ராமேஸ்வரம்: ஸ்படிக லிங்கத்தை தரிசித்தால் புண்ணியம்!

ராமேஸ்வரம் கோயில்
ராமேஸ்வரம் கோயில்

ராமேஸ்வரம் என்ற புண்ணிய பூமிக்கு வந்தாலே புண்ணியம். குறிப்பாக, தீர்த்த நீராடுவதும் பித்ருக் காரியங்கள் செய்வதும் நம் ஏழு ஜென்மப் பாவங்களைப் போக்கி புண்ணியங்களைத் தரும் என்பது ஐதீகம். முக்கியமாக, ராமேஸ்வரம் தலத்தில் ஸ்படிக லிங்கத்தை வாழ்வில் ஒருமுறையேனும் தரிசிக்கவேண்டும். தடைபட்ட பித்ரு தோஷங்கள், பித்ருக்களால் ஏற்படும் கோபங்கள் அனைத்தும் அகலும். சந்ததி தடையின்றி நிகழும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்று. ஞானசம்பந்தர், அப்பர் பெருமான் ஆகியோரால் பாடல் பெற்ற இந்தத் திருத்தலம், இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. ராமநாதபுரம் மன்னர் முத்துராமலிங்க சேதுபதி, கோயிலின் உலகப் புகழ்பெற்ற நீண்ட மூன்றாம் பிராகாரத்தை அமைத்தார். 1212 தூண்களுடன் கூடிய இந்தப் பிராகாரம் 690 அடி நீளம், 435 அடி அகலம் கொண்டது. காணக் கண்கோடி வேண்டும். அத்தனை அழகுடனும் நேர்த்தியுடனும் பிராகாரம் அமைக்கப்பட்டுள்ளது.

ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக்கடல்
ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக்கடல்

ராவணனைக் கொன்ற பாவம் தீர ஸ்ரீராமர் இங்கே வழிபட்டார் என்கிறது ஸ்தல புராணம்! மூலவர் பெயர் ராமநாதசுவாமி, அம்பாள் ஸ்ரீ பர்வத வர்த்தினி. ஸ்ரீராமபிரான், சீதையை மீட்க ராவணனிடம் போர் புரிந்து அவனைக் கொன்றார். ராவணனைக் கொன்ற பாவத்தைப் போக்குவதற்காக, மணலால் ஆன லிங்கத்தை வைத்து பிரதிஷ்டை செய்தார் ஸ்ரீராமர். இதனால், மூலவருக்கு ராமநாத சுவாமி என்றும் தலத்துக்கு ராமேஸ்வரம் என்றும் பெயர் அமைந்ததாகச் சொல்கிறது தல புராணம்!

காசி மற்றும் ராமேஸ்வரம் யாத்திரையானது, வாழ்வில் முக்கியத்துவம் வாய்ந்தது. காசி, ராமேஸ்வரம் யாத்திரை செல்பவர்கள் முதலில் ராமேஸ்வரத்தில் அக்னி தீர்த்தத்தில் நீராடி, மணல் மற்றும் தீர்த்தம் எடுத்துக்கொண்டு காசிக்குச் சென்று, கங்கையில் மணலை போட்டுவிட்டு, காசி விஸ்வநாதருக்கு அக்னி தீர்த்தத்தை அபிஷேகம் செய்யவேண்டும். பிறகு காசியிலிருது கங்கை தீர்த்தம் எடுத்து வந்து, ராமநாதருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

இங்கு கோயில் கொண்டுள்ள அம்பாள் பர்வதவர்த்தினி, கருணையே உருவானவள். சாந்த சொரூபினி. அம்பிகை பீடத்திற்கு கீழே ஆதிசங்கரர் நிறுவிய ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அம்பிகைக்கு சித்திரை மாதப் பிறப்பன்று மட்டும் சந்தனக் காப்பு அலங்காரம் செய்வது வழக்கம். அம்பாள் சந்நிதியின் பிராகாரத்தில் ஆதிசேஷன் மீது பள்ளி கொண்ட கோலத்தில் அழகுறக் காட்சி தருகிறார் மகாவிஷ்ணு.

முதல் பிராகாரத்தில் சீதை அமைத்த மணல் லிங்கத்திற்கு ராமர் பூஜை செய்யும் சந்நிதி அமைந்துள்ளது. பல்லாயிரக்கணக்கான ருத்ராட்சங்கள் சேர்த்துப் பின்னப்பட்ட பந்தலில் நடராஜர் காட்சி தருவது அற்புதம். யோகக் கலையில் தேர்ச்சி பெறவும், நாகதோஷ நிவர்த்திக்காகவும் இந்த சந்நிதியில் நாகவடிவில் உள்ள பதஞ்சலி முனிவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள் பக்தர்கள்.

இந்தத் தலத்தின் கூடுதல் சிறப்பு... ஸ்படிக லிங்க தரிசனம். கருவறையில் உள்ள ஆதிசங்கரர் ஸ்தாபித்த ஸ்படிக லிங்கத்திற்கு தினமும் காலை 5 முதல் 6 மணி முடிய சிறப்பு தரிசனம் நடைபெறும். இது வேறு எந்தத் தலத்துக்கும் இல்லாத சிறப்பு. இந்த ஸ்படிக லிங்கத்தைத் தரிசனம் செய்து, புண்ணிய தீர்த்தத்தில் வழிபட்டால், பித்ருக்களின் சாபத்தில் இருந்து விடுபடலாம். பித்ருக்களுக்கான நம் கடமையை முறையே செய்யத்தவறிய தோஷத்தில் இருந்து விடுபடலாம். பித்ருக்களின் ஆசீர்வாதத்துடன் சந்ததி பலத்துடன் வாழலாம் என விவரிக்கிறது ராமேஸ்வரம் ஸ்தல புராணம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in