திருப்பதி பிரம்மோற்சவம்: தங்கத்தேரில் மலையப்பர் பவனி

திருப்பதி பிரம்மோற்சவம்: தங்கத்தேரில் மலையப்பர் பவனி

திருப்பதி பிரம்மோற்சவத்தின் 6-ம் நாளான இன்று மாலை, ஸ்ரீதேவி, பூதேவி சமேதமாய் மலையப்பர் தங்கத் தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பிரசித்திப் பெற்ற திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில், புரட்டாசி மாத பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாக நடப்பது வழக்கம். இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழாவானது, செப்.27-ம் தேதி மாலை கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது.

திருப்பதி பிரம்மோற்சவத்தின் 6-ம் நாளான இன்று மாலை, ஸ்ரீதேவி, பூதேவி சமேதமாய் மலையப்பர் தங்கத் தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மாட வீதிகளில் தங்கத் தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இதில் பெண்கள் தேரின் வடம் பிடித்து இழுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். மாட வீதிகள் எங்கும் திரளான பக்தர்கள் திரண்டிருந்து தேரோட்டத்தைக் கண்டு களித்தனர். மாட வீதிகள் எங்கும் 'கோவிந்தா... கோவிந்தா' எனும் பக்தி பரவச கோஷம் விண்ணைப் பிளந்தது. அந்தி சாயும் நேரத்தில் நடைபெற்ற தங்கத் தேரோட்டம் அஸ்தமன சூரிய ஒளியில் ஜொலித்தது. தேரில் வீற்றிருந்த ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பர் பக்தர்களுக்கு அருள் பாலித்தவாறு உலா வந்ததைக் காண கண் கோடி வேண்டும்.

திருப்பதி பிரம்மோற்சவத்தில் மட்டுமே இரண்டு தேரோட்டங்கள் நடப்பது வழக்கம். முதலில் 6-ம் நாள் மாலை தங்கத்தேரோட்டமும், 8-ம் நாள் காலை பழமையான, பிரசித்தி பெற்ற தேர்த்திருவிழாவும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in