தாலி பலம் தரும் தை வெள்ளி தரிசனம்!

தாலி பலம் தரும் தை வெள்ளி தரிசனம்!

தை வெள்ளிக்கிழமை நாளில், பெண் தெய்வ வழிபாடு நற்பலன்களை வழங்கும். நம் குடும்பத்தைத் தழைக்கச் செய்யும். அம்பாளுக்கு உகந்த தை மாத வெள்ளிக்கிழமையில், அம்மன் கோயிலுக்குச் சென்று அவளை வணங்கினால், நம்மையும் நம் குடும்பத்தையும் வாழையடிவாழையென தழைக்கச் செய்வாள் தேவி.

செவ்வாய்க்கிழமையும் வெள்ளிக்கிழமையும் அம்பிகைக்கு உரிய அற்புதமான நாட்கள். அதனால்தான், செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில், சக்தி என்று போற்றி வணங்கப்படுகிற அம்மன் குடிகொண்டிருக்கும் திருத்தலங்களில் பெண்கள் முதலான பக்தர்கள் வணங்கி வழிபடுகிறார்கள்.

அந்த வகையில் தை மாத வெள்ளிக்கிழமைகள், அம்பாளுக்கு ரொம்பவே விசேஷமானவை. தை வெள்ளிக்கிழமையில், தவறாமல், வீட்டைத் தூய்மைப்படுத்தி, அபிராமி அந்தாதி, கனகதாரா ஸ்தோத்திரம் பாராயணம் செய்து வழிபடுவது, மனதில் தெளிவையும் செய்யும் தொழிலில் மேன்மையையும் கொடுக்கும் என்பது ஐதீகம்.

தை மாத வெள்ளிக்கிழமை நாளில், அருகில் உள்ள கோயிலுக்குச் சென்று, அம்பாளை தரிசனம் செய்யுங்கள். முடிந்தால், செந்நிற மலர்கள் சூட்டி வழிபடுங்கள். குறிப்பாக, செவ்வரளி மாலை சார்த்துங்கள்.

அடுத்த வாரமான 10-ம் தேதியும் தை வெள்ளிக்கிழமை. அது தை கடைசி வெள்ளிக்கிழமை. எனவே இந்த வெள்ளிக்கிழமையும் கடைசி வெள்ளிக்கிழமையும் மறக்காமல், அம்பிகையை தரிசிப்போம். அவளை ஆராதிப்போம்.

முக்கியமாக, வெள்ளிக்கிழமை ராகுகால வேளையில் (காலை 10.30 முதல் 12 மணி வரை) அம்மன் கோயிலுக்கு அல்லது அருகில் உள்ள சிவன் கோயிலுக்குச் சென்று, துர்கை சந்நிதியில் விளக்கேற்றி வழிபடுவோம். சகல தோஷங்களையும் கண் திருஷ்டி முதலானவற்றையும் நீக்கியருளுவாள் தேவி என்கிறது தேவி மகாத்மியம். எனவே வெள்ளிக்கிழமை நாளில், அம்பாளுக்கு செவ்வரளி மாலை சார்த்தி வேண்டிக் கொள்ளுங்கள். துர்கை சந்நிதியில் நெய் தீபம் ஏற்றி வழிபடுவோம்.

தை வெள்ளிக்கிழமையில் தவறாமல் அம்மனைத் தரிசித்து வணங்கி வழிபடுவதால் வேப்பிலைக்காரி குளிர்ந்து போகிறாள். இதில் நமக்கு அருளும் பொருளும் அள்ளித்தருகிறாள். சர்க்கரைப் பொங்கல், தயிர் சாதம், வெண்பொங்கல், கேசரி என ஏதேனும் பிரசாதம் நைவேத்தியம் செய்து, அக்கம்பக்கத்தினருக்கு வழங்குவோம். தனம் தானியம் பெருகச் செய்வாள் தேவி. வீட்டில் உள்ள திருஷ்டி முதலானவை நீங்கும். மங்கல காரியங்களை விரைவில் நடத்தித் தருவாள் அன்னை பராசக்தி!

‘ஓம் சக்தி பராசக்தி’ என்று 108 முறை சொல்லி, வீட்டில் உள்ள அம்மனின் படத்துக்கோ அல்லது சிலைக்கோ குங்குமத்தால் அர்ச்சித்து பிரார்த்தனை செய்து வணங்கினால், பெண்களுக்கு மாங்கல்ய பலம் தந்தருளுவாள் அம்பாள். மங்கல காரியங்களை நடத்திக் கொடுப்பாள் அம்மன்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in