வெள்ளிக்கிழமையில் சுக்கிர ஹோரை வழிபாடு; சுபிட்சம் நிச்சயம்!

வெள்ளிக்கிழமையில் சுக்கிர ஹோரை வழிபாடு; சுபிட்சம் நிச்சயம்!

முன் ஜென்ம நம்பிக்கை இருந்தாலும் இல்லாவிட்டாலும் கஷ்டத்தைக் கடக்க கடவுளைச் சரணடைவதே எளிமையான வழி. ‘திக்கற்றவர்க்கு தெய்வமே துணை’ என்பார்கள். எத்தனை துயரங்கள் வந்தாலும் உரிய முறையில் வழிபாடுகளைச் செய்யச் செய்ய, முன்னைவினைப் பயன்களின் தாக்கம் குறையும். இறைசக்தியானது நம்மை மன்னித்து நம் தண்டனையைக் குறைக்கும் என்பதற்கான சாஸ்திர விளக்கங்களை எடுத்துரைக்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

அந்தக் கஷ்டம், இப்படியான கவலை என்று எதைச் சொன்னாலும் கடைசியில் தனம் எனும் பொருளாதாரத்தைச் சுற்றித்தான் நம் வாழ்க்கையே அடங்கியிருக்கிறது. அதனால்தான் மகாலட்சுமியை வழிபடச் சொல்கிறார்கள். சுக்கிர யோகம் கிடைக்க வேண்டுமென்றால், மகாலட்சுமியை, அம்பாளை, அம்பிகையை, தேவியரை வணங்கவேண்டும் என்கிறார் முநீஸ்வர சாஸ்திரிகள்.

வெள்ளிக்கிழமையை சுக்கிர வாரம் என்பார்கள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஹோரையானது ரொம்பவே விசேஷம். ராகுகாலம் போல, எமகண்டம் போல, நல்ல நேரம் போல ஹோரை நேரமும் உண்டு. வெள்ளிக்கிழமைகளில், அருகில் உள்ள அம்மன் கோயிலுக்குச் சென்றும் அம்பாள் குடிகொண்டிருக்கும் கோயிலுக்குச் சென்றும் பெருமாள் கோயிலில் உள்ள தாயார் சந்நிதிக்குச் சென்றும் வழிபடுவதே சிறப்பானதுதான். அதிலும் சுக்கிர ஹோரை நேரத்தில் வழிபட்டால் இன்னும் மட்டற்ற வரங்களையெல்லாம் கிடைக்கப் பெறலாம்.

நவக்கிரக தலங்களில் சுக்கிர பகவானுக்கு உரிய தலமும் இருக்கிறது. கும்பகோணத்தில் இருந்து சுமார் 16 கி.மீ. தொலைவில் உள்ள கஞ்சனூர் அக்னீஸ்வரர் கோயில், சுக்கிர பகவானுக்கு உரிய திருத்தலமாகப் போற்றப்படுகிறது. சந்தர்ப்பம் கிடைக்கும் போது, இந்தத் தலத்துக்குச் சென்று சுக்கிர ஹோரையில் வழிபட்டு வருவது விசேஷம்.

சுக்கிர ஹோரை நேரத்தில் வீட்டில், பூஜையறையில் அமர்ந்தபடியும் வேண்டிக்கொள்ளலாம். ஆலயங்களுக்குச் சென்றும் வழிபடலாம்.

வெள்ளிக்கிழமையில், காலை 6 மணியில் இருந்து 7 மணி சுக்கிர ஹோரை. அதேபோல், மதியம் 1 முதல் 2 மணி வரை சுக்கிர ஹோரை. இதையடுத்து, இரவு 8 மணியில் இருந்து 9 மணி வரை சுக்கிர ஹோரை. வெள்ளிக்கிழமையின் சுக்கிர ஹோரை நேரத்தில், வீட்டிலோ ஆலயத்திலோ வழிபாடு செய்யுங்கள். அம்பாளுக்கு உரிய மலர்களைச் சார்த்தி மனதார வேண்டிக் கொள்ளுங்கள். சகல ஐஸ்வர்ய பாக்கியங்களையும் தந்தருளுவார் சுக்கிர பகவான். இன்னல்களில் இருந்து விடுவித்து, தனம் தானியத்தையும் ஆடை ஆபரணச் சேர்க்கையையும் உண்டு பண்ணி வாழ்க்கையை உயர்த்தி அருளுவாள் மகாலட்சுமி.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in