தை அமாவாசை: ராமேஸ்வரத்து 22 தீர்த்தங்களின் மகிமைகள் என்னென்ன

தை அமாவாசை: ராமேஸ்வரத்து 22 தீர்த்தங்களின் மகிமைகள் என்னென்ன

வடக்கே காசி என்றால், தெற்கே ராமேஸ்வரம். வடக்கும் தெற்குமாக இருந்தாலும் இந்த இரண்டு க்ஷேத்திரங்களும் வருடம் 365 நாட்களும் தர்ப்பணம், திதி, பிண்டப் பிரதானம் முதலான பித்ருக் கடமைகளைச் செய்வதற்கு உகந்த திருத்தலங்கள் எனப் போற்றப்படுகின்றன.

ஸ்ரீராமர் வழிபட்ட திருத்தலம் ராமேஸ்வரம். அதுமட்டுமா? ஸ்ரீராமருக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட, இங்கே உள்ள புண்ணிய தீர்த்தங்களில் நீராடி, சிவலிங்க பூஜை செய்து, தோஷத்தில் இருந்து விடுபட்டார் என்கிறது ஸ்தல புராணம்!

மிகப்பிரம்மாண்டமான திருக்கோயில். கோயிலுக்கு அருகிலேயே அமைந்திருக்கிறது கடல். இதை அக்னி தீர்த்தம் என்கிறது புராணம். 3 பிராகாரம், 2,250 அடி சுற்றளவு கொண்டது. அந்தப் பிராகாரத்தில் 1,212 அழகிய தூண்கள் உள்ளன. அத்தனையும் சிற்ப நுட்பங்களும் அழகுற கட்டமைக்கப்பட்டுள்ளது.

எந்தத் தலத்திலும் இல்லாத வகையில், ராமேஸ்வரம் திருத்தலத்தில் 22 புண்ணிய தீர்த்தங்கள் உள்ளன. இந்த 22 புண்ணிய தீர்த்தங்களையும் அவற்றில் நீராடினால் கிடைக்கும் பலன்களையும் ஸ்தல புராணம் அழகுற விவரித்துள்ளது.

மகாலக்ஷ்மி தீர்த்தத்தில் நீராடினால், ஐஸ்வரியம் பெருகும். இல்லத்தில் தனம் - தானியம் பெருகும். சாவித்திரி, காயத்ரி, சரஸ்வதி முதலான தீர்த்தங்களில் நீராடினால், இதுவரை முன்னோர்களுக்கான சடங்குகளைச் செய்யாதவர்களும், சந்ததியே இல்லாதவர்களும் கூட நற்கதியை அடையலாம். மோட்சத்தை அடையலாம்!

இங்கே உள்ள சங்கு தீர்த்தத்தில் நீராடினால், நன்றி மறந்த பாவங்கள் தொலையும். சக்கர தீர்த்தத்தில் நீராடினால் இதுவரை இருந்து வந்த தீராத நோயும் தீரும். சேது மாதவ தீர்த்தத்தில் நீராடினால் செல்வம் கொழிக்கும். கடன் முதலான பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம். நள தீர்த்தத்தில் நீராடினால், இறைவனின் திருவடியை அடையலாம். சொர்க்கலோகத்தை அடையலாம்!

நீல தீர்த்தத்தில் நீராடினால், யாகம் செய்வதால் கிடைக்கக் கூடிய பலன்களைப் பெறலாம். கவாய தீர்த்தத்தில் நீராடினால், மனவலிமையைப் பெறலாம். மனதில் இருந்த குழப்பங்களும் வீண் பயமும் விலகும். கவாட்ச தீர்த்தத்தில் நீராடினால், தேக ஆரோக்கியம் உண்டாகும். மனதில் தெளிவு பிறக்கும். கந்தமான தீர்த்தத்தில் நீராடினால், இதுவரை நம் இல்லத்தில் இருந்த தரித்திரங்கள் அனைத்தும் விலகப் பெறலாம்! உணவு, உடை முதலானவற்றுக்கு தடையேதும் இல்லாத நிலையைப் பெறலாம்.

பிரம்மஹத்தி விமோசன தீர்த்தத்தில் நீராடினால், பிரம்மஹத்தி தோஷம் நீங்கும். பில்லி சூனிய ஏவல் முதலான தீயசக்திகள் நம்மை விட்டு அகலும். நம்மை நெருங்காதபடி இந்தத் தீர்த்தம் காத்தருளும். சந்திர தீர்த்தத்தில் நீராடினால், கல்வியில் சிறந்து விளங்கலாம். நினைத்த கல்வியை அடையப்பெறலாம். கல்வியில் இருந்த தடைகள் விலகும். சூரிய தீர்த்தத்தில் நீராடினால், ஞானமும் யோகமும் பெறலாம். கிரக தோஷங்கள் அனைத்தும் விலகும்.

சாத்யாம்ருத தீர்த்தத்தில் நீராடினால், தேவதைகளின் கோபத்தில் இருந்து விடுபடலாம். மேலும், அவர்கள் சூட்சுமமாக இருந்து நம்மை வழிநடத்துவார்கள். சிவ தீர்த்தத்தில் நீராடினால் சகல ஐஸ்வரியங்களையும் பெறலாம். சந்தான பாக்கியத்தைப் பெறலாம். ஆபரணச் சேர்க்கை கிடைக்கப் பெறலாம். சர்வ தீர்த்தத்தில் நீராடினால், சகல யோகங்களும் கிடைக்கும். சகல தோஷங்களில் இருந்தும் நிவாரணம் பெறலாம்! கயா, யமுனா மற்றும் கங்கா தீர்த்தங்களில் நீராடினால், இந்தப் பிறப்புக்கான முழுப்பயனையும் அடையலாம்.

நிறைவாக, கோடி தீர்த்தத்தில் நீராடினால், மகா புண்ணியம். ஸ்ரீராமர், சிவலிங்க அபிஷேகத்துக்குப் பயன்படுத்திய தீர்த்தம் இது. சிவனாரின் அருளையும் ஸ்ரீராமரின் அருளையும் பெற்று, நம்மை இல்லறத்திலும் வெளிவட்டார வாழ்விலும் நிம்மதியும் கெளரவமுமாக வாழவைக்கும் மகா தீர்த்தம் என்கிறது ஸ்தல புராணம்!

இந்த தீர்த்தங்களைத் தவிர, கடலிலேயே கலந்திருக்கிறது அக்னி தீர்த்தம். இதில் நீராடிவிட்டே தரிசனத்துக்குச் செல்கிறார்கள் பக்தர்கள். தீர்த்த நீராடுதல் என்பதே புண்ணியம். பாவங்களைப் போக்கவல்லவை. ராமேஸ்வரம் திருத்தலத்தில் உள்ள தீர்த்தங்களில் நீராடுவது மகா புண்ணியம். நம் பாவங்கள் அனைத்தும் நீங்கும். எந்தப் பிறவியிலோ செய்த புண்ணியங்கள் இந்தப் பிறவியில் நம்மை வந்தடையும்!

மிகமிகப் பழைமை வாய்ந்த புண்ணியத் திருத்தலமான ராமேஸ்வரம் ஸ்ரீபர்வத வர்த்தினி அம்பாள் சமேத ஸ்ரீராமநாதசுவாமி திருக்கோயில் உலகப் பிரசித்தி பெற்ற திருத்தலம்! பாடல் பெற்ற தலங்களில் ஒன்று. ஞானசம்பந்தர், அப்பர் பெருமான் ஆகியோரின் பாடல் பெற்ற திருத்தலம் இது என்கிறது ஸ்தல புராணம். .

இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்று. ராவணனைக் கொன்ற பாவம் தீருவதற்காக, ஸ்ரீராமர் இங்கே வழிபட்டார் என்கிறது ஸ்தல புராணம். மூலவர் பெயர் ராமநாதசுவாமி, அம்பாள் ஸ்ரீ பர்வத வர்த்தினி.

ஸ்ரீராமபிரான், சீதாதேவியை மீட்க ராவணனிடம் போர் புரிந்து அவனைக் கொன்றார். ராவணனைக் கொன்ற பாவத்தைப் போக்குவதற்காக, மணலால் ஆன லிங்கத்தை வைத்து பிரதிஷ்டை செய்தார் ஸ்ரீராமர். இதனால், மூலவருக்கு ராமநாத சுவாமி என்றும் தலத்துக்கு ராமேஸ்வரம் என்றும் பெயர் அமைந்தது.

காசியும் ராமேஸ்வரமும் மனித வாழ்வில் மிகவும் முக்கியத் துவம் வாய்ந்தது. காசி, ராமேஸ்வரம் யாத்திரை செல்பவர்கள் முதலில் ராமேஸ்வரத்தில் அக்னி தீர்த்தத்தில் நீராடி, மணல் மற்றும் தீர்த்தம் எடுத்துக்கொண்டு காசிக்குச் செல்வார்கள். கங்கையில் மணலை போட்டுவிட்டு, காசி விஸ்வநாதருக்கு அக்னி தீர்த்தத்தை அபிஷேகம் செய்வார்கள். பிறகு காசியிலிருது கங்கையின் தீர்த்தத்தை எடுத்து வந்து, ராமநாதருக்கு அபிஷேகம் செய்வது வழக்கம்!

இங்கு கோயில் கொண்டுள்ள பர்வத வர்த்தினி அம்பாள் மிகவும் சக்தி வாய்ந்தவள். அம்பிகையின் பீடத்திற்குக் கீழே ஸ்ரீஆதிசங்கரர் நிறுவிய ஸ்ரீசக்கரம் அமைந்திருப்பது இன்னும் சாந்நித்தியத்தைப் பெருக்கித் தந்துள்ளது. அம்பிகைக்கு சித்திரைப் பிறப்பன்று மட்டும் சந்தனக் காப்பு அலங்காரம் செய்வது வழக்கம். அம்பாள் சந்நிதியின் பிரகாரத்தில் ஆதிசேஷன் மீது பள்ளி கொண்ட திருக்கோலத்தில் பெருமாள் காட்சி தருவதும் இங்கே விசேஷம்!

அம்பாள் கோஷ்டத்தில், அஷ்டலட்சுமி மற்றும் மேற்கு நோக்கிய சண்டிகேஸ்வரி ஆகியோர் உள்ளனர். முதல் பிரகாரத்தில் சீதை அமைத்த மணல் லிங்கத்திற்கு ராமர் பூஜை செய்யும் சந்நிதி அமைந்துள்ளது.

பல்லாயிரக்கணக்கான ருத்ராட்சங்கள் சேர்த்து பின்னப்பட்ட அழகிய பந்தலில் ஸ்ரீநடராஜ பெருமான் அழகுறக் காட்சி தருகிறார். யோகக் கலையில் தேர்ச்சி பெறவும், நாகதோஷ நிவர்த்திக்காகவும் இந்த சந்நிதியில் நாகவடிவில் உள்ள பதஞ்சலி முனிவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள் பக்தர்கள். எனவே ராகு கேது தோஷம் போக்கும் தலமாகவும் ராமேஸ்வரம் போற்றப்படுகிறது.

இன்னொரு அதிசயம்... கருவறையில் ஆதிசங்கரர் வழிபட்ட ஸ்படிக லிங்கத்திற்கு தினமும் காலை 5 மணி முதல் 6 மணி முடிய சிறப்பு தரிசனம் நடைபெறும். அதைத் தரிசிப்பதற்காகவே எங்கிருந்தெல்லமோ பக்தர்கள் அதிகாலையிலேயே நீண்ட வரிசையில் நிற்பார்கள்.

ராமநாதபுரம் மன்னர் முத்துராமலிங்க சேதுபதி, கோயிலின் உலகப் புகழ் பெற்ற நீண்ட மூன்றாம் பிராகாரத்தை அமைத்தார் என்கிறது கல்வெட்டு. 1,212 தூண்களுடன் கூடிய இந்தப் பிராகாரம் 690 அடி நீளம், 435 அடி அகலமும் கொண்டது.

நான்கு பெரிய மதில்களால் சூழப்பட்டு அழகுறக் காட்சி தருகிறது ஆலயம். கிழக்கிலிருந்து மேற்காக 865 அடி நீளமும், வடக்கிலிருந்து தெற்காக 657 அடி நீளமும் கொண்டு, கிழக்கு மற்றும் மேற்காக இரண்டு பெரிய கோபுரங்களையும் கொண்டு திகழ்கிறது. உலகிலேயே நீளமான பிராகாரங்கள் கொண்டுள்ள இக்கோயிலின், கிழக்கு மற்றும் மேற்கு வெளிப் பிராகாரங்களின் நீளம் தனித்தனியே 400 அடிகள், வடக்கு மற்றும் தெற்கு வெளிப்பிராகாரங்களின் நீளம் தனித்தனியே 640 அடிகள் என அமைந்துள்ளன.

வாழ்வில் ஒருமுறையேனும் காசிக்குச் சென்றும் ராமேஸ்வரத்துக்குச் சென்றும் நம் முன்னோர்களுக்கு உரிய வழிபாட்டைச் செய்வது, ஏழு ஜென்மப் பாவங்களைப் போக்கி அருளும் என்பது ஐதீகம்!

தை அமாவாசை நன்னாளிலும் புரட்டாசி அமாவாசை நன்னாளிலும் ஆடி அமாவாசை நாளிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் ராமேஸ்வரத்துக்கு வந்து புனிதத் தீர்த்தமாடி, முன்னோர் வழிபாட்டைச் செய்கிறார்கள். ஒருமுறையேனும் ராமேஸ்வரம் திருத்தலத்தில் நம் காலடி பட்டாலே, நம் பாவங்களைத் தொலைக்கும் தருணம் வந்துவிட்டது என்று சொல்கிறார்கள் ஆச்சார்யர்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in