அலர்ட்டான மின்வாரியம்... நிறுத்தப்பட்டது மின்சாரம் ... மக்கள் வெள்ளத்தில் திருவரங்கம் தேரோட்டம்

ஸ்ரீரங்கத்தில் தேர்
ஸ்ரீரங்கத்தில் தேர்

பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கத்தில் சித்திரை தேரோட்டம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூட்டத்தில் இன்று வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.

108 வைணவ தலங்களில் முதன்மையானதாக விளங்கும் ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சித்திரை தேர்த்திருவிழா கடந்த 21-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தினமும் காலை, மாலை வேளைகளில் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

விழாவின் 8-ம் நாளான நேற்று காலை நம்பெருமாள் கண்ணாடி அறையில் இருந்து வெள்ளி குதிரை வாகனத்தில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து ரங்கவிலாஸ் மண்டபத்தை வந்தடைந்தார். அதனையடுத்து மாலையில் ரங்கவிலாஸ் மண்டபத்தில் இருந்து தங்கக்குதிரை வாகனத்தில் புறப்பட்ட நம்பெருமாள் சித்திரை வீதிகளில் வலம் வந்து சித்திரை தேர் அருகே வையாளி கண்டருளி இரவு கண்ணாடி அறையை சென்றடைந்தார்.

நம் பெருமாள்
நம் பெருமாள்

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை 6.30 மணியளவில் தொடங்கியது. இதையொட்டி உற்சவர் நம்பெருமாள் அதிகாலை 4.45 மணிக்கு கண்ணாடி அறையில் இருந்து புறப்பட்டு அதிகாலை 5.15 மணிக்கு சித்திரைத் தேர் ஆஸ்தான மண்டபத்துக்கும், அங்கிருந்து தேருக்கும் எழுந்தருளினார்.

அதனைத் தொடர்ந்து நம்பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து காலை 6.30 மணியளவில் திருத்தேர் புறப்பட்டது. கீழ சித்திரை வீதியில் இருந்து புறப்பட்ட தேர் தெற்கு சித்திரை வீதி, மேற்கு சித்திரை வீதி, வடக்கு சித்திரை வீதி ஆகிய வீதிகளில் வலம் வந்து மீண்டும் நிலையை அடைகிறது.

இந்த தேரோட்டத்தில் கலந்து கொண்டு ரங்கநாதரை வழிபடுவதற்காக தமிழகம் மட்டுமல்லாது பிற மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீரங்கத்தில் வந்து குவிந்துள்ளனர். ஸ்ரீரங்கத்தில் உள்ள அனைத்து வீதிகளும் மக்கள் வெள்ளத்தால் நிரம்பி உள்ளது.

தேரோட்டத்தை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் கோயில் நிர்வாகம் சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முன் எச்சரிக்கை நடவடிக்கையாக நகரில் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது. 50க்கும் மேற்பட்ட இடங்களில் பக்தர்களுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 1000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in