திருக்கார்த்திகை: சிவ- பார்வதி - கார்த்திகேய வழிபாடு!

- ‘ஓம் நமசிவாய’ சொன்னாலே புண்ணியம்!
திருக்கார்த்திகை: சிவ- பார்வதி - கார்த்திகேய வழிபாடு!

திருக்கார்த்திகைத் திருநாளில், சிவனாரையும் பார்வதியையும் கார்த்திகேயனையும் மனதார வழிபடுவோம். இல்லம் முழுக்க, தீபங்களை ஏற்றி வைத்து, ‘ஓம் நமசிவாய’ என்று சொன்னாலே, புண்ணியம் கிடைக்கப் பெறலாம் என்பது ஐதீகம்!

மாதந்தோறும் வருகிற கார்த்திகை நட்சத்திரம் போல், கார்த்திகை மாதத்தில் வருகிற கார்த்திகை நட்சத்திர நாளை சாதாரணமான, வழக்கமான கார்த்திகை விரத நாளாகக் கருதக் கூடாது என்கிறார்கள் ஆச்சார்யர்கள். மிகவும் மகோன்னதமான நாள் என்றும் சாந்நித்தியம் நிறைந்த நாள் என்றும் தெரிவிக்கிறார் பாலாஜி சாஸ்திரிகள். கார்த்திகை மாத திருக்கார்த்திகையின் பெருமைகளையும் சிறப்புகளையும் விவரித்துக் கொண்டே இருக்கலாம் என்று புகழ்கின்றன ஞானநூல்கள்.

திருக்கார்த்திகை குறித்த வேறு விசேஷத் தகவல்களையும் ஞான நூல்கள் விவரிக்கின்றன. கார்த்திகை நட்சத்திரத்தை அக்னி நட்சத்திரம் என்று ஜோதிட நூல்கள் தெரிவிக்கின்றன. இந்த நட்சத்திர மண்டலத்தைச் சூரியன் கடக்கும் வேளையில், வெயில் அதிகமாக இருக்கும். நெருப்புக் கோளமான சூரியனும் அக்னி வடிவான இந்த நட்சத்திரக்கூட்டமும் சேர்ந்திருக்கும் காலத்தில் வெயில் அதிகமாக இருக்கும். அதனால்தான் கோடையில் வெயில் தகிக்கும் காலத்தை அக்னி நட்சத்திரம் என்றும் கத்திரி என்றும் கூறுகின்றனர்.

அப்போது வெம்மையைக் குறைக்க வேண்டி, சிவலிங்கத்துக்கு மேல் ‘தாரா பாத்திரம்’ (சிறுதுளை கொண்ட பாத்திரம் இது. லிங்கத்துக்கு மேலாக தொங்கவிடப்பட்டிருக்கும். இதில் நிரப்பப்படும் நீரானது தாரையாக லிங்கத்தின் மீது விழுந்தபடியே இருக்கும்) அமைப்பதும் பெருமானுக்குத் தயிர்சாதம் நிவேதிப்பதும் நிகழும். அதேபோல, கார்த்திகை மாதத்தில், திருக்கார்த்திகை நன்னாளில், ஏதேனும் ஒரு சிவாலயத்துக்கு, சிவலிங்கத் திருமேனிக்கு தாராபாத்திரம் வழங்குவதும் நம்மால் முடிந்த அளவுக்கு தயிர்சாதம் அன்னதானமாகச் செய்வதும் மகா புண்ணியம்.

கார்த்திகை நட்சத்திரத்துடன் முழுமதி சேரும் காலத்தில், பனியும் குளிருமாக இருக்கும். இப்படி முழுமதியும் கார்த்திகையும் இணைவதே கார்த்திகை மாதம் என விவரிக்கிறது பஞ்சாங்கம். இப்படியான குளிர் மிகுந்த கார்த்திகையின் முழுமதி நாளில், சிவபெருமான் ஜோதிப் பிழம்பாகக் காட்சி தந்து அருள்பாலிக்கிறார். அவர், அக்னி மண்டலத்தின் நடுவில் உமையொரு பாகனாக திருநடனம் புரிந்து திருக்காட்சி தருகிறார். அதுவே கார்த்திகை தீபத் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.

திருக்கார்த்திகை என்பது அப்பன் சிவனுக்கும் விசேஷம். அவன் தன் இடபாகத்தைக் கொடுத்த அம்பிகைக்கும் விசேஷம். இவர்களின் மைந்தன் கார்த்திகேயக் கடவுளுக்கும் சிறப்புக்கு உரிய நன்னாள்.

மேலும் செவ்வாய்க்கிழமையான டிசம்பர் 6ம் தேதி திருக்கார்த்திகை தீபத் திருநாள் அமைந்திருப்பது கூடுதல் பலன்களைத் தந்தருளும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

திருக்கார்த்திகை தீப நன்னாளில், தென்னாடுடைய சிவனை வணங்குவோம். ‘ஓம் நமசிவாய’ மந்திரத்தை ஜபிப்போம். ‘ஓம்சக்தி பராசக்தி’ என்று சொல்லி அம்பிகையைக்கொண்டாடி விளக்கேற்றுவோம். ‘ஓம் சரவணபவ’ என்று சொல்லி கார்த்திகேயக் கடவுளைப் போற்றித் துதிப்போம்.

நம் வாழ்வில் இதுவரை அடையாத புகழையும் பெருமைகளையும் திருக்கார்த்திகை தீபத் திருநாள் வழிபாடு தந்தருளும் என்பது ஐதீகம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in