திருவிழாவாக நடந்த திருக்கடையூர் திருக்கோயில் குடமுழுக்கு

1 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர்
திருவிழாவாக நடந்த திருக்கடையூர் திருக்கோயில் குடமுழுக்கு

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் உள்ள தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான அபிராமியம்மை உடனாகிய அமிர்தகடேஸ்வர சுவாமி திருக்கோயிலில் குடமுழுக்கு விழா இன்று நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அபிராமியம்மை உடனாகிய அமிர்தகடேஸ்வர சுவாமி கோயிலில், அபிராமியம்மை உடனாகிய அமிர்தகடேஸ்வர் அருள்பாலித்து வருகிறார். நீண்ட ஆயுளுக்கும் நோயற்ற வாழ்வுக்கும் உகந்த தலமான இங்கு அதற்காக சிறப்புப் பூஜைகளும் ஹோமங்களும் நடைபெறுவது வழக்கம். தமிழகம் தாண்டி இந்தியா முழுமைக்கும் இருந்தும் பக்தர்கள் வந்து வழிபட்டுச் செல்வார்கள்.

தருமபுரம் ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயிலுக்கு 25 ஆண்டுகளுக்குப் பிறகு திருப்பணிகள் நடைபெற்று இன்று குடமுழுக்கு விழா நடைபெற்றது. இதற்காக கடந்த 16-ம் தேதி காலை எஜமானர் அனுக்ஞை, தேவதா அனுக்ஞையுடன் பூஜைகள் தொடங்கின. கடந்த 18-ம் தேதி விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், பூர்ணாஹுதியுடன் தீபதூப ஆராதனையும், கடந்த 19-ம் தேதி நவக்கிரஹ ஹோமம், பூர்ணாஹுதியுடன் தீபதூப ஆராதனைகளும் நடைபெற்றன.

கடந்த 20-ம் தேதி மகாலட்சுமி ஹோமம், கோ பூஜை, தன பூஜை, வாஸ்து சாந்தி பூர்ணாஹுதி தீபாராதனை காட்டப்பட்டது. கடந்த 23-ம் தேதி முதல் கால யாகசாலை பூஜையும், கடந்த 24-ம் தேதி 2 மற்றும் 3-ம் கால யாகசாலை பூஜையும், கடந்த 25-ம் தேதி 4 மற்றும் 5-ம் கால யாகசாலை பூஜையும், நேற்று (26-ம் தேதி) 6 மற்றும் 7-ம் கால யாகசாலை பூஜையும் நடைபெற்றன.

இன்று (மார்ச் 27) காலை 6 மணிக்கு 8-ம் கால யாகசாலை பூஜை முடிந்து கடங்கள் புறப்பாடும் நடைபெற்று காலை 7 மணிக்கு பரிவார தெய்வங்களுக்குக் குடமுழுக்கு நடைபெற்றது. அதைத் தொடர்ந்து காலை 10.30 மணிக்கு விமான, ராஜகோபுரத்த்துக்கும், முற்பகல் 11 மணிக்கு மூலஸ்தானத்துக்கும் குடமுழுக்கு நடைபெற்றது. தீபதூப ஆராதனைகளுக்கு பிறகு பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. மாலை 6 மணிக்கு மகா அபிஷேகமும், இரவு 7.30 மணிக்கு திருகல்யாண வைபவமும், பாலாம்பிகை உடனாகிய கால சம்ஹார மூர்த்தி, பஞ்சமூர்த்திகள் வீதிவுலாவும் நடக்கிறது.

புராணப் பெருமை வாய்ந்த இந்த கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை தருமை ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் அறிவுறுத்தலின்பேரில் விழா கமிட்டியினர் செய்திருந்தனர். மாவட்ட ஆட்சியர் லலிதா தலைமையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் சுகாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்பட்டிருந்தன. மாவட்ட காவல் துறை சார்பில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இதில் குன்றக்குடி ஆதீனம், திருவாவடுதுறை ஆதீனம் உட்பட ஏராளமான மதகுருமார்கள் கலந்து கொண்டனர். இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜே குமரகுருபரன்,தஞ்சை சரக காவல்துறை துணைத் தலைவர் கயல்விழி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.