மோகினி அவதாரத்தில் எழுந்தருளிய ஏழுமலையான்

திருப்பதி பிரம்மோற்சவம் 5-ம் நாள் நிகழ்வுகள்
சர்வ பூபால வாகனத்தில் மலையப்பர்...
சர்வ பூபால வாகனத்தில் மலையப்பர்...

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாள் உற்சவம் இன்று வழக்கமான உற்சாகத்துடன் நடந்துவருகிறது. இதையொட்டி இன்று காலையில் மோகினி அவதாரத்தில் ஏழுமலையான் எழுந்தருளினார். ஸ்ரீகிருஷ்ணரும், மோகினி அவதாரமாக எழுந்தருளிய மலையப்பரும் 2 பல்லக்குகளில் 4 மாட வீதிகளில் உலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து இன்று இரவு 7 மணியளவில் கருட வாகனத்தில் உற்சவரான மலையப்பர் திருமாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இதனையொட்டி திரளான பக்தர்கள் தமிழகம், ஆந்திரம், கர்நாடகம், தெலங்கானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்து திருமலையில் குவிந்துள்ளனர். மாட வீதிகள் முழுவதும் கருட சேவையைக் காண ஆயிரக் கணக்கில் பக்தர்கள் கூடி உள்ளனர். இவர்களுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் இலவச உணவு, பால், மோர், குடிநீர் உள்ளிட்டவையும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

திருவில்லிப்புத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையும் கிளியும்...
திருவில்லிப்புத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையும் கிளியும்...

இன்று புரட்டாசி மாதம் இரண்டாவது சனிக்கிழமை என்பதால் தமிழகத்திலிருந்து வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் திருமலையில் சற்று அதிகமாகவே காணப்படுகிறது. கருட சேவையையொட்டி வரலாறு காணாத வகையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. பாதுகாப்பு பணியில் திருமலையில் ஐந்தாயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அலிபிரி சோதனைச் சாவடி, மாட வீதிகள், திருக்கோயில் உள்ளிட்ட முக்கிய இடங்களில் கூடுதல் கண்காணிப்பு படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

திருப்பதி பிரம்மோற்சவம் கடந்த 27-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, இந்த மாதம் 5-ம் தேதி சக்கர ஸ்நானத்துடன் நிறைவடைகிறது. இதில் முக்கிய நாளான இன்று இரவு கருட சேவை நடைபெறுகிறது. இதனையொட்டி திருமலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக நேற்று மதியம் முதலே திருப்பதி - திருமலை வழித்தடத்தில் இருசக்கர வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. தற்போது திருமலையில் சுமார் 12 ஆயிரம் கார்கள் நிறுத்தப்பட்டிருப்பதால் இன்று மதியத்திற்கு மேல் திருமலைக்கு கார்கள் செல்லவும் அனுமதி இருக்காது என கூறப்படுகிறது. இதனால் மதியத்துக்கு மேல் வரும் அனைத்து பக்தர்களும் பேருந்து மூலமாகவே திருமலைக்கு வரவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, பிரம்மோற்சவத்தின் நான்காம் நாளான நேற்று இரவு சர்வ பூபால வாகனத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் மலையப்பர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in