திருவண்ணாமலை பெளர்ணமி கிரிவல நேரம்: ஆலய நிர்வாகம் அறிவிப்பு!

திருவண்ணாமலை கிரிவலம்
திருவண்ணாமலை கிரிவலம்

திருவண்ணாமலையில் பெளர்ணமியில் கிரிவலம் வருகிற நேரத்தை கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

’நினைத்தாலே முக்தி தரும் திருத்தலம்’ என்று போற்றப்படும் ஒப்பற்ற திருத்தலம் திருவண்ணாமலை. இந்த உலகில் நாம் எங்கிருந்தாலும் அங்கிருந்தபடி ‘திருவண்ணாமலை’ என்றோ ‘அண்ணாமலையார்’ என்றோ ‘அண்ணாமலையானுக்கு அரோகரா’ என்றோ நாம் மனதார நினைத்துவிட்டாலே போதுமாம்... நமக்கு முக்தி கிடைப்பது உறுதி என்று திருவண்ணாமலை திருக்கோயிலின் ஸ்தல புராணம் விவரிக்கிறது.

மலையே சிவம்; சிவமே மலை என பிரம்மாண்டமாகத் திகழும் திருவண்ணாமலை எனும் புண்ணிய க்ஷேத்திரத்துக்கு இந்த உலகிலிருந்து எங்கிருந்தெல்லாமோ பக்தர்கள் வருகை தந்துகொண்டே இருக்கின்றனர்.

கோயிலும் கோபுரமும் பிரம்மாண்டம். பிராகாரங்களும் சந்நிதிகளும் அழகு மிகுந்தவை. அருணகிரிநாதர் அவதரித்த திருத்தலம். அவரை முருகப்பெருமான் ஆட்கொண்ட திருத்தலம். மகான்கள் வாழ்ந்த பூமி; சூட்சுமமாக இன்றைக்கும் வாழ்ந்துகொண்டிருக்கிற பூமி என்றெல்லாம் திருவண்ணாமலையின் சிறப்புகளை விவரித்துக் கொண்டே போகலாம்.

கோயிலுக்குப் பின்னே உள்ள மலையே சிவலிங்கமாகப் போற்றப்படுகிறது. வணங்கப்படுகிறது. கோயிலின் கருவறையில் குடிகொண்டிருக்கும் மூலவரை வணங்கிவிட்டு, நாம் எப்படி கோஷமாக பிராகார வலம் வருவோமோ... அதேபோல், மலையையே சிவலிங்கமாக நினைத்து, அந்த சிவலிங்கத்திருமேனியை அதாவது மலையை வலம் வருவதுதான் சிறப்பான வழிபாடு இங்கே!

தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருகிறார்கள். கிரி என்றால் மலை என்று அர்த்தம். பெளர்ணமியில் கிரிவலம் வருவது ரொம்பவே மகத்துவம் வாய்ந்தது. இந்த நாளில், சிவனாரின் அருளைப் பெறுவதுடன் சூட்சும ரூபமாக உலா வரும் எண்ணற்ற மகான்களின் குருவருளையும் பெறலாம் என்பது ஐதீகம்.

ஒவ்வொரு பெளர்ணமியின் போதும் கிரிவலம் வருவதற்கான நேரத்தை கோயில் நிர்வாகம் வெளியிடுவது வழக்கம். பஞ்சாங்கம் பார்த்து, உரிய பெளர்ணமி திதியைக் கொண்டு இந்த நேரம் கணக்கிட்டுச் சொல்லப்படுகிறது.

அண்ணாமலையார்
அண்ணாமலையார்

அக்டோபர் 9ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பெளர்ணமி நன்னாள். இந்த நன்னாளில், கிரிவல நேரத்தை ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது. ‘புரட்டாசி மாத பெளர்ணமியான 9-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, அதிகாலை 4.09 மணிக்கு தொடங்கி, மறுநாள் (10-ம் தேதி) திங்கட்கிழமை அதிகாலை 3.11 மணிக்கு பெளர்ணமி கிரிவலம் நிறைவு பெறுகிறது’ என அறிவித்திருக்கிறது.

அண்ணாமலையானுக்கு அரோகரா!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in