திருமங்கையாழ்வாரின் பிரமிப்பு!

திருமங்கையாழ்வாரின் பிரமிப்பு!

வாழ்வில் பிரமிக்கத்தக்க வகையில் சில சம்பவங்கள் நிகழும். அவை எதிர்பாராத அதிர்ச்சியாகவோ, இன்ப அதிர்ச்சியாகவோ இருக்கலாம். அப்படி திருமங்கையாழ்வார் தன் வாழ்க்கையில் பிரமித்து நின்ற சம்பவம் ஒன்று உண்டு. இது, காஞ்சிபுரம் அஷ்டபுயக்கரத்தில் நடந்தது. அஷ்டபுயக்கரம் 108 திவ்ய தேசங்களில் 44-வது திவ்யதேசம் ஆகும். இங்கு பெருமாள் 8 கரங்களுடன் அருள்பாலிக்கிறார்.

இந்தப் பெருமாளைக் கண்டுதான் திருமங்கையாழ்வார் பிரமித்து நின்றார். 8 கரங்களுடன் காட்சி அளித்த பெருமாளைக் கண்டதும் “ஐயா நீர் யார்?” என்று கேட்க, பெருமாளும் “அட்டபுயக்கரத்தேன்” என்று பதில் அளிக்கிறார்.

ஒரு நாயகி பாவத்திலிருந்து, 8 கரங்கள் மட்டுமன்றி, பட்டு மேனி கொண்ட ஏந்திழையாரின் வண்ணத்தோடு வெண்சங்கின் தூய வெண்மையையும் கலந்து கருநீலக் கடலின் நிறத்தோடு சேர்த்து, அப்போது பூத்த காயாம் பூ வண்ணமும் குழைத்து, கருமையும், நீலமும், பழுப்பும் சேர்ந்த அதிசுந்தர வண்ண ரூபத்தில் விளங்கும் திருமால் என்று வர்ணிக்கலாமா என்று பல வண்ணங்களை மனதில் தன் எண்ணமாக நிலை நிறுத்துகிறார்.

பிரம்மதேவனின் யாகத்தை அழிக்க சரஸ்வதி தேவி பல நடவடிக்கைகளில் ஈடுபட்டாள். அப்போது ஒரு கொடிய காளியைப் படைத்து, அவளுடன் அரக்கர்களையும் ஏவினாள். பிரம்மதேவன் இதுகுறித்து திருமாலிடம் முறையிட்டதால், திருமால் 8 கைகளுடன், (வலதுபக்கம் சக்கரம், வாள், மலர், அம்பு ஏந்தி, இடது பக்கம் சங்கு, வில், கேடயம், தண்டாயுதம் ஏந்தி) தோன்றினார். அனைவரையும் அழித்தார். அதனால் இத்தலத்துக்கு ‘அஷ்டபுயக்கரம்’ என்ற பெயர் கிட்டியது.

நமக்கும் பிரமிப்புதான்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in