அனுமன் வாகனத்தில் அருள்பாலித்த ஏழுமலையான்

திருப்பதி பிரம்மோற்சவம் இன்று ஆறாவது நாள்
அனுமன் வாகனத்தில் மலையப்ப சுவாமி...
அனுமன் வாகனத்தில் மலையப்ப சுவாமி...

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் 6-ம் நாள் விழா இன்று விமர்சையாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி இன்று காலையில் அனுமன் வாகனத்தில் மலையப்பர் கோதண்டராமராய் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் திருமலையில் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த 27-ம் தேதி மாலை கொடியேற்றத்துடன் தொடங்கிய பிரம்மோற்சவ விழா, வரும் 5-ம் தேதி அதிகாலை சக்கர ஸ்நானத்துடன் நிறைவடைய உள்ளது. திருமலையில் பிரம்மோற்சவ விழாவில் கடந்த 2 ஆண்டுகளாக கரோனா பரவல் காரணமாக வாகன சேவைகள் ஏதும் மாட வீதிகளில் நடத்தப்படவில்லை. தற்போது நிலைமை சீராகி வருவதால் இம்முறை பலத்த ஏற்பாடுகளுடன் வாகன சேவைகளுடன் கூடிய பிரம்மோற்சவ விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இதனையொட்டி வழக்கத்திற்கும் மாறாக அதிகமான பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க திருமலையில் குவிந்த வண்ணம் உள்ளனர். அத்துடன் புரட்டாசி மாதம் என்பதாலும் அதிகமான பக்தர்கள் திருமலைக்கு படையெடுத்து வருகின்றனர்.

இதுவரை பிரம்மோற்சவத்தின் 5 நாள் திருவிழாக்கள் விமர்சையாக நடந்துமுடிந்துள்ள நிலையில் இன்று 6-ம் நாள் விழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி இன்று காலை 8 மணி அளவில் வாகன மண்டபத்தில் இருந்து, அனுமன் வாகனத்தில் மலையப்பர் கோதண்டராமர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் நான்கு மாட வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

அப்போது மாட வீதிகளில் திரண்டிருந்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் மலையப்ப சுவாமியை வழிபட்டனர். அனுமன் வாகனத்தை தொடர்ந்து இன்று மாலை திருமலையில் தங்கத் தேரோட்டம் நடைபெற உள்ளது. இதில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் மலையப்பர் 4 மாட வீதிகளில் தங்கத் தேரில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். தங்கத் தேரை பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்து வழிபடுவர் என்பது குறிப்பிடத் தக்கது. தங்கத் தேர் பவனியைத் தொடர்ந்து இரவு கஜ (யானை) வாகனத்தில் மலையப்பர் வீதி உலா உற்சவம் நடைபெறுகிறது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தனது குடும்பத்தாருடன்...
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தனது குடும்பத்தாருடன்...

இன்று காலை நடைபெற்ற வாகன சேவையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உதய் உமேஷ் லலித் தனது குடும்பத்துடன் கலந்துகொண்டு ஏழுமலையானை தரிசித்தார். அவருக்கு தேவஸ்தானம் சார்பில் தரிசன ஏற்பாடுகள் செய்யப்பட்டு, தீர்த்த, பிரசாதங்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. நான்கு மாட வீதிகளிலும் வாகன சேவையில் பங்கேற்ற அவர், பக்தர்களை பார்த்து கையசைத்தும். நடன கோஷ்டியினரை உற்சாகப்படுத்தியபடியும் வந்தார். தலைமை நீதிபதி வருகையையொட்டி ஆந்திரா, தெலங்கானா மற்றும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளும் அவருடன் அனுமன் வாகன சேவையில் கலந்து கொண்டனர்.

மோகினி அவதாரத்தில்...
மோகினி அவதாரத்தில்...

முன்னதாக, நேற்று காலையில் மோகினி அவதாரத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி நான்கு மாட வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in