ரமணர் அவதரித்த திருச்சுழி மகிமை; சாபம் தீர்க்கும் திருமேனிநாதர் !

ரமணர் அவதரித்த திருச்சுழி மகிமை; சாபம் தீர்க்கும் திருமேனிநாதர் !

மதுரை அருப்புக்கோட்டைக்கு அருகே உள்ள அந்த ஊர் மிகப் பிரசித்தி பெற்ற கிராமம். திருச்சுழி எனும் புண்ணிய பூமி, விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் இருந்து சுமார் 14 கி.மீ. தொலைவில் உள்ளது. பகவான் ஸ்ரீரமண மகரிஷி அவதரித்த திருத்தலம். இயற்கை எழில் சூழ, ரம்மியமாக உள்ள இந்த ஊரில் கோயில்கொண்டிருக்கிறார் திருமேனிநாதர்.

சுமார் 2,000 வருடப் பழைமை மிக்க ஆலயம் என்கிறது ஸ்தல புராணம். இங்கே, லிங்க வடிவில் எழுந்தருளியுள்ள ஸ்ரீதிருமேனிநாதர், சுயம்பு மூர்த்தம் என்று போற்றுகிறார்கள். மேலும் ஸ்ரீபூமிநாதர், ஸ்ரீமணக்கோலநாதர், ஸ்ரீகல்யாண சுந்தரர், ஸ்ரீதிருமேனிநாதர் என நான்கு யுகங்களில் நான்கு திருநாமங்களுடன் காட்சி தந்து அருளினார் என ஸ்தல புராணம் விவரிக்கிறது. தற்போது கலியுகத்தில், திருமேனிநாதராக அருள்பாலிக்கிறார்.

பூமாதேவி, அரக்கர்களைக் கொன்றொழித்தாள். அந்தப் பாவம் தீருவதற்காக, இங்கே இந்தத் தலத்துக்கு வந்து, தீர்த்தம் உண்டு பண்ணினாள். அதில் நீராடி சிவனாரை தவம் மேற்க்கொண்டு வணங்கிவந்தாள். பாப விமோசனம் பெற்றாள் என்கிறது ஸ்தல புராணம். நம்மையெல்லாம் தாங்குகிற வல்லமை கொண்ட பூமாதேவியின் சாபத்தையே போக்கி, பாவங்களையே நீக்கி அருளிய சிவபெருமான் இவர் எனச் சொல்லிச் சிலிர்க்கிறார்கள் பக்தர்கள்.

சிவபெருமானின் தோழன் எனப் போற்றப்படும் சுந்தரமூர்த்தி நாயனார் இங்கு வந்து திருச்சுழிக்கு அருகில் மடம் ஒன்றில் தங்கினார். அன்றிரவு அவரின் கனவில் தோன்றிய சிவபெருமான், ’‘நான் அங்கு இருக்க, இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய் சுந்தரா?’’ என்று கேட்டார். அதன்படி, சிவனார் வழிகாட்டிய திசைக்கு வந்தார். அந்த இடத்தில் நின்றார். அவருக்கு திருக்காட்சி தந்தருளினார் ஈசன்!

இங்கே ஸ்ரீவிநாயகர், ஸ்ரீமுருகப்பெருமான், ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீபைரவர் ஆகியோர் தனிச்சந்நிதிகளில் காட்சி தருகிறார்கள். மேலும், பிரளய விடங்கர் எனும் பெயருடன் லிங்க மூர்த்தமாகக் காட்சி தருகிறார் சிவபெருமான். கோயிலின் ஸ்தல விருட்சம் புன்னை மரம். இப்படி புன்னை மரத்தை ஸ்தல விருட்சமாகக் கொண்ட ஆலயத்துக்குச் சென்று தரிசித்து வந்தாலே, நம் பாவமெல்லாம் தீரும் என்பது உறுதி!

பூமாதேவி, இங்கு வந்து சிவ பூஜை செய்து, தன் பாவங்களில் இருந்து நிவர்த்தி அடைந்தாள். எனவே, இங்கு வந்து வழிபடுவோருக்கு, ஏழேழு ஜென்மப் பாவங்களும் விலகிவிடும் என்பது ஐதீகம்! அதேபோல், திருமேனிநாதரை வழிபட்டால், நிலம் சம்பந்தமான பிரச்சினைகள் தீரும். அது தொடர்பான வழக்கில் வெற்றி கிடைக்கப் பெறலாம்.

நிலத்தில் ஏதேனும் சிக்கல், விளைச்சல் குறைபாடு என இருந்தால், நிலத்தில் இருந்து மண் எடுத்து வந்து, சிவனாரின் சந்நிதியில் வைத்து வேண்டிக்கொண்டு பிறகு நிலத்தில் அந்த மண்ணைக் கலந்து தூவினால், விவசாயம் செழிப்பதோடு, நிலம் தொடர்பான பிரச்சினைகளில் இருந்தும் சிக்கல்களில் இருந்தும் விடுபடலாம் என்கின்றனர் பக்தர்கள்.

இங்கே, துணைமாலையம்மன் எனும் அம்மன் சந்நிதியும் உள்ளது. திருமண தோஷம் உள்ள பெண்கள், செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் இங்கு வந்து அம்மனுக்கு மஞ்சள் சரடு வைத்து வேண்டிக்கொள்கிறார்கள். விரைவில் திருமண வரம் கிடைக்கப் பெறுவார்கள் என்பது உறுதி! துணைமாலையம்மன், சகாய முத்திரை காட்டி காட்சி தருவதால் ‘சகாயவல்லி’ என்றும் போற்றப்படுகிறாள்.

பொதுவாக, சில ஆலயங்களில், அம்மனுக்குக் கீழே ஸ்ரீசக்கரம் அமைந்து இருக்கும். இங்கு அம்மன் சந்நிதியில் உள்ள அர்த்தமண்டபத்தின் மேல்விதானத்தில், ஸ்ரீசக்கரம் அமைந்துள்ளது. இதனை ‘ஆகாய ஸ்ரீசக்கரம்’ என்கிறார்கள். .

மாசி மகம் மற்றும் மாசி மகா சிவராத்திரி, ஆனித் திருமஞ்சனம், ஐப்பசி அன்னாபிஷேகம், மார்கழி மாதம், தை மாதம் முதலான மாதங்களிலும் நாட்களிலும் சிறப்பு பூஜைகளும், விசேஷ ஆராதனைகளும் நடைபெறுகின்றன. அதேபோல், திருச்சுழி கோயிலில் ஏற்றப்படும் மோட்ச தீபம் விசேஷம். இறந்தவர்களின் திதி அல்லது அமாவாசை முதலான நாட்களில், இங்கு முன்னோர்களை நினைத்து மோட்ச தீபம் ஏற்றினால், நம்முடைய பித்ருக்களுக்கு மோட்ச கதி கிடைக்கும். இதில் மகிழ்ந்து பித்ருக்களும் நம்மை ஆசீர்வதிப்பார்கள் என்கிறார்கள் பக்தர்கள்!

ரமண பகவான் அவதரித்த புண்ணிய க்ஷேத்திரத்தில் கோயில் கொண்டிருக்கிற திருச்சுழி திருமேனிநாதரை வில்வம் சார்த்தி வணங்குவோம். பித்ரு சாபம் முதலான தோஷங்களில் இருந்து விடுபடுவோம்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in