தில்லையம்பல நடராஜா..!

தில்லையம்பல நடராஜா..!

வைஷ்ணவத்தில் கோயில் என்றால் அது ஸ்ரீரங்கத்தைக் குறிக்கும். அதேபோல், சைவத்தில் கோயில் என்றாலே சிதம்பரம் திருக்கோயிலைக் குறிக்கும். சிதம்பரம் என்றாலே தில்லை எனும் பழம்பெருமை மிக்க பெயரும் ஆடலரசன் எனப் போற்றப்படுகிற ஸ்ரீநடராஜ பெருமானும் நம் நினைவுக்கு வருவது இயல்புதானே!

தில்லை எனும் மரங்கள் சூழ்ந்திருந்ததால் தில்லையம்பதி என அழைக்கப்பட்டது. இப்போது சிதம்பரம் என்றால்தான் தெரியும். புலிக்கால் முனிவர் என்று சொல்லப்படுகிற வியாக்ரபாதருக்கும், ஆதிசேஷனின் அவதாரமான பதஞ்சலி முனிவருக்கும் தைப்பூசத் திருநாள் அன்று தில்லையில் இறைவன் ஆனந்த திருநடனக் காட்சி அளித்தான் என்கிறது சிதம்பரம் திருத்தல புராணம். அவர்களுக்குக் காட்சியளித்தது முதல், ஆனந்தத் தாண்டவ மூர்த்தியாக எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.

இரண்டு முனிவர்களுக்கும் இறைவன் காட்சியளித்த இடம் சித்சபை எனப்படுகிறது. இதுவே ’திருச்சிற்றம்பலம்’ என்பதாக விவரிக்கின்றன புராணங்கள். இங்குதான் நடராஜ பெருமான் எழுந்தருளியுள்ளார். இதன் மேற்கூரை தங்கத்தால் வேயப்பட்டுள்ளது. சிறு அம்பலம் என்பதே சிற்றம்பலம். சிறிய வெளி என்பதே இதன் அர்த்தம். அம்பலம் என்றால் வெளி, ஆகாயம் என்று பொருள். நம் இதயத்தில் ஒரு சிறு வெளி இருப்பதாகவும் அதில் கட்டைவிரல் அளவே நம் ஆன்மா இருப்பதாகவும் கடோபநிஷத் எனும் நூல் விவரிக்கிறது.

அந்த ஆன்மாவுக்குள் ஆன்மாவாய் இறைவன் ஆனந்த நடனம் ஆடிக்கொண்டிருப்பதாக சிவாகமங்கள் தெரிவிக்கின்றன என்கிறார் சிதம்பரம் கோயிலின் வெங்கடேச தீட்சிதர்.

’’அந்தச் சிறு வெளியை நம் சாஸ்திரங்கள் ‘தகர ஆகாயம்’ எனக் குறிப்பிடுகின்றன. தகரம் என்றால் சிறுமை. ஆகாயம் என்பது வெளி. இதுவே தமிழில் ‘சிற்றம்பலம்’ எனப்படுகிறது. இதனை நம்மைப் போன்றோர் உணர்ந்து வழிபட்டு பலன்களைப் பெறவேண்டும் என்பதற்காக, தில்லையில் திருச்சிற்றம்பலத்தில் இறைவன் திருக்காட்சியளித்துக்கொண்டிருக்கிறார்’’ என்கிறார்.

எல்லா சிவாலயத்திலும் கருவறையில் சிவலிங்கம் காணப்படும். அந்தக் கருவறையைச் சுற்றி தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், சண்டிகேசர், நடராஜர், பைரவர், பிட்சாடனர் முதலானோர் வீற்றிருப்பார்கள். ஆனால் திருச்சிற்றம்பலம் எனப்படும் சிதம்பரம் தலத்தில் ஆடல்வல்லானே முதல் மூர்த்தியாகக் கருதப்பட்டு வழிபடப்படுகிறார். சிவலிங்க மூர்த்தியான திருமூலநாதர் சித்சபைக்குப் பின்புறம்தான் எழுந்தருளியிருக்கிறார். ஆக, ஆலயத்தின் ஆதி நாயகனும் மூலநாயகனும் ஆடல்வல்லான் நடராஜப் பெருமான்தான்!

இறைவன் உயிர்களுக்காக 9 வித வடிவங்கள் எடுத்திருக்கிறான் என்கிறது புராணம். பிரம்மன், விஷ்ணு, ருத்ரன், மகேஸ்வரன், சதாசிவன், விந்து, நாதம், சக்தி, சிவம் என்பன அவை. இந்த நிலையை ’நவந்தரு பேதம்’ என சைவ சித்தாந்த நூல்கள் விவரித்திருக்கின்றன. இந்த ஒன்பது வடிவங்களுக்கும் மேலான நிலைதான் மகா சதாசிவ தாண்டவேஸ்வரர்! இந்த வடிவில்தான் சிதம்பரத்தில் அருள்பாலிக்கிறார் ஆடல் கலையின் நாயகன்.

நடராஜரின் வழிபாட்டின் போது ‘நடராஜர் வருகிறார்’ எனும் கட்டியம் கூறும் மரபு இன்றைக்கும் உள்ளது. எனவே இந்த அடிப்படையிலேயே தில்லை நடராஜப் பெருமான் மூல மூர்த்தியாக வழிபடப்படுகிறார்.

சிவபெருமானின் திருநட்சத்திரம், திருவாதிரை, மார்கழி மாதத்தின் திருவாதிரை ஆதிரைத் திருவிழாவாக, திருவாதிரைப் பெருவிழாவாக, ஆருத்ரா தரிசன விழாவாக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

இன்று, 06.01.2023 ஆருத்ரா தரிசனப் பெருவிழா. ஆடல்வல்லானின் அழகிய திருமுகத்தையும் திருப்பாதத்தையும் தரிசித்தாலே, கோடி புண்ணியம் என்கிறார்கள் தீட்சிதர்கள்.

தில்லை அம்பல நடராஜனை மெய்சிலிர்க்க தரிசிப்போம்; ‘நடராஜா’ கோஷமிட்டு,தில்லை நாயகனை வழிபடுவோம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in