`ஆய்வு செய்ய உரிமையில்லை; சட்ட நடவடிக்கை எடுப்போம்'- தமிழக அரசுக்கு தீட்சிதர்கள் கடிதம்

`ஆய்வு செய்ய உரிமையில்லை; சட்ட நடவடிக்கை எடுப்போம்'- தமிழக அரசுக்கு தீட்சிதர்கள் கடிதம்
சிதம்பரம் நடராஜர் கோயில்

எதிர்வரும் 7 மற்றும் 8-ம் தேதிகளில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் தமிழக அரசின் அறநிலையத் துறை சார்பில் ஆய்வு மேற்கொள்ள உள்ள நிலையில் அந்த ஆய்வுக்கும், தணிக்கைக்கும் சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்து, நீதிமன்ற தீர்ப்பு மற்றும் சட்ட விதிகளை சுட்டிக் காட்டி மறுப்புக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள், தமிழக அறநிலையத் துறைக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ``கடைசியாக முடிக்கப்பட்ட தணிக்கை அறிக்கை இல்லாமல் புதிதாத 17 ஆண்டுகள் கழித்து தொடங்க இயலாது. 7-6-2021 தேதியிட்ட சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி துறை தணிக்கை குழுக்கான விதிகள் சட்டப்படி செல்லாது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாங்கள் சட்டப்பூர்வமான தணிக்கை மற்றும் ஆய்விற்கு ஒத்துழைக்க தயாராக உள்ளோம். ஆனால் தங்களது சட்டப்பிரிவு 107-ன் படி நீங்களே ஒப்புக் கொண்ட வகையில் தனி சமய பிரிவினர் நிர்வாகம் செய்யும் கோயிலிகளில் தன்னிச்சையாக ஆய்வு மற்றும் தணிக்கை செய்ய உங்கள் துறை அதிகார எல்லைக்கு அப்பாற்பட்டது என்ற சட்டநிலைப்பாடு உள்ளது.

அதனால் தங்களது ஆய்வு மற்றும் தணிக்கையை உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற தீர்ப்புகளுக்கு கட்டுப்பட்டு கைவிடுமாறு கேட்டுக் கொள்கிறோம். இந்து சமய அறநிலையத்துறை கோயில்களில் தணிக்கை ஆட்சேபனை 15 லட்சத்திற்கும் மேல் தீர்க்கப்படாமல் உள்ளது. பல அதிகாரிகள் கோயில் நிதி முறைகேடாக கையாண்டு உயர் நீதிமன்ற தீர்ப்பில் கண்டிக்கப்பட்டுள்ளார்கள்.

இவ்வாறு அறநிலையத்துறை கட்டுப்பாட்டு கோயில்களில் முறைகேடுகளை சரி செய்யாமல், நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றாமல், அரசியல் சாசன பாதுகாக்கப்பட்ட கோயில் நிர்வாகம் செய்யும் தனி சமய பிரிவினரான தீட்சிதர்கள் நிர்வாகத்தை ஆய்வு செய்ய தார்மீக உரிமையில்லை.

உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தற்போது எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கைகளை திரும்ப பெறவும் மற்றும் அரசாணையை திரும்ப பெறவும் மீண்டும் கோரப்படுகிறது. தவறினால் நீதிமன்ற அவமதிப்பு உள்ளிட்ட உரிய சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்க நேரிடும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

அறநிலையத் துறையை எச்சரிக்கும் விதத்தில் உள்ள இந்த கடிதத்தின் நகல் தமிழக அரசின் தலைமை செயலருக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதனால் திட்டமிட்டபடி 7-ம் தேதியன்று அறநிலையத் துறையின் ஆய்வு நடைபெறுமா என்ற சந்தேகமும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in