ஸ்ரீரங்க மகிமை : ‘ரங்கா.. ரங்கா.. உன் திருவடி சரணம்!’

ஸ்ரீரங்க மகிமை : ‘ரங்கா.. ரங்கா.. உன் திருவடி சரணம்!’

’எங்கே சுற்றினாலும் ரங்கனை வந்தடைய வேண்டும்’ என்றொரு வாசகம் உண்டு. நம் வாழ்க்கையில் என்ன செய்தாலும், எத்தனை நல்லவை செய்திருப்பினும், எவ்வளவு அல்லவை செய்திருந்தாலும், அரங்கனை, ரங்கநாதனை, ரங்கநாதப் பெருமாளை இறுதியில் சரணடைந்துவிட்டால் மோட்சம் நிச்சயம்; வைகுண்டத்தில் சொர்க்கவாசல் நமக்குத் திறக்கப்படும் என்று புராணம் சொல்லிவைத்த மாபெரும் விஷயத்தை மிக எளிதாக உணர்த்தியிருக்கிறார்கள், இந்த வாசகத்தின் மூலம்!

இத்தனை பெருமை மிக்க ஸ்ரீரங்கம், ஒருகாலத்தில் அழகிய தீவு போல் அமைந்திருந்ததாகச் சொல்கிறது புராணம். காவிரி - கொள்ளிடம் ஆறுகளுக்கு மத்தியில் அமைந்துள்ள ஸ்ரீரங்கம், இன்றைக்கும் தன் அழகுடன், தனியழகுடன், மிகுந்த சாந்நித்தியத்துடன் அமைந்திருக்கிறது. சயனித்த திருக்கோலத்தில் இருந்தபடி, இந்த உலகுக்கும் உலக மக்களுக்கும் விடியலைத் தந்து சேவை சாதித்துக் கொண்டிருக்கிறார் ரங்கநாதப் பெருமாள்.

ஸ்ரீரங்கம் 108 திவ்விய தேசங்களில் மிக முக்கியமானதொரு க்ஷேத்திரமாகப் போற்றப்படுகிறது. விபீஷணர், ராமபிரானின் பட்டாபிஷேக நிகழ்ச்சியில், சூரியவம்சத்து குலதெய்வமான ரங்கநாதப்பெருமாளை பரிசாகப் பெற்றார். பிராண வாக்ருதி எனும் விமானத்தில் பெருமாளைத் தாங்கியபடி, ஆகாய மார்க்கமாக பறந்து வந்தார்.

காவிரிநதிக்கரையில் கோயில் கொள்ள விரும்பிய பெருமாள், விபீஷணருக்கு உடலில் சோர்வை ஏற்படுத்தினார். அரங்கம் என்னும் அந்த மேட்டுப்பகுதியில் பெருமாளை வைத்துவிட்டு நீராடிய வீபிஷணன், மீண்டும் அந்த விக்ரஹத்தை எடுக்க முனைந்தார். ஆனால் அங்கிருந்து எடுக்கமுடியவில்லை.

இதை அறிந்த சோழமன்னன் தர்மவர்மன் அங்கு ஒரு கோயில் கட்டி வழிபட்டான். காலப்போக்கில் அக்கோயில் சிதிலமடைந்து காவிரி ஆற்றில் புதைந்தது. தர்மவர்மனின் மரபில்வந்த கிள்ளிவளவன் என்னும் மன்னன் காட்டிற்கு வேட்டையாடச் சென்றான். அங்கே, ஒரு மரநிழலில் இளைப்பாறினான். மரத்தில் வசித்த கிளி மன்னனிடம், ’’மன்னா! பாற்கடல் வாசனான மகாவிஷ்ணு இங்கே ரங்கநாதராகப் பள்ளி கொண்டிருக்கிறார். ஸ்ரீரங்கம் என்னும் திருத்தலம் இது!’’ என்று அரங்கநாதரின் வரலாற்றை எடுத்துச் சொன்னது. அப்போது பெருமாளே தன் இருப்பிடத்தை கிள்ளிவளவனுக்கு கிளி வடிவில் வந்து திருத்தலத்தைக் காட்டியருளினார் என விவரிக்கிறது ஸ்தல புராணம்.

வைகுண்டத்தை திருநாடு என்று போற்றுவார்கள். அந்தத் திருநாட்டிற்குச் செல்பவர்கள் எப்போதும் பெருமாளைத் தரிசிக்கும் பாக்கியம் பெறுவர். அவர்களுக்கு நித்யசூரிகள் என்று பெயர். இவர்களுக்கு பசி, தாகம், உறக்கம் எனும் எந்த உணர்வும் இருக்காது. பேரானந்தத்தில் மூழ்கி இருப்பார்களாம்.

பரசவநிலையில் பெருமாளைப் புகழ்ந்து ஆடிப்பாடுவார்கள். இந்தக் காட்சியைப் பூலோக வைகுண்டமான ஸ்ரீரங்கத்திலும் நிகழ்த்த வேண்டும் என்ற ஆவல் கொண்டார் நாதமுனிகள். அரையர் எனும் அபிநயத்தோடு ஆடும் கலைஞர்களை உருவாக்கினார். இதுவே அரையர் சேவை என்று வழங்கப்படுகிறது. ஸ்ரீரங்கத்தில் அரையர் சேவை நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது. இன்றைக்கும் மிக விசேஷமாக ஆனந்த நிலையுடனும் நடத்தப்படுகிறது.

வைகுண்ட ஏகாதசிப் பெருவிழாவின் பகல்பத்து ராப்பத்து உத்ஸவங்களும் விழாக்களும் விமரிசையாக நடைபெறும். அந்த வேளையில், அரையர் சேவையில் பெருமாளை சேவிக்க காணக் கண் கோடி வேண்டும்.

அரையர் சேவைக்கென்று தனி உடை, பிற அலங்காரம் எதுவும் செய்து கொள்வதில்லை. கூம்பு வடிவ தொப்பி ஒன்றை தலையில் அணிந்து கொண்டு பெருமாளுக்கு சூடிக்களைந்த மாலை, பரிவட்டம் ஆகியவற்றை மட்டும் அணிந்து கொண்டு அபிநயம் செய்வார்கள். நாலாயிரத்தை தொகுத்த நாதமுனிகளே இந்தச் சேவையை தொடங்கிவைத்தார். பாசுரங்களை பாடும்போது, அதற்கேற்ப முகம், கை முதலான பாவங்களைக் காட்டி அரையர்கள் நடித்து, பெருமாளின் மீதான அன்பையும் பக்தியையும் காதலையும் உணர்த்துவார்கள்.

அரையர் சேவையில் முத்துக்குறி எனும் பகுதி உண்டு. குறிசொல்லும் ஒரு பெண்ணிடம், தாய் தன் மகளின் எதிர்காலம் குறித்து கேட்பதே முத்துக்குறி. இதைக் காண வரும் ஆண்களும், பெண்களும் பட்டு உடுத்தி வருவது மரபு. அன்று அரையர் ஒருவர் பட்டு உடுத்தி, தாயாக, மகளாக, குறிசொல்பவளாக மாறி மாறி அபிநயத்தோடு பாடி ஆடுவதைப் பார்த்து சிலிர்த்துப் போவார்கள் பக்தர்கள்!

தமிழகத்தில் ஸ்ரீரங்கம், ஆழ்வார்திருநகரி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய மூன்று திவ்யதேசங்களில் மட்டும் வைகுண்ட ஏகாதசியை ஒட்டி அரையர் சேவை நடக்கிறது.

வைகுண்ட ஏகாதசிக்கு முந்தைய பத்துநாட்களை பகல் பத்து என்றும், (மார்கழி அமாவாசைக்கு அடுத்த பிரதமை முதல் தசமி வரை) வைகுண்ட ஏகாதசிக்கு பிறகு வரும் பத்து நாட்களை (ஏகாதசி முதல் பஞ்சமி வரை) ராப்பத்து நாட்களாகவும் கொண்டாடப்படுகிறது. ஸ்ரீவில்லிபுத்தூரில் மார்கழி மாதம் மட்டுமின்றி, ஆடி மற்றும் தை மாதங்களிலும் அரையர் சேவை உண்டு.

கர்நாடக மாநிலத்தில் உள்ள மேல்கோட்டை ஸ்ரீநரசிம்ம பெருமாள் கோயிலில், அபிநயம் இல்லாமல் தாளத்தோடு மட்டும் அரையர் சேவை இன்றைக்கும் நடந்து வருகிறது.

ஆழ்வார்கள் பாடிய பாடல்களைத் தொகுத்தவர் நாதமுனிகள். இதுவே நாலாயிர திவ்ய பிரபந்தம் எனப்படுகிறது. இவர் ஒருமுறை கும்பகோணம் சாரங்கபாணி பெருமாள் மீதான ’ஆராவமுதே’ என்று தொடங்கும் திவ்யபிரபந்த பாசுரத்தை சிலர் பாடக்கேட்டு அதில் மெய்மறந்து போனார்.

அதில் ’ஓராயிரத்துள் இப்பத்தும்’ எனும் அடி வந்தது. அவர்களிடம், ’‘நீங்கள் பாடிய பாடலின் பொருள்படி, ஆயிரத்தில் பத்து பாடல் போக மீதி 990 பாடல்கள் எங்கே?’’ என்று கேட்டார். ஆனால், அவர்களுக்குத் தெரியவில்லை. எனவே நாதமுனிகள் ஆழ்வார்திருநகரி சென்று இந்தக் கேள்வியை மதுரகவியாழ்வாரின் வம்சாவளியினரிடம் கேட்டார்.

அவர்கள் பாசுரங்களைப் பெறுவதற்கு ஒரு வழியைக் கூறினர். மதுரகவியாழ்வாரின் பாசுரங்களை 12 ஆயிரம் முறை யார் ஒருவர் பாடுகிறாரோ, அவர் முன் ஆழ்வாரே தோன்றி அருள் செய்வார். அவரிடம் விபரம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவித்தார்கள். நாதமுனிகளும் 12 ஆயிரம் முறை மதுரகவி யாழ்வாரின் பாசுரத்தைப் படித்தார். ஆழ்வாரின் அருளால் ஆழ்வார்கள் பாடிய அனைத்துப் பாசுரங்களையும் பெற்றார்.

அந்தப் பாடல்களுக்கு தமிழ்ப்பண் அமைப்பில் இசையமைத்து திவ்ய பிரபந்தம் என்று பெயரிட்டார். தனது சீடர்களான உய்யக்கொண்டார், குருகைக்காவலப்பன், மேலையகத்தாழ்வான் மூலம் அந்தப் பாசுரங்களை திவ்யதேசங்கள் எங்கும் பாடச் செய்தார் என்கிறது ஸ்ரீரங்கம் புராணம்.

மார்கழி மாதத்தில் ஏதேனும் ஒருநாளில், திருச்சி ஸ்ரீரங்கத்துக்கு வந்து ஸ்ரீரங்கரையும் ரங்கநாயகித் தாயாரையும் ஒருமுறை ஸேவித்தாலே, நம் பாவங்கள் அனைத்தும் விலகும்; பட்ட கஷ்டங்கள் அனைத்தும் தீரும் என்கிறார் ஸ்ரீரங்கம் முரளி பட்டர்.

அரங்கனின் திருச்சந்நிதிக்கு வருவோம். அவனின் பேரருளைப் பெறுவோம்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in