மங்கலம் நிறைந்த பங்குனியின் விசேஷங்கள்!

மங்கலம் நிறைந்த பங்குனியின் விசேஷங்கள்!

இன்று பங்குனி பிறந்துவிட்டது.

தமிழ் மாதத்தில், பங்குனி மாதத்தை மங்கல மாதம் என்றே சொல்கின்றன சாஸ்திரங்கள். புராணங்களில் குறிப்பிட்டிருக்கும் சகல மங்கல காரியங்களும் பங்குனி மாதத்தில்தான் அரங்கேறியிருக்கின்றன.

மலைமகள் உமையவளை சிவனார், மணம் புரிந்த மாதம் பங்குனி மாதம் என்கிறது புராணம். இந்த மாதத்தில் நாம் செய்கிற சின்னச் சின்ன தானங்கள் கூட மிகுந்த பலன்களைத் தரும் என்றும் நாம் செய்கிற சிறிய அளவிலான தானம் கூட, ஆயிரம் பசுக்களை தானம் செய்த புண்ணியத்தைத் தருகிற மாதம் இது என்றும் சொல்கிறார் பாஸ்கர சிவாச்சார்யர்.

பங்குனி மாதத்தில் முறையே நாம் தெய்வ வழிபாடுகளை இடையறாது செய்து வந்தால், நம் வாழ்க்கையில் இதுவரையிலான தடைகளெல்லாம் நீங்கும். வெற்றி நம்மைத் தேடி வரும் என்பது ஐதீகம்!

திருவரங்கம் என்று போற்றப்படுகிற ஸ்ரீரங்கத்து அரங்கனை, விபீஷணர் பெற்றுக்கொண்ட மாதமும் பங்குனி என்கிறது புராணம். அதேபோல், அரங்கன் அமர்ந்துகொண்டு, காவிரிக்கும் கொள்ளிடத்துக்குமான இடத்தை திருவரங்கம் என அமைத்து திருத்தலமாக்கிக் கொண்டதும் பங்குனியில்தான் என்கிறது ஸ்ரீரங்கம் ஸ்தல புராணம்!

தென்னாடுடைய சிவபெருமானுக்கு உகந்த மாதம் பங்குனி என்கிறார்கள். அதேபோல் மகாவிஷ்ணுவைப் போற்றி வணங்குகிற மாதமாகவும் பங்குனி கொண்டாடப்படுகிறது.

பங்குனி மாதத்தின் உத்திர நட்சத்திர நாள் மிக மிக விசேஷமானது. இந்த நாளில்தான் முருகப்பெருமானை விரதம் இருந்து தரிசிப்பார்கள் பக்தர்கள். அதேபோல், கந்தகுமாரனுக்கு காவடி எடுத்தும் பால் குடம் ஏந்தியும் அலகு குத்திக்கொண்டும் நேர்த்திக் கடன் செலுத்தி, எண்ணற்ற பக்தர்கள் வழிபடுவார்கள்.

பங்குனி மாத உத்திர நட்சத்திர நாளில் விரதம் இருந்து முருகப் பெருமானை தரிசித்தால், விரைவில் திருமண பாக்கியம் கைகூடும்; பிள்ளை வரம் தந்தருளுவார் வேலவன்.

அதேபோல், பங்குனி மாதத்தில் தேய்பிறையில் வரும் ஏகாதசியை விஜயா ஏகாதசி என்பார்கள். எத்தனை தடைகள் இருந்தாலும் அவற்றையெல்லாம் நீக்கி, எடுத்த காரியத்தில் வெற்றியை அளிக்கக் கூடியது விஜயா ஏகாதசி. பங்குனி தேய்பிறை விஜயா ஏகாதசியில், அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று தரிசிப்பதும் பெருமாளுக்கு துளசி மாலை சார்த்தி பிரார்த்தனை செய்வதும் மகத்துவம் மிக்க பலன்களை வழங்கும். பெருமாளிடம் வைக்கிற கோரிக்கைகள் அனைத்தையும் தாயாரின் சம்மதத்துடனும் சிபாரிசுடனும் பெருமாள் நிறைவேற்றித் தந்தருளுவார். அப்போது, நமக்காக மகாவிஷ்ணுவிடம் தாயாரே சிபாரிசு செய்வார் என்பதாக ஐதீகம்.

‘இலங்கை சென்று ராவணனுடன் போரிட்டு, சீதையை எப்படி மீட்பது?’ என்று ஸ்ரீராமர் சிந்தனையில் ஆழ்ந்தார். அப்போது முனிவர் ஒருவர் அவரிடம் இந்த விஜயா ஏகாதசி விரதத்தை அனுஷ்டிக்கச் சொன்னார். அதன்படி விரதம் இருந்து ஸ்ரீராமர், சீதையை மீட்டு வந்தார் என ஏகாதசி விரத மகாத்மியம் விவரிக்கிறது. மார்ச் 17-ம் தேதி வெள்ளிக்கிழமை ஏகாதசி. பங்குனி மாதத்தின் தேய்பிறை ஏகாதசி. விஜயா ஏகாதசி.

விஜயா ஏகாதசி நன்னாளில், வாழை இலையில் ஏழு விதமான தானியங்களை (எள் சேர்க்கக் கூடாது) ஒன்றின் மேல் ஒன்றாகப் பரப்ப வேண்டும். அதன் மீது ஒரு கலசத்தை வைத்து, அதில் திருமாலின் திருவடியை வரைந்து வழிபட வேண்டும். இதனால் குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். தம்பதி இடையே விட்டுக்கொடுத்தலும் அனுசரித்துச் செல்லும் குணமும் மேலோங்கும். பிரிந்த தம்பதி ஒன்று சேருவார்கள் என்பது உறுதி என்கிறார் கோபாலகிருஷ்ண பட்டாச்சார்யர்.

மறு நாள் துவாதசி அன்று, யாருக்கேனும் உணவுப் பொட்டலம் தானமாக வழங்கினால், மகா புண்ணியம் என்றும் பூஜை செய்த கலசம் மற்றும் தானியங்களை ஆச்சார்யருக்கு வழங்கி நமஸ்கரித்தால், சகல ஐஸ்வரியங்களையும் சுபிட்சமும் இல்லத்தில் கிடைக்கப் பெறலாம் என்றும் உறுதிபடத் தெரிவிக்கிறார்.

அதேபோல், பங்குனி மாதத்தில், குருவாரம் என்று அழைக்கப்படும் வியாழக்கிழமைகளில், சிவ வழிபாடு மேற்கொள்வதும் சிவகுருவாகத் திகழும் ஸ்ரீதட்சிணாமூர்த்தியை மனதார வழிபடுவதும் மகத்தான பலன்களைத் தந்தருளும். குருவுக்கு உகந்த மாதமாகவும் பங்குனி மாதம் போற்றப்படுகிறது.

மேலும், உத்திர நட்சத்திரம் என்பது ஸ்ரீஐயப்ப சுவாமியின் திருநட்சத்திரம். பங்குனி உத்திர நட்சத்திர நன்னாளில், அருகில் உள்ள ஐயப்பன் ஆலயத்துக்குச் சென்று, ஐயப்ப சுவாமியை வணங்கி சிதறுகாய் உடைத்து வேண்டிக்கொண்டால், எதிரிகள் தொல்லை விலகும். தீய சக்தியில் இருந்தும், கெட்ட சிந்தனைகளில் இருந்தும் நம்மைக் காத்தருளுவார் ஐயன் ஐயப்ப சுவாமி.

மகத்துவமும் மங்கலமும் நிறைந்த பங்குனி மாதத்தில் உள்ள விரத முறை அனுஷ்டிப்போம். இறைவனை வணங்கி வாழ்வை வளமாக்கிக் கொள்வோம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in