பதினாறு செல்வங்களும் தரும் திருவோண விரதம்!

பதினாறு செல்வங்களும் தரும் திருவோண விரதம்!

மாதந்தோறும் திருவோண நட்சத்திர நாளில், விரதம் மேற்கொண்டு பெருமாளை சே வித்து வந்தால், ஏழு பிறவியிலும் பதினாறு வகையான செல்வங்களைப் பெற்று, நிம்மதியும் நிறைவுமாக வாழலாம் என்பது ஐதீகம்! தை மாதம் 8ம் தேதி, ஜனவரி 22ம் தேதி ஞாயிற்றுக்கிழமை திருவோண விரதம் மேற்கொள்வோம்.

அஸ்வினி தொடங்கி ரேவதி வரை மொத்தம் 27 நட்சத்திரங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நட்சத்திரத்துக்கு உரிய நாளாகப் போற்றப்படுகின்றன. அப்படி 27 நட்சத்திரங்களும் வந்த பிறகு, மீண்டும் முதல் நட்சத்திரம், அடுத்த நாள் அடுத்த நட்சத்திரம் என்று மீண்டும் வருவதுதான் காலச்சக்கரத்தின் கணிதம். மொத்தம் 27 நட்சத்திரங்களில், அஸ்வினி, ரோகிணி, மகம், மூலம், கேட்டை என்று நட்சத்திரங்களின் பெயர்களை மட்டும்தான் சொல்லுகிறோம். ஆனால் இரண்டு நட்சத்திரங்களுக்கு மட்டுமே நட்சத்திரப் பெயருடன் ‘திரு’ எனும் அடைமொழியும் சேர்த்து சொல்லப்படுகிறது. அதிலொன்று... திருவாதிரை. இது, சிவபெருமானுக்கு உரிய நட்சத்திரம். இன்னொன்று... திருவோணம். இது பெருமாளுக்கு உரிய நட்சத்திரம்.

ஒவ்வொரு மாதமும் வருகிற திருவோண நட்சத்திர நாள் என்பதே விரதம் மேற்கொள்ளவேண்டிய அற்புதமான நாள்தான். அதேசமயம், சில மாதங்களில் வரக்கூடிய திருவோணம் மேலும் முக்கியத்துவம் பெறுகிறது. மார்க்கண்டேயனின் மகளாக அவதரித்த பூமாதேவியை, பங்குனி மாத திருவோண நட்சத்திர நாளில்தான், ஒப்பிலியப்பப் பெருமாள் மணந்துகொள்வதற்காக பெண் கேட்டார் என்கிறது புராணம்!

அதேபோல், ஆவணி மாத திருவோணம்தான், ஓணம் பண்டிகையாகவே கொண்டாடப்படுகிறது. இத்தனை மகிமைகள் மிகுந்த திருவோண நட்சத்திர நாளில், பெருமாள் வழிபாடு செய்வதும் விரதம் மேற்கொண்டு விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வதும் மிகுந்த பலன்களைக் கொடுக்கவல்லவை என்கிறார் ரவி பட்டாச்சார்யர்.

திருவோண நட்சத்திர விரதத்தை எவர் வேண்டுமானாலும் அனுஷ்டிக்கலாம். மிக எளிய வழிபாட்டு முறைகளையே சொல்லிவைத்திருக்கிறார்கள். அதேபோல், வயதானவர்கள் வீட்டில் இருந்தே இந்த விரதத்தை மேற்கொள்ளலாம். மாதந்தோறும் வருகிற ஏதேனும் ஒரு திருவோண நட்சத்திர நாளில் மட்டும் விரதம் மேற்கொண்டாலும், ஒவ்வொரு திருவோண நாளிலும் விரதம் இருந்தாலும் சந்திர தோஷம் முதலான தோஷங்களில் இருந்து விடுபடலாம் என்கிறார் ரவி பட்டாச்சார்யர்.

சந்திர தோஷம் இருப்பவர்களுக்கு மனநிலையில் சீரற்ற தன்மை இருக்கும். எப்போதும், எதற்கு எடுத்தாலும் ஒருவித பதற்றம் இருக்கும். திருவோண நட்சத்திரத்தில் பெருமாளுக்கு விரதமிருந்து வழிபாடு செய்தால் சந்திர தோஷம் முற்றிலுமாக நீங்கி நல்வாழ்வு பிறக்கும் என்பதை ஜோதிட சாஸ்திரமும் தெரிவிக்கிறது.

அன்று மாலையில் சந்திர தரிசனம் செய்து சந்திரனின் அருளை முழுமையாக பெறலாம். மேலும் அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று பெருமாளை கண் குளிரத் தரிசித்துப் பிரார்த்திக்கலாம்.

முதலில், திருவோண நட்சத்திர நாட்களை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். திருவோண நட்சத்திரத்திற்கு முந்தைய நாள் இரவே உணவேதும் உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும். இயலாதவர்கள், முந்தைய நாளின் இரவில், பழங்கள் எடுத்துக்கொள்ளலாம். அல்லது இட்லி முதலான எளிய, ஜீரணமாகக் கூடிய உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.

அன்று இரவில் பெருமாள் மந்திரங்களை உச்சரிப்பதும் விஷ்ணு சகஸ்ரநாமம் படிப்பதும் நல்ல பலன்களைத் தந்தருளும். மறுநாள்... திருவோண நட்சத்திரநாள். அதிகாலையில் எழுந்து நீராடி, பெருமாள் கோயிலுக்குச் சென்று, அவருக்கு துளசி மாலை சார்த்தி வழிபடலாம். கோயிலுக்குச் செல்ல முடியாதவர்கள், வீட்டிலேயே பூஜை அறையில் பெருமாளுக்கு துளசி மாலை சாற்றி விளக்கேற்றி வழிபடலாம், தவறில்லை!

பூஜையில் துளசி தீர்த்தம் வைத்து அந்த தீர்த்தத்தைப் பருகி வேண்டிக்கொள்வது விசேஷமானது. மதியம் எடுத்துக் கொள்ளும் உணவில் உப்பு சேர்க்கக்கூடாது. உப்பு சேர்க்காத உணவை சாப்பிட்டால் ஒப்பிலியப்பனின் அருளாசி பரிபூரணமாக கிடைக்கும் என்கிறார் ரவி பட்டாச்சார்யர்.

அன்றைய நாளில், மாலையில் நெய்விளக்கு ஏற்றி பெருமாளுக்கு கற்கண்டு நைவேத்தியம் செய்து பிரார்த்திக்கலாம். இரவில் பால் மற்றும் பழம் போன்றவற்றை எடுத்துக் கொண்டு விரதத்தை நிறைவு செய்யலாம். திருவோண விரதத்தை பக்தி சிரத்தையுடன் வழிபாடு செய்யும்போது, நம் தீராத நோய்கள் அனைத்தும் குணமாகும். மதிய வழிபாடு செய்வதால் சகல செல்வங்களும் நம்மை வந்துசேரும். மாலை வேளையில் வழிபடுவதால், இதுவரை செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கப்பெறலாம். இரவில் வழிபட்டுப் பிரார்த்தனை செய்து பூஜிப்பதால், முக்தி கிடைப்பது நிச்சயம்!

மாதந்தோறும் திருவோண நட்சத்திர நாளில், விரதம் மேற்கொண்டு பெருமாளை ஸேவித்து வந்தால், ஏழு பிறவியிலும் பதினாறு வகையான செல்வங்களைப் பெற்று, நிம்மதியும் நிறைவுமாக வாழலாம் என்பது ஐதீகம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in