கம்பராயபெருமாள் கோயிலில் மும்மூர்த்திகள்; தட்சிணாமூர்த்தியும் முருகனும் விசேஷம்!

கம்பராயபெருமாள் கோயிலில் மும்மூர்த்திகள்; தட்சிணாமூர்த்தியும் முருகனும் விசேஷம்!

கம்பராய பெருமாளுக்கு வஸ்திரம் சார்த்தி, தயிர்சாதம் நைவேத்தியம் செய்து வேண்டிக்கொண்டால் ஐஸ்வர்ய கடாட்சம் கிடைக்கப் பெறலாம் என்கிறார்கள் பக்தர்கள். மேலும், தட்சிணாமூர்த்தியும் முருகப்பெருமானும் விசேஷமான பலன்களை அருளுகின்றனர் என்பதாக ஐதீகம்.

தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் எனும் ஊரில் அற்புதமாக கோயில் கொண்டிருக்கிறார் கம்பராயப் பெருமாள். தேனியில் இருந்து சுமார் 49 கிமீ தொலைவில் கம்பம் உள்ளது. கம்பம் நகரிலிருந்து நடந்து செல்லும் தொலைவில் இந்தக் கோயில் அமைந்துள்ளது.

கம்பராயப் பெருமாள் கோயிலை மும்மூர்த்திகள் ஸ்தலம் என்று போற்றுகிறது ஸ்தல புராணம். மூலவர் சந்நிதியின் மேல் உள்ள விமானம் திரிதள விமானம் என்று போற்றப்படுகிறது. இந்தத் தலத்தில் சிவபெருமான் மற்றும் பெருமாள் கோயில்கள் ஒரே வளாகத்தில், தனித்தனி கொடிமரங்களுடன் உள்ளன என்பது வேறங்கும் காண்பதற்கு அரிதான ஒன்று.

இங்கு, ஸ்ரீகாசி விஸ்வநாதர் எனும் திருநாமத்துடன் சதுர வடிவ ஆவுடையாராகக் காட்சி தருகிறார் சிவபெருமான். குறிப்பாக, காசி விசாலாட்சிக்கும் தனிச்சந்நிதி அமைந்திருக்கிறது. இங்கு கோஷ்டத்திலுள்ள ஸ்ரீதட்சிணாமூர்த்தி திருக்கரத்தில் கமண்டலத்துடன் காட்சி தருகிறார்.

கம்பராயப் பெருமாள் அழகுறக் காட்சி தருகிறார். பெருமாளுக்கு உகந்த திருவோண நட்சத்திர நாளில், மாதந்தோறும் திருவோண தீபம் ஏற்றி வழிபாடு செய்கிறார்கள் பக்தர்கள். தாயாரின் திருநாமம் ஸ்ரீஅலமேலு மங்கைத் தாயார். இங்கே உள்ள ஸ்ரீசக்கரத்தாழ்வாரும் விசேஷமானவர்.

மும்மூர்த்திகள் தலம் அல்லவா. சிவபெருமான், பெருமாள் ஆகியோர் இருக்க, ஸ்ரீபிரம்மா வன்னி மர வடிவில் அருள்பாலிக்கிறார் என்பதாக ஐதீகம். இங்கு ஸ்ரீநரசிம்மர், நான்கு கைகளிலும் சக்கரங்களுடன் காட்சி தரும் அழகே அழகு. புதன் கிழமைகளிலும் சனிக்கிழமைகளிலும் ஸ்ரீசக்கரத்தாழ்வாரையும் ஸ்ரீநரசிம்மரையும் தரிசிப்பதற்காக, அக்கம்பக்கத்து ஊர்களில் இருந்தும் தேனி மாவட்டம் முழுவதும் இருந்தும் எண்ணற்ற பக்தர்கள் வருகை தந்து தரிசித்துச் செல்கின்றனர்.

கம்பராயப் பெருமாள் கோயிலில், சித்தி விநாயகரும் இருக்கிறார். முருகப்பெருமான் 'சண்முகநாதர்’ எனும் திருநாமத்துடன் காட்சி தருகிறார். ஆறுமுகங்களைக் கொண்ட இவருக்கு முன்புறம் ஐந்து முகங்களும், பின்புறம் ஒரு முகமும் இருப்பது சிறப்பு.

திருமால், அர்ஜுனனுக்கு தேரோட்டியாக இருந்ததால் திருவல்லிக்கேணியில் பார்த்தசாரதி பெருமாள் மீசையுடன் காட்சி தருகிறார் அல்லவா... அதேபோல், மார்கழி மாதத்தில், வைகுண்ட ஏகாதசியன்று ஒருநாள் மட்டும் கம்பராய பெருமாள் மீசையுடன் இங்கே திருக்காட்சி தருகிறார்.

இந்தத் தலத்தில், கிருஷ்ண ஜெயந்தி, நவராத்திரி, அனுமன் ஜெயந்தி, ராமநவமி ஆகிய விழாக்களும், சிவபெருமானுக்கு சிவராத்திரி, ஆடிப்பெருக்கு, ஐப்பசி அன்னாபிஷேகம், ஆருத்ரா தரிசனம் ஆகிய விழாக்களும் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.

குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகவும், திருமணத் தடைகள் நீங்கவும், புத்திர தோஷங்கள் விலகவும் இங்கு வந்து பிரார்த்தித்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர் பக்தர்கள். இங்குள்ள சிவன் மற்றும் பெருமாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் வேண்டிக்கொள்கின்றனர். ஆஞ்சநேயருக்கு வெண்ணெய்க்காப்பு, வடை மாலை சார்த்தியும் தயிர் சாதம் படைத்தும் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர் பக்தர்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in