கொடியேற்றத்துடன் தொடங்கியது தருமபுர ஆதீனத்தில் குருமுதல்வர் பெருவிழா!

தருமபுர ஆதீனம்
தருமபுர ஆதீனம்

தமிழகத்தை பரபரப்பாக்கிய தருமபுர ஆதீனம் பட்டினப் பிரவேசம், பல்லக்கில் ஆதீனகர்த்தர் என்கிற விவகாரத்தை கிளப்பிய தருமபுரம் ஞானபுரீசுவரர் கோயில் பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்திருமடத்தில் உள்ள ஞானாம்பிகை சமேத ஸ்ரீஞானபுரீசுவர சுவாமி கோயில் பெருவிழாவில் தான் ஆதீனகர்த்தரின் பட்டினப் பிரவேசம் நிகழ்வு நடைபெறும். மனிதனை மனிதன் சுமக்கும் அந்த நிகழ்வுக்கு தடை போடவேண்டும் என்று தி.க உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தின. அதன் விளைவாக இந்நிகழ்ச்சிக்கு மயிலாடுதுறை கோட்டாட்சியர் தடை விதித்தார்.

அதனையடுத்து பாஜக உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகள் மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தன. போராட்டங்கள் நடத்தவும் முயற்சித்தன. அதனால் பட்டினப் பிரவேசம் நிறைவுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை தமிழக அரசால் நீக்கப்பட்டது.

கொடியேற்றம்
கொடியேற்றம்

அதனையடுத்து ஞானாம்பிகை சமேத ஸ்ரீஞானபுரீசுவர சுவாமி கோயில் பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தருமபுர ஆதீனகர்த்தர் முன்னிலையில் திருவிழாவின் ரிஷபக்கொடி ஏற்றப்பட்டது.

பெருவிழாவையொட்டி மே 18-ம் தேதி இரவு 8 மணிக்குமேல் திருக்கல்யாண வைபவமும், ஸ்ரீகுருஞானசம்பந்தர் குருபூஜையும், மே 20-ம் தேதி காலை 8 மணிக்குமேல் திருத்தேர் உத்ஸவமும், மே 21-ம் தேதி காலை காவிரியில் தீர்த்தவாரியும் நடைபெறுகிறது. அதனைத்தொடர்ந்து, தருமபுரம் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீகுருஞானசம்பந்தரின் குருமூர்த்திகள் கமலை ஸ்ரீஞானப்பிரகாசர் குருபூஜை நடைபெறவுள்ளது.

அன்று காலை 10 மணிக்கு ஸ்ரீசொக்கநாத பெருமான் வழிபாடும், பகல் 1 மணிக்கு மாகேஸ்வர பூஜையும் நடைபெறுகிறது. மாலை 6.30 மணிக்கு குருமூர்த்தத்தில் எழுந்தருளி தருமபுரம் ஆதீனம் வழிபாடாற்றுகிறார். 11-ம் திருநாளான மே 22-ம் தேதி காலை 8 மணிக்கு தருமபுரம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் ஸ்ரீசொக்கநாத பெருமான் வழிபாடு செய்து, காலை 10 மணிக்கு ஸ்ரீஞானபுரீசுவரர் கோயிலில் வழிபாடாற்றுகிறார்.

அதனைத்தொடர்ந்து, மதியம் 12 மணிக்கு மாகேசுவர பூஜை நடைபெறுகிறது. அதன் பின்னர்தான் தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய பட்டினப் பிரவேசம் நிகழ்வு நடைபெறும். இரவு 10 மணிக்கு நடைபெறும் பட்டனப் பிரவேச நிகழ்வில், தருமபுரம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் சிவிகைப் பல்லக்கில் எழுந்தருளி வீதியுலா நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து கொலுக்காட்சி நடைபெறும்.

தடையும், தடையை விலக்க கோரி முழக்கங்களும் எழும்பிய நிலையில் தடை விலக்கப்பட்டு நடைபெற உள்ள பட்டினப் பிரவேசம் என்பதால் இந்நிகழ்வுக்கு இம்முறை பெருத்த முக்கியத்துவமும், எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in