை மனதார வேண்டிக்கொண்டால், வாத நோயெல்லாம் தீர்த்தருளுவார் என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.

மதுரையில் இருந்து சுமார் 24 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருவாதவூர். இந்தத்தலத்துக்கு வாதபுரம், வாயுபுரம், பிரம்மபுரம், பைரவபுரம், சம்யாகவனம் எனப் பல பெயர்கள் உண்டு என்கிறது ஸ்தலபுராணம். இந்தத் தலத்தின் சிவனாரின் திருநாமம் திருமறைநாதர். அதாவது வேத நாயகப் பெருமான். பாண்டிய நாட்டு வைப்புத்தலங்களில் திருவாதவூரும் ஒன்று.

இந்தத் தலத்துக்கு மற்றுமொரு சிறப்பு... மாணிக்கவாசகரின் அவதாரத் தலமும் இதுதான். ’நானே வேதம்’ என மகாவிஷ்ணுவுக்கு ஈசன் உணர்த்திய தலமும் உபதேசித்த தலமும் இது என்பதாகச் சொல்கிறது ஸ்தல புராணம்.

அசுரர்களுக்கு அடைக்கலம் கொடுத்த குற்றத்துக்காக, பிருகு முனிவரின் மனைவி கியாதியின் தலையைக் கொய்துவரும்படி, திருமால் தன் சக்ராயுதத்தைப் பணித்தார். அதன்படி, கியாதியின் தலையைக் கொய்து, அசுரர்களையும் சிதைத்து அழித்தது திருமாலின் சக்ராயுதம்.

திருமாலால் தன் மனைவி கொல்லப்பட்டதை அறிந்த பிருகு முனிவர், 'நீ பூவுலகில் பல பிறவிகள் எடுப்பாய். மேலும் ஒரு பிறவியில் தேவியை இழந்து, மனம் நொந்து, வேதனை அடைவாய்’ என திருமாலுக்குச் சாபமிட்டார்.

'சிவலிங்க பூஜை செய்து வந்தால், உன் சாபத்துக்கு விமோசனம் கிடைக்கும்’ என அப்போது அசரீரி கேட்டது. அதன்படி, இங்கே வந்து சிவனாரை வணங்கிப் பலன் பெற்ற திருமால், அருகில் உள்ள திருமோகூர் எனும் தலத்தில், ஸ்ரீகாளமேகப் பெருமாள் எனும் திருநாமத்துடன் சேவை சாதிக்கிறார்.

திருவாதவூர் தலத்தின் நாயகன் வேதநாயகப் பெருமான். அம்பாள் வேதநாயகி. இங்கே மாணிக்கவாசகருக்கு தனிச்சந்நிதி அமைந்துள்ளது. ஆலயத்தில் உள்ள நூற்றுக்கால் மண்டபம் மாணிக்கவாசகரால் அமைக்கப்பட்டது என்றும், இந்த இடத்தில் இருக்கும்போதுதான், மாணிக்கவாசகருக்கு தன் பாதச் சிலம்பொலியைக் கேட்கச் செய்தார் சிவனார் என்றும் ஸ்தல புராணம் விவரிக்கிறது.

மாண்டவ்ய முனிவரின் சாபத்தால் முடமான சனிபகவான், இந்தத் தலத்தின் சிவனாரை வழிப்பட்டதால், சாபம் நீங்கப் பெற்றார். இங்கு சனீஸ்வரனை வழிபட்டால், எத்தகைய வாத நோயும் நீங்கும் என்கின்றனர் பக்தர்கள். சனீஸ்வரர் தனிச்சந்நிதியில் அருள்பாலிப்பது, இந்தத் தலத்தின் கூடுதல் விசேஷம்.

சிவதீர்த்தம், விஷ்ணு தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், பைரவ தீர்த்தம், கபில தீர்த்தம், வாயு தீர்த்தம், அக்கினி தீர்த்தம் என ஏழு புண்ணிய தீர்த்தங்கள் கொண்ட திருத்தலம் திருவாதவூர். இங்கு வந்து வேண்டிக்கொண்டால், சந்தான பாக்கியம் கிடைக்கும் என்கின்றனர் பக்தர்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in