உங்கள் முன்னோர்கள் உங்கள் வீட்டுக்கு வரும் காலம் இது!

உங்கள் முன்னோர்கள் உங்கள் வீட்டுக்கு வரும் காலம் இது!

- மகாளயபட்ச புண்ணிய காலத்தில் முன்னோர் வழிபாடு

மகாளயபட்ச புண்ணிய காலத்தில் நம் முன்னோரை வழிபடுவோம். இந்த நாட்களில், நம் முன்னோர்கள் நம் வீட்டுக்கு வருவார்கள், நாம் அவர்களுக்குச் செய்யும் பூஜை, தர்ப்பணம் முதலான வழிபாடுகளைப் பார்ப்பார்கள் என்பது ஐதீகம்!

ஒவ்வொரு அமாவாசையும் முன்னோர்களுக்கானவை. இந்த நாட்களில் நாம் முன்னோர்களை நினைத்து வழிபடவேண்டும். அவர்களின் பெயர்களைச் சொல்லி, கோத்திரம் சொல்லி, எள்ளும் தண்ணீரும் விடவேண்டும் என்றும் அந்த எள்ளானது, அவர்களுக்கு உணவாகவும் நாம் விடும் தண்ணீரானது அவர்களின் தாகத்தைத் தணிக்கவும் பயன்படும் என விவரிக்கிறது சாஸ்திரம்.

புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை மகத்துவம் நிறைந்தது. புரட்டாசி மாதத்தில் வருகிற அமாவாசைக்கு முந்தைய பதினைந்து நாட்களும் கூட முன்னோர்களுக்கானவையே. இந்த பதினைந்து நாட்களும், இறந்துவிட்ட நம் மூதாதையர்கள், பித்ரு லோகத்தில் இருந்து பூலோகத்துக்கு வருவார்கள் என்றும் அப்படி வந்து நம் வீட்டைப் பார்ப்பார்கள் என்றும் சாஸ்திரங்கள் எடுத்துரைக்கின்றன.

பதினைந்து நாட்களை மகாளயபட்சம் என்பார்கள். பட்சம் என்றால் பதினைந்து. மகாளயம் என்றால், சிறப்பான, மகத்துவமான முன்னோர்களுக்கான நாட்கள் என்று அர்த்தம். கடந்த 11-ம் தேதி முதல் மகாளயபட்சம் ஆரம்பித்தது. இதைத் தொடர்ந்து தினமும் பித்ருக்களை வணங்கி ஆராதிக்கலாம். அல்லது ஏதேனும் ஒருநாளிலும் அமாவாசையிலும் பித்ருக்களை வணங்கி, பூஜிக்கலாம். பதினைந்து நாட்களுமே தொடர்ந்து பித்ருக்களுக்கு உரிய ஆராதனைகளைச் செய்து வருவோருக்கு, அவர்களுக்கும் அவர்களின் சந்ததியினருக்கும் முன்னோர்களின் ஆசிகள் முழுமையாகக் கிடைக்கும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

நம் வீட்டுக்கு சூட்சும ரூபமாக, அதாவது அரூபமாக வரும் நம்முடைய முன்னோர்கள், நாம் அவர்களை வணங்குவதைப் பார்த்து ஆனந்தப்படுவார்களாம். அப்போது, ‘நாம் நம் முன்னோர்களைச் சரியாகவும் முறையாகவும் வணங்கிவிட்டோம். எனவே நம் பிரச்சினைகளெல்லாம் தீரும்’ என்று நாம் சொன்னால், அவர்கள் ‘ததாஸ்து ததாஸ்து ததாஸ்து’ என்று சொல்லுவார்களாம். ‘ததாஸ்து’ என்றால் ‘அப்படியே ஆகட்டும்’ என்று அர்த்தம்.

‘ஆமாம்... பூஜை செஞ்சு என்னாகப் போவுது. என் அப்பாவோ தாத்தாவோ ஒரு சொத்துக்கூட சேத்துவைக்காம போய்ச் சேந்துட்டாங்க. இப்போ நாம அல்லாடிட்டிருக்கோம்’ என்று முன்னோர் வழிபாடு செய்யாமல், புறந்தள்ளினால், அதற்கும் ‘ததாஸ்து ததாஸ்து ததாஸ்து’ என்றே சொல்லுவார்கள். அதனால்தான், இறந்தவர்களைக் குறித்து நல்லவிதமாகப் பேசுவதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறோம் என்கிறார் பாலாஜி வாத்தியார்.

எனவே மகாளய பட்ச புண்ணிய காலத்தில், நம் முன்னோர்களை வணங்குவோம். எள்ளும் தண்ணீரும் ‘அர்க்யம்’ செய்து பிரார்த்தனை செய்வோம். முடிந்தால், நம் முன்னோர்களை நினைத்து ஒருவருக்கேனும் உணவுப் பொட்டலம் வழங்குவோம். நம் முன்னோர்களின் ஆசியும் அனுக்கிரகமும் நமக்கு எப்போதும் கிடைக்கும்; நம்மை செம்மையாக வாழவைக்கும்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in