தவக்கோலத்தில் கோமதி அன்னை; இழந்ததையெல்லாம் தருவாள்!

தவக்கோலத்தில் கோமதி அன்னை
தவக்கோலத்தில் கோமதி அன்னை

தவக்கோலத்தில் காட்சி தரும் கோமதி அன்னையை தரிசித்தாலோ மனதார நினைத்தாலோ மகா புண்ணியம். இழந்ததையெல்லாம் தந்தருளுவாள் அன்னை என்கிறார்கள் பக்தர்கள்.

தபசு என்றால் தவம் என்று அர்த்தம். சிவனாரையும் மகாவிஷ்ணுவையும் நினைத்து கடும் தவம் புரிந்தாள் பார்வதிதேவி. கடும் தவமென்றால், சாதாரண தவமல்ல. ஊசி முனையில் ஒற்றைக்காலில் நின்றபடி தவம்புரிந்தாள் என்கிறது புராணம். அவர்கள், சிவனாகவும் இல்லாமல், விஷ்ணுவாகவும் இல்லாமல், சங்கரநாராயணராக இருந்து சிவம் வேறு, விஷ்ணு வேறு இல்லை என்பதை உமையவளுக்கும் உலகுக்கும் உணர்த்தும் விதமாகக் காட்சி தந்தனர். இதையே பார்வதிதேவி தபஸ் செய்த நிகழ்வு என்கிறோம். இந்தத் தலம் சங்கரன் கோவில். இந்தத் தலத்தின் அம்மை கோமதியன்னை.

சங்கரன்கோவில் மற்றும் சுற்றியுள்ள ஊர்களில் பெண் குழந்தை பிறந்தால், கோமதி என்றே பெயர் சூட்டுவார்கள். அந்த அளவுக்கு கோமதி அன்னை, இங்கே பிரசித்தம். ஆடி மாதத்தில், தவக்கோலத்தில் காட்சி தரும் அன்னையைத் தரிசிக்க, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து குவிவார்கள்.

ஆடித்தபசு விழா என்று அழைக்கப்படும் இந்த விழாவானது, 12 நாள் நடைபெறும் பிரம்மாண்டமான விழா. ஆடி மாதம் அம்பிகைக்கு உரிய மாதம். ஆடி மாதத்தில்தான் அம்பிகை தவமிருந்தாள். அம்பாள்தான் தவக்கோலத்தில் காட்சி தருகிறாள். எனவே அம்பாளை பிரதானப்படுத்துகிற விழா என்பதால், தேரில் கோமதி அன்னை மட்டுமே வீதியுலா வருவாள்.

விழாவின் நிறைவில், ஆலயத்திலுள்ள தபசு மண்டபத்தில் தவக்கோலத்தில் திருக்காட்சி தருவாள் கோமதி அம்பாள். மாலையில் சங்கரநாராயணர் அம்பாளுக்கு திருக்காட்சி தரும் அற்புத நிகழ்வு நடைபெறும்.

இந்த தபசுத் திருவிழாவின் போது, விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளைந்த பொருட்களை அம்பிகைக்கு காணிக்கையாக வழங்குவார்கள்.

சைவமும் வைணவமும் ஒன்று என்பதை சிவனாரும் விஷ்ணுவும் உலகுக்கு உணர்த்திய நன்னாள் என்பதால், பாகுபாடின்றி பக்தர்கள் வந்து தரிசிப்பார்கள். இந்த நன்னாளில், சங்கரன்கோவில் கோமதி அன்னையை தரிசிப்பதும் மனதார நினைப்பதும் மகாபுண்ணியம் என்று போற்றுகின்றனர் ஆச்சார்யப் பெருமக்கள்.

ஆடி மாத உத்திராட நட்சத்திர நாளில் தபசுக் காட்சி விழா சிறப்புற நடைபெறுகிறது. ஆடி பெளர்ணமிக்கு முன்னதாக வரும் இந்த விழாவைத் தரிசித்தாலே, இதுவரை வாழ்வில் இழந்தவற்றைத் திரும்பப் பெறலாம் என்பது ஐதீகம். இன்று ஆகஸட் 10-ம் தேதி புதன்கிழமை ஆடித்தபசு விழா நன்னாளில், சங்கரநாராயணரையும் கோமதி அன்னையையும் மனதாரப் பிரார்த்திப்போம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in