தேய்பிறை அஷ்டமி... ஞாயிறு... ராகுகால வழிபாடு!

தேய்பிறை அஷ்டமி... ஞாயிறு... ராகுகால வழிபாடு!

தேய்பிறை அஷ்டமியில், ஞாயிற்றுக்கிழமையில் ராகுகால வேளையில் பைரவரை தரிசித்து வேண்டிக்கொண்டால், எதிர்ப்புகள் அனைத்தும் தவிடுபொடியாகும். தடைகள் மொத்தமும் தகர்ந்து, வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும்.

கலியுகத்துக்கு கால பைரவர் என்றொரு சொல் உண்டு. காலபைரவ வழிபாட்டை தொடர்ந்து மேற்கொண்டு வந்தால், கிரக தோஷங்களில் இருந்து விடுபடலாம். முன்னோர் ஆராதனை கிடைக்கப் பெறலாம் என்பது ஐதீகம்.

ஒவ்வொரு அஷ்டமியும் பைரவர் வழிபாட்டுக்கு உகந்த நாள். குறிப்பாக, தேய்பிறையில் வரக்கூடிய அஷ்டமி நாளில், பைரவரை வழிபடுவது இன்னும் நற்பலன்களை வாரி வழங்கக் கூடியது.

சிவன் கோயில்களில், கோஷ்டத்தைச் சுற்றி வரும் போது நிறைவாக சூரியனையும் பைரவரையும் தரிசிக்கலாம். சிவபெருமானால் சிருஷ்டிக்கப்பட்ட பைரவ மூர்த்தம், உக்கிரமானது. எதிரிகளை அழிக்கக்கூடியது. எதிரிகளின் பலத்தை அழித்து நமக்கு பலத்தையும் பலன்களையும் தந்தருளக்கூடியது.

பைரவருக்கு உகந்த மலர்களாக செந்நிற மலர்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. செவ்வரளி மலர்கள் கொண்டு பைரவரை அர்ச்சித்து வழிபடலாம். அதேபோல், தயிர்சாதம் அல்லது மிளகு கலந்த சாதம் நைவேத்தியமாகப் படைத்து வழிபடுவதும் நம் வாழ்வில் முன்னேற்றங்களை உண்டுபண்ணும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் ஹ்ரைம்

ஹரெளம் க்ஷம் க்ஷத்ரபாலாய நம:

என்பது பைரவரின் மூலமந்திரம்.

ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமி நாளிலும், பைரவரைத் தரிசித்து, பைரவரின் மூலமந்திரத்தைச் சொல்லி வழிபடுவதும் மனதாரப் பிரார்த்தனைகள் செய்து வருவதும் மிகுந்த விசேஷமானவை. ஞாயிற்றுக்கிழமையில் அஷ்டமி வரும்போது ராகுகாலத்தில் பைரவ தரிசனம் செய்து, வேண்டிக்கொண்டால், வேண்டிய வரங்களைத் தந்தருளுவார் பைரவர்.

ஞாயிற்றுக்கிழமையில் ராகுகாலம் என்பது மாலை 4.30 முதல் 6 மணி வரை. இந்த வேளையில், சிவாலயத்துக்குச் சென்று சிவ தரிசனமெல்லாம் முடித்துவிட்டு, பைரவருக்கு எதிரே அமர்ந்துகொண்டு, பைரவ மூல மந்திரத்தைச் சொல்லி, பிரார்த்தனை செய்வதற்கு மும்மடங்கு பலன்கள் கிடைப்பது உறுதி என்கிறார் பாஸ்கர குருக்கள்.

செம்டம்பர் 17-ம் தேதி மாலைக்குப் பின்னர் அஷ்டமி ஆரம்பித்து, மறுநாள் 18-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை வரை அஷ்டமி திதி இருக்கிறது. சில ஆலயங்களில், சனிக்கிழமை மாலையில் பைரவ வழிபாடு நடைபெறும். பெரும்பாலான ஆலயங்களில், ஞாயிற்றுக்கிழமையில், காலையும் மாலையும் பைரவ வழிபாடு செய்வார்கள். இந்த இரண்டு நாட்களுமே பைரவ வழிபாட்டுக்கு உகந்தவைதான் என்றாலும் ஞாயிற்றுக்கிழமை ராகுகால வேளையில் பைரவரைத் தரிசிப்பதும் பிரார்த்தனை செய்வதும் நம் வாழ்வில் இதுவரை இருந்த தடைகள் அனைத்தையும் தகர்ந்துவிடும். வாழ்வில் ஏற்றத்தையும் மாற்றத்தையும் தந்தருளுவார் பைரவர்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in