ஜாதக வழிபாடு; தொல்லைகள் தீர்ப்பார் தொட்டியம் பெருமாள்!

வேத நாராயண பெருமாள் ஸ்தல மகிமை
தொட்டியம் வேதநாராயண பெருமாள்
தொட்டியம் வேதநாராயண பெருமாள்

நம்மையெல்லாம் படைத்த பிரம்மாவே பெருமாளை நோக்கி தவமிருந்து வழிபட்ட தலம், சுக்ரீவன் வழிபட்ட தலம், பிரகலாதன் வழிபட்ட தலம், அனுமன் வழிபட்ட தலம் என்று புராணப் பெருமைகள் கொண்ட கோயிலாகத் திகழ்கிறது ஸ்ரீவேத நாராயணப் பெருமாள் திருக்கோயில். திருச்சி - நாமக்கல் சாலையில் உள்ளது தொட்டியம். இங்குதான் அற்புதமாக சேவை சாதித்துக் கொண்டிருக்கிறார் வேத நாராயணப் பெருமாள்.

ஸ்ரீதேவி பூதேவியுடன் காட்சி தருகிறார் வேதநாராயணப் பெருமாள். தாயாரின் திருநாமம் ஸ்ரீவேதவல்லி தாயார். காவிரியை தீர்த்தமாகக் கொண்ட இந்தத் தலத்தின் விருட்சம் வில்வம் என்பது ஆச்சரியம்தான்.

நான்கு வேதங்களையும் தலையணை போல் வைத்துக்கொண்டு, ஆதிசேஷன் மீது பள்ளிகொண்டிருக்கிறார் பெருமாள். நாபிக்கமலத்தில் பிரம்மதேவருக்கு வேதோபதேசம் செய்கிறார் திருமால் என்பதாக ஐதீகம். திருவடியில் ஸ்ரீதேவியும் பூதேவியும் இருக்க, கீழே பிரகலாதன் குழந்தை வடிவில் காட்சி தருகிறான்.

உலக மக்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் யோகத்தையும் தந்தருளும் பெருமாளாக காட்சி தருகிறார் ஸ்ரீவேத நாராயண பெருமாள். இந்தத் தலத்துக்கு வந்து 27 அகல் தீபம் ஏற்றி, நம் ஜாதகத்தை பெருமாளின் திருவடியில் வைத்து பிரார்த்தித்து, அர்ச்சித்து வழிபட்டால், இந்தப் பிறவியில் நாம் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள் அனைத்தும் தொலையும். விரைவில் திருமண பாக்கியம் கைகூடும் என்பது ஐதீகம். ஐந்து நெய் தீபங்களேற்றி, வெண் தாமரை மலரால் பெருமாளை அர்ச்சித்து வழிபட்டால், கல்வியில் சிறந்து விளங்கலாம். தொழிலும் உத்தியோகமும் விருத்தியாகும். இல்லத்தில் சுபிட்சம் நிலவும் என்கிறார்கள் பக்தர்கள்.

தொட்டியம் வேதநாராயண பெருமாள்
தொட்டியம் வேதநாராயண பெருமாள்

மகாபலிச் சக்கரவர்த்தி, மைசூர் நோக்கிப் படையெடுத்துச் சென்ற தருணத்தில், இந்தப் பகுதி மண் மேடாக இருந்ததாம். எனவே, இங்கே சற்று ஓய்வெடுத்துச் சொல்ல முடிவு செய்தார். அதன்படி எல்லோரும் ஓய்வில் இருந்தார்கள். அப்போது, மன்னரின் கனவில் வந்த பெருமாள், ‘இங்கே பூமிக்கு அடியில் நான் இருக்கிறேன். என்னை மேலே எழுந்தருளச் செய். கோயில் கட்டி வழிபடு. உனக்கும் இந்த உலகுக்கும் எல்லா நலனும் உண்டாகச் செய்வேன்’ என அருளினார்.

விடிந்ததும், மன்னர் உத்தரவிட, மண்மேட்டைத் தோண்டினார்கள். உள்ளே அழகிய விக்கிரகம் கிடைத்தது. விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்து ஆலயம் அமைத்து வழிபட்டார் மன்னர். இன்றளவும் பக்தர்கள் வழிபட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்கிறது ஸ்தல புராணம். இந்தக் கோயிலை அமைக்கும் போது, இந்த வனத்தை ஊராக்கினார் மன்னர். அதற்கு திருநாராயணபுரம் என்றும் பெருமாளுக்கு வேதநாராயண பெருமாள் என்றும் பெயரிட்டார்.

உக்கிர மூர்த்தியாக, நரசிம்மரை தரிசித்த பிரகலாதனுக்கு ஒரு ஆசை. ‘தங்களை சாந்த ஸ்வரூபியாக தரிசிக்க வேண்டும் பெருமாளே’ என வேண்டினான். அதற்கு மகாவிஷ்ணு, ‘திருநாராயணபுரத்துக்கு வா’ என அருளினார். அதன்படி இங்கு வந்து, காவிரியில் நீராடி, பெருமாளை நோக்கி தவம் மேற்கொண்டான். அவனுக்கு சாந்த முகத்துடன் திவ்ய தரிசனம் தந்தார் என விவரிக்கிறது ஸ்தல புராணம். இதேபோல், கர்வம் தலைக்கேறிய பிரம்மா, தன் தவறை உணர்ந்து, படைப்புத் தொழிலை இழந்த நிலையில், இங்கு வந்து தவமிருக்க, அவருக்கு அருளிய பெருமாள், வேத ஞானம் தந்து அருளினார் என்றும் புராணம் சிலாகிக்கிறது.

புதன் கிழமைகளிலும் சனிக்கிழமைகளிலும் வேத நாராயண பெருமாளை தரிசிக்க, எங்கிருந்தெல்லாமோ வருகின்றனர் பக்தர்கள். பெருமாளுக்கு துளசிமாலை சார்த்தி, வெண் தாமரை மலர்கள் சார்த்தி, ஜாதகத்தை அவரின் திருவடியில் வைத்து வேண்டிக்கொள்கிறார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in