சுக்கிர வார சங்கடஹர சதுர்த்தி: இழந்ததையெல்லாம் தருவார் ஆனைமுகத்தான்!

சுக்கிர வார சங்கடஹர சதுர்த்தி: இழந்ததையெல்லாம் தருவார் ஆனைமுகத்தான்!

விநாயகப் பெருமான் திருக்கயிலாயத்தில் இருந்த தருணத்தில் அங்கே வந்த சந்திரன், விநாயகரின் உருவத்தைப் பார்த்து கேலியாகப் பேசினாராம். இதனால் கோபம் அடைந்த கணபதி, ‘சந்திரனின் ஒளியானது மங்கிப் போகட்டும்’ என சாபமிட்டார். இதனால் ஒளியை இழந்து மங்கிக்கொண்டே வந்த சந்திரன், சிவபெருமான், பிரம்மா, மகாவிஷ்ணு முதலானோரையெல்லாம் வணங்கி சாப விமோசனம் கேட்டார். ஆனால் அவர்கள் அனைவரும் ‘நீ யாரிடம் சாபம் வாங்கினாயோ அவரிடமே சரணடைந்து சாப விமோசனத்தைக் கேள்’ என அருளினார்கள்.

இதையடுத்து சந்திர பகவான், விநாயகப் பெருமானை நினைத்து கடும் தவம் மேற்கொண்டார். தவத்தின் பலனாக, மீண்டும் இழந்த ஒளியைப் பெற்றார் என்கிறது விநாயக புராணம். இந்த நாளே ஒவ்வொரு மாதமும் சங்கடஹர சதுர்த்தி நாளாக வணங்கப்படுகிறது.

சங்கடஹர சதுர்த்தியில் விரதம் மேற்கொண்டு விநாயகப் பெருமானை வழிபடும் பக்தர்கள் இருக்கிறார்கள். அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு, அருகில் உள்ள பிள்ளையார் கோயிலுக்குச் சென்றோ அல்லது ஆத்தங்கரையிலோ குளத்தங்கரையிலோ அரச மரத்தடியிலோ இருக்கும் பிள்ளையாரை தரிசித்து 11 முறை வலம் வந்து வேண்டிக்கொள்வார்கள்.

மேலும் அந்த நாளில் சாப்பிடாமல், உபவாசம் இருப்பவர்களும் உண்டு. சாப்பிடாமல் இருக்க இயலாதவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள், சிறுவர் சிறுமிகள் முதலானோர் சாப்பிடுவதில் தவறேதுமில்லை என்கிறார் பாலாஜி சாஸ்திரிகள்.

காலையில் பிள்ளையாரை வணங்கிவிட்டு பிறகு மாலையில் பிள்ளையாருக்குச் செய்யப்படும் அபிஷேக ஆராதனைகளில் பங்கேற்று, கண்ணாரத் தரிசித்து, மனதார் வேண்டிக்கொள்ளலாம். வீட்டில் பிள்ளையார் சிலையோ படமோ இருந்தால் அருகம்புல் மாலை சார்த்தி பிரார்த்தனை செய்யலாம். சர்க்கரைப் பொங்கல், கொழுக்கட்டை, சுண்டல் என ஏதேனும் ஒன்றை நைவேத்தியமாகப் படைத்து அக்கம்பக்கத்தாருக்கு வழங்கலாம்.

நல்ல வேலை கிடைக்கவில்லையே என வருந்துவோர், திருமண பாக்கியம் கைகூடவில்லையே எனக் கலங்குவோர், வாழ்வில் உயிரைத் தவிர சகலத்தையும் இழந்து நிற்கிறேன் என துக்கித்திருப்போர் சங்கடஹர சதுர்த்தி நாளில், விநாயகருக்கு அபிஷேகப் பொருட்கள் சமர்ப்பித்து, அருகம்புல் மாலை சார்த்து, 11 முறை வலம் வந்து வேண்டிக்கொண்டால், இழந்ததையெல்லாம் தந்தருளுவார் ஈசனின் மைந்தன் விநாயகப் பெருமான்!

இன்று நவம்பர் 11-ம் தேதி சங்கடஹர சதுர்த்தி. சுக்கிரவாரம் எனப்படும் வெள்ளிக்கிழமையில் வருகிற சங்கடஹர சதுர்த்தி. இதை சுக்கிர சதுர்த்தி என்றும் சுக்கிர சங்கடஹர சதுர்த்தி என்றும் போற்றுவார்கள். இந்த நாளில், மறக்காமல் கணபதியைத் தொழுவோம்.நம் கவலைகளையெல்லாம் தீர்த்துவைப்பான் ஆனைமுகத்தான். குறிப்பாக, மழை நேரத்தில் வெளியில் செல்வதைத் தவிர்த்துவிட்டு, இருந்த இடத்திலிருந்தே கணபதியை மனமுருக வேண்டுவோம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in