திருமாலின் திருப்பாத மகிமை!

திருமாலின் திருப்பாத மகிமை!

- திருவடியில் சரணடைந்தால் திருப்பம் நிச்சயம்!

மகாவிஷ்ணுவை தரிசிக்கும் போதும் திருமாலின் திருவடிக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. முதலில் திருவடியைத்தான் வணங்கவேண்டும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

தமிழகத்தில் பெருமாளுக்கு பல ஆலயங்கள் இருக்கின்றன. நின்ற கோலம், கிடந்த கோலம், அமர்ந்த கோலம் என பல திருக்கோலங்களில் பெருமாள் சேவை சாதிக்கிறார். 108 திவ்விய தேசங்கள் இருக்கின்றன. இதை 108 திருப்பதிகள் என்றும் போற்றி வணங்குகிறது வைணவம்.

சிவாலயங்களில் பாடல் பெற்ற தலங்கள், வைப்புத் தலங்கள் என்றெல்லாம் இருக்கின்றன. அதேபோல், ஆழ்வார் பெருமக்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட கோயில்கள் ஏராளமாக இருக்கின்றன. ஆழ்வார்கள் பாடிய பாடலை பாசுரம் என்று போற்றுகின்றன வைணவ நூல்கள்.

பெருமாள் எந்தக் கோலத்தில் இருந்தாலும் அவரை நாம் தரிசிக்கும் போது, முதலில் அவரின் திருப்பாதங்களைத்தான் தரிசிக்க வேண்டும் என்றும் அவர் திருவடியை பார்த்தபடி பிரார்த்தனை செய்யவேண்டும் என்கிறார் அம்பி பட்டாச்சார்யர்.

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பார்கள். எந்த ஆலயமாக இருந்தாலும் முதலில் கோபுரத்தைப் பார்த்ததும் வணங்கவேண்டும். முழுமையாக இரண்டு நிமிடமேனும் நின்று பிரார்த்தனை செய்துகொள்ளவேண்டும். ஓங்கி உயர்ந்து நிற்கும் கோபுரத்தைப் பார்த்தபடி நிற்கும் தருணத்தில், கடவுள் குடிகொண்டிருக்கும் கோயிலின் கோபுரமே இவ்வளவு உயரமென்றால், இறைவன் எத்தகு உயர்ந்த நிலையில் இருப்பவன் என்பதும் இறைவனுக்கு முன்னே நாம் வெறும் தூசு என்கிற எண்ணமும் வளரும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

அதேபோல், கோயிலுக்குள் நுழைந்ததும் பலிபீடம் இருக்கும். இதை நம்மில் பலரும் சூடம் ஏற்றுவதற்காகவும் கோயிலுக்குள் சென்று நம் கைகளில் தருகிற விபூதி, குங்குமம், சந்தனம், துளசி முதலான பிரசாதங்களை தட்டிவிட்டு வருகிற இடமாகவும் பாவித்துக் கொண்டிருக்கிறோம்.

உண்மையில் பலி பீடம் என்பது நம்மிடமுள்ள துர்குணங்களை யெல்லாம் பலி கொடுக்கக் கூடிய பீடம் அது. நமக்குள் இருக்கிற கோபம், ஆசை, கர்வம், அலட்டல், அதீத பற்று முதலானவற்றை அந்த இடத்தில் ஒப்புக்கொடுத்துவிடவேண்டும். ‘இவையெல்லாம் என்னிடம் இனி இல்லாமல் போகட்டும்’ என்று வேண்டிக்கொள்ள வேண்டும். பெருமாள் கோயிலில் உள்ள பலிபீடத்திலும் இப்படியான பிரார்த்தனையைச் செய்துவிட்டுத்தான் உள்ளே நுழைய வேண்டும் என்கிறார் அம்பி பட்டாச்சார்யர்.

பலிபீடத்தையொட்டிய கொடிக்கம்பத்தை துவஜஸ்தம்பம் என்று அழைப்பார்கள். விழாக்காலங்களில், முதலில் செய்வது இங்கே கொடியேற்றம்தான். கொடிமரம் எனப்படுகிற துவதஸ்தம் பத்தையும் வணங்கவேண்டும்.

அடுத்து, பெருமாளை தரிசிப்பதற்கு முன்னதாக அவருடைய வாகனமான கருடனை வணங்கிச் செல்லவேண்டும். சிவாலயங்களுக்குச் செல்லும் போது, சிவனாரின் வாகனமான நந்திதேவரை எப்படி வணங்குகிறோமோ அதேபோல், பெருமாள் கோயில்களில் பெருமாள் சந்நிதிக்கு எதிராக, பெருமாளையே பார்த்துக் கொண்டிருக்கிற கருடாழ்வாரை வணங்கவேண்டும். நமக்குத் தெரியாமலேயே, நம்மைச் சுற்றியுள்ள எதிர்மறை எண்ணங்களையும் துஷ்ட தேவதைகளின் ஆதிக்கத்தையும் அழித்து நம்மைக் காக்கும் குணம் கொண்டவர் கருடாழ்வார்.

பெருமாளின் சந்நிதிக்குச் சென்றதும், முதலில் அவரின் திருவடியைத் தரிசித்து நம் பிரார்த்தனையைத் தொடங்கவேண்டும். மகாபாரதத்தில் யுத்தத்துக்கு முன்னதாக, பகவான் கிருஷ்ணரிடம் உதவியையும் துணையையும் கேட்டு துரியோதனர் வருவார். அவர் தலைக்கு அருகில் அமர்ந்து, தூங்கிக்கொண்டிருக்கும் கிருஷ்ணர் எழுந்திருப்பதற்காகக் காத்திருந்தார். அடுத்து வந்த அர்ஜூனன், கிருஷ்ணர் தூங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு, சத்தமில்லாமல் அவரின் திருவடிக்கு அருகே அமர்ந்துகொண்டான். கிருஷ்ணர் தூக்கத்தில் இருந்து எழுந்தார். கண் விழித்தார். கண் திறந்ததும், தன் எதிரே, திருவடிக்கு அருகே அர்ஜூனன் இருப்பதைக் கண்டார். யுத்தத்தில் உதவி செய்ய சம்மதம் கொடுத்தார் என விவரிக்கிறது மகாபாரதம்.

அதேபோல், துரியோதனன், ஆள், அம்பு, சேனைகளையெல்லாம் கிருஷ்ணரிடம் கேட்டான். ஆனால் அர்ஜுனனோ... “எங்களுக்கு அவையெல்லாம் வேண்டாம் கிருஷ்ணா... நீ எங்களுடன் இருந்தால் போதும். நாங்கள் வெற்றி பெற்றுவிடுவோம்” என்று சொல்லி, கடவுளையே தங்களுக்குத் துணையாக்கிக் கொண்டான்.

அதேபோல், திருமாலை எந்த ஆலயத்துக்குச் சென்று சேவிப்பதாக இருந்தாலும், முதலில் அவரின் திருவடியை தரிசிக்கவேண்டும். ‘உன் திருவடியே சரணம்’ என்று முழுமையாக நாம் மகாவிஷ்ணுவிடம் சரணடைய வேண்டும். திருவடி தரிசனத்தை அடுத்து திருமுக தரிசனம் மேற்கொள்ளவேண்டும்.

புதன் மற்றும் சனிக்கிழமைகளில், பெருமாள் குடிகொண்டிருக்கும் ஆலயம் சென்று தரிசிப்போம். திருவடி தரிசனம் செய்து வேண்டிக்கொள்வோம். வேண்டிய வரங்களையெல்லாம் தந்தருளுவான் ஸ்ரீமந் நாராயணன்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in