திருப்பதி பிரம்மோற்சவம் 7-ம் நாள்: சூரிய பிரபை வாகனத்தில் அருள்பாலித்த மலையப்பர்

திருப்பதி பிரம்மோற்சவம் 7-ம் நாள்:
சூரிய பிரபை வாகனத்தில் அருள்பாலித்த மலையப்பர்

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் 7-ம் நாளான இன்று காலை, சூரிய பிரபை வாகனத்தில் உற்சவ மூர்த்தியான மலையப்பர் சூரிய நாராயணராக எழுந்தருளி அருள்பாலித்தார்.

கரோனா பரவலை தடுக்கும் விதத்தில், இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழா ஏகாந்தமாக நடத்தப்பட்டு வருகிறது. இதில், ஏழுமலையான் கோயிலுக்குள் உள்ள திருக்கல்யாண உற்சவ மண்டபத்தில் வாகன சேவைகள் வைகானச ஆகம முறைகளின்படி நடந்து வருகின்றது. முன்னதாக, 6-ம் தேதி செவ்வாய்கிழமை இரவு கஜ வாகனத்தில் (யானை) உற்சவரான மலையப்பர் காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சிகளில் ஜீயர்கள், திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி. சுப்பாரெட்டி, தலைமை நிர்வாக அதிகாரி ஜவஹர் ரெட்டி மற்றும் தேவஸ்தான உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பிரம்மோற்சவத்தை முன்னிட்டு உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி சமேதமாய் மலையப்பருக்கு மாலை வேளையில், சிறப்பு திருமஞ்சன நிகழ்ச்சிகள் நடப்பது ஐதீகம். இந்த திருமஞ்சனத்தில், உற்சவ மூர்த்திகளுக்கு உலர் திராட்சை, முந்திரி, பாதாம், பிஸ்தா மற்றும் உலர் பழங்கள், ஆப்பிள், திராட்சை, அன்னாசி, சீனி, ஆரஞ்சு போன்ற பல விதமான பழங்களால் ரங்கநாயக மண்டபம் கண்ணைக் கவரும் விதத்தில் அலங்கரிக்கப்படும். அதுபோன்ற அலங்காரம் இன்று மாலை செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in