எதிர்ப்புகள் விலகும்; ஐஸ்வர்யம் பெருகும்: ஸ்ரீரங்கம் லக்ஷ்மி நரசிம்மர் மகிமை!

ஸ்ரீரங்கம் லக்ஷ்மி நரசிம்மர்
ஸ்ரீரங்கம் லக்ஷ்மி நரசிம்மர்

அரங்கன் குடிகொண்டிருக்கும் ஸ்ரீரங்கம் புண்ணிய க்ஷேத்திரத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீகாட்டழகிய நரசிங்கப் பெருமாளை புதன்கிழமை மற்றும் சனிக்கிழமைகள் என ஏதேனும் ஒருநாளைத் தேர்ந்தெடுத்து தொடர்ந்து 11 வாரங்கள் வழிபட்டு வந்தால், எதிரிகள் தொல்லை ஒழியும். எதிர்ப்புகள் அனைத்தும் குறையும் என்கிறார்கள் பக்தர்கள்.

ஸ்ரீரங்கம் என்பது அற்புதமான க்ஷேத்திரம். காவிரிக்கும் கொள்ளிடத்துக்கும் நடுவேயுள்ள புண்ணியபூமி. இங்கே, பள்ளிகொண்ட நிலையில் இருந்தபடி சேவை சாதிக்கிறார் ரங்கநாதப் பெருமாள். இதே ஊரில், ஸ்ரீரங்கம் கோயிலுக்கு அருகிலேயே நமக்கு அருள்மழை பொழிந்து, இல்லத்திலும் உள்ளத்திலும் கடாட்சம் வழங்கிக்கொண்டிருக்கிறார் ஸ்ரீநரசிங்கப் பெருமாள்.

ஸ்ரீரங்கம் ரயில்நிலையத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது காட்டழகிய சிங்கர் திருக்கோயில். இந்த அழகிய ஆலயத்தில் இருந்தபடி, நமக்கெல்லாம் உலக வாழ்க்கைக்குத் தேவையான சத்விஷயங்களை வழங்குவதற்கு கோயில் கொண்டிருக்கிறார் நரசிங்கப் பெருமாள். இங்கே இவரின் திருநாமம் காட்டழகிய சிங்கர். இந்தக் கோயிலின் அற்புதம்... ஸ்ரீலக்ஷ்மியை மடியில் அமர்த்திக்கொண்டிருக்கும் நரசிம்மராகக் காட்சி தருகிறார். தொடர்ந்து புதன் கிழமைகளிலும் சனிக்கிழமைகளிலும் பிரதோஷ நாட்களிலும் வழிபட்டு வந்தால், தடைப்பட்ட காரியங்கள் அனைத்தும் நடந்தேறும். எதிரிகள் தொல்லையும் எதிர்ப்பும் தவிடுபொடியாகும்.

சுமார் எட்டடி உயரத்தில் கம்பீரம் பொங்க வீற்றிருக்கிறார் நரசிம்மர். அதுமட்டுமா? தன்னுடைய இடது மடியில் மகாலக்ஷ்மி தாயாரை அமர்த்தியபடி, இடது திருக்கரத்தால் தாயாரை வாஞ்சையுடன் அணைத்தபடி, வலது திருக்கரத்தில் அபய ஹஸ்த முத்திரையைக் காட்டி அருளியபடி சேவை சாதிக்கிறார் ஸ்ரீலக்ஷ்மி நரசிங்கப் பெருமாள்!

ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய சுவாதி நட்சத்திர நன்னாளிலும் நரசிம்மரை வணங்குவது இன்னும் பலம் சேர்க்கும். வளம் அனைத்தும் தரும்.

வைகாசி மாத சுவாதி நட்சத்திரத்தில் நரசிம்ம ஜயந்தித் திருநாள் கோலாகலமாக நடைபெறும். எல்லா மாதங்களிலும் புதன் மற்றும் சனிக்கிழமைகளில், ஸ்ரீரங்கம், லால்குடி, அரியலூர்,சிறுகனூர், மண்ணச்சநல்லூர், துறையூர், பெரம்பலூர், திருவெறும்பூர், துவாக்குடி, குளித்தலை, முசிறி, மணப்பாறை முதலான பல ஊர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வாரந்தோறும் வந்து நரசிம்மரை தரிசித்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். தொடர்ந்து 11 புதன்கிழமையோ அல்லது சனிக்கிழமைகளோ வந்து நரசிம்மரைத் தரிசித்து, வேண்டிக்கொண்டால், தொழிலில் மேன்மை பெறலாம். நல்ல வேலை கிடைக்கும். தடைப்பட்ட காரியங்கள் அனைத்தும் நடந்தேறும். எதிரிகள் தொல்லையோ எதிர்ப்போ தவிடுபொடியாகும்.மங்காத செல்வத்தைத் தந்தருளுவார் ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மர்!

சிவனாருக்கு உகந்த விருட்சங்களில் வன்னி மரத்தையும் சொல்லுவார்கள். இங்கே, காட்டழகிய சிங்கர் திருக்கோயிலின் ஸ்தல விருட்சமாக வன்னிமரம் திகழ்கிறது. இது, வெறெங்கும் காண்பதற்கு அரிதான ஒன்று என்று போற்றுகிறார்கள். ஒவ்வொரு மாதமும் சுவாதி நட்சத்திர நன்னாளில், லக்ஷ்மி நரசிம்மரை தரிசிக்கவும் நேர்த்திக்கடன் செலுத்துவுமான பக்தர்களின் வருகை அதிகரித்தபடியே உள்ளது என்பது இந்தத் தலத்தின் மகத்துவம் என்று போற்றுகின்றனர் பக்தர்கள்! பானக நைவேத்தியமோ தயிர் சாத நைவேத்தியமோ வழங்கி, வேண்டிக்கொள்கிறார்கள். மங்காத புகழையும் ஐஸ்வரியத்தையும் தந்து, கடன் தொல்லையில் இருந்து நம்மை மீட்டெடுத்து அருளுவார் லட்சுமி நரசிம்மர்!

நரசிம்ம அவதாரம் நிகழ்ந்தது ஒரு பிரதோஷ காலத்தில்தான் என்பதால், பிரதோஷத்தின் போது நரசிம்மருக்கு சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் அமர்க்களப்படுகின்றன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in