நாளை சூரிய கிரகணம்; பரிகாரம் செய்யவேண்டிய ஐந்து நட்சத்திரக்காரர்கள் யார் யார்?

- கர்ப்பிணிகள் வெளியே வரவேண்டாம்!
சூரிய கிரகணம்
சூரிய கிரகணம்

இன்று அக்டோபர் 24-ம் தேதி தீபாவளித் திருநாள். நாளை திங்கட்கிழமை அமாவாசை திதி நன்னாள். நாளை சூரிய கிரகணமும் நிகழ்கிறது. கிரகணங்கள் பற்றி நம்பிக்கைகள், புராணங்கள் என பல விவரித்துள்ளன என்றாலும் அறிவியல் ரீதியாகவும் சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலவு வரும்போது சூரியனை நிலவு மறைக்கிறது என்று அறிவியலும் சொல்கிறது. சாஸ்திரம் இதைத்தான் வலியுறுத்துக்கிறது. இதுவே சூரிய கிரகணம் என்று சொல்லப்படுகிறது.

நாளைய சூரிய கிரகணம் சென்னையில் மாலை 5 மணி 13 நிமிடத்தில் தொடங்குகிறது. மாலை 6 மணி 25 நிமிடத்தில் கிரகணம் முடிகிறது.

இதேபோல், மும்பையில் மாலை 4 மணி 49 நிமிடத்திற்கு சூரிய கிரகணம் ஆரம்பிக்கிறது. 6 மணி 31 நிமிடத்தில் கிரகணம் முடிகிறது. டெல்லியில் மாலை 4 மணி 28 நிமிடத்தில் சூரிய கிரகணம் தொடங்குகிறது. மாலை 6 மணி 25 நிமிடத்தில் கிரகணம் முடிகிறது. கொல்கத்தாவில் மாலை 4 மணி 51 நிமிடத்தில் சூரிய கிரகணம் தொடங்குகிறது. மாலை 6 மணி 23 நிமிடத்தில் கிரகணம் முடிகிறது.

கிரகணத்தின் போது என்ன செய்யவேண்டும்?

கிரகணத்தின் போது வெளியே செல்வதைத் தவிர்க்கவேண்டும். அதேபோல், கிரகணம் ஆரம்பிப்பதற்கு முன்னதாக ஆறு மணி நேரத்துக்கு முன்னதாகவே சாப்பிடவேண்டும். சாதம் போல் இல்லாமல், இட்லி, தோசை, சப்பாத்தி முதலான டிபன் வகைகளை கிரகணத்துக்கு முன்பு சாப்பிடவேண்டும்.

கிரகண நேரத்துக்கு முன்னதாகவே நாம் அன்றாடம் புழங்குகிற தண்ணீர்க் குடம், மருந்து மாத்திரை டப்பாக்கள் உள்ளிட்டவற்றின் மீது தர்ப்பையை மேலே இடவேண்டும். தர்ப்பை, தோஷம் வராமல் தடுக்கவல்லவை. தீய சக்திகளை அண்டவிடாமல் தடுக்கும். கிரகணம் முடிந்த பிறகு நீராடவேண்டும்.

கிரகண நேரம் முடிந்ததும் அன்றிரவு உணவு எடுத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. ஏகாதசிக்கு விரதம் இருப்பது போலவே அன்று முழுவதும் உபவாசம் இருந்துவிட்டு, மறுநாள் காலையில் சூர்யோதயத்தைப் பார்த்த பிறகு உணவை எடுத்துக்கொள்ளலாம். குழந்தைகள், வயதானவர்கள், உணவு எடுத்துக் கொள்ளாமல் இருக்கமுடியாதே என்பவர்கள், எளிய உணவையோ அல்லது பால், பழமோ மட்டும் எடுத்துக்கொள்ளலாம்.

இரண்டு தர்ப்பணங்கள் - மூன்று முறை குளியல்

நாளை அமாவாசை திதி என்பதால் வழக்கம்போல காலையில் முன்னோர்களுக்கான பித்ருக் கடமைகளை, தர்ப்பண முறைகளைச் செய்துவிடவேண்டும். இதையடுத்து மாலையில் கிரகணம் பிடிக்கிறது. எனவே, கிரகண நேரத்தின் நடுவே 2-வது முறை குளிக்கவேண்டும். குளித்துவிட்டு, தர்ப்பையை காலின் கீழ் போட்டுக்கொண்டு, தர்ப்பையையும் பவித்திரத்தையும் விரல்களில் வைத்துக்கொண்டு, தர்ப்பணம் செய்யவேண்டும். கிரகணம் முடிந்ததும் மூன்றாவது முறையாக குளித்துவிட்டு வரவேண்டும். தர்ப்பணம் முதலான காரியங்களைச் செய்யாதவர்கள், பெண்கள், குழந்தைகள், காலையில் ஒருமுறையும் மாலையில் கிரகணம் முடிந்து மற்றொரு முறையும் நீராடினால் போதும்.

யாரெல்லாம் கவனமாக இருக்கவேண்டும்?

கிரகணம் நிகழும்பொழுது அனைவரும் கவனமாக இருக்கவேண்டும். வெகு முக்கியமாக, கர்ப்பிணிகள் கிரகணத்தால் பாதிக்கப்படுவார்கள் என்பதால், அவர்கள் மிக மிகக் கவனமாக இருக்க வேண்டும்.

சூரிய கிரகணம் நிகழும் நேரத்தில் கர்ப்பிணிகள் யாரும் வீட்டைவிட்டு வெளியே வராமல் இருப்பதே நல்லது. அப்படியே வெளியே வந்து வெளி வெளிச்சம் பட்டால், கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையைப் பாதிக்கக்கூடிய சில கதிர் வீச்சுகள் தாக்கும் அபாயமும் நிகழ வாய்ப்புகள் உண்டு என்கிறது சாஸ்திரம். எனவே, கர்ப்பிணிகள் கிரகண நேரத்தில் வெளியே செல்லாமல் இருப்பதே உத்தமம்!

கிரகண நேரத்தில் என்ன செய்யக்கூடாது?

கிரகண நேரத்தில் சமையல் செய்யக்கூடாது. சாப்பிடவும் கூடாது. தண்ணீர் கூட அருந்தக்கூடாது. நகம் கிள்ளக் கூடாது. எந்த வேலையும் செய்யக்கூடாது. கிரகண கதிர்கள் தாக்காமல் இருக்க உணவுப் பொருட்களில் தர்ப்பையை போட்டு வைப்பது நம் முக்கியமான சடங்கு சாங்கியங்களில் ஒன்று!

அதேபோல், கிரகணம் முடியும்போது, கடவுளையும் நம் முன்னோர்களையும் நமஸ்கரித்து பிரார்த்தனை செய்வது நற்பலன்களை வழங்கும். புண்ணியங்களையும் மனோபலத்தையும் தரும் என்கிறது சாஸ்திரம். பூஜை அறையில் விளக்கு ஏற்றி, ‘நமசிவாய’ மந்திரத்தை கிரகணம் தொடங்கி முடியும் வரையில் ஜபித்துக் கொண்டே இருக்கலாம்.

இன்னும் சில முக்கியமான விஷயங்கள்...

தீட்சை பெற்றவர்கள் இந்த கிரகணத்தின் போது, அனுஷ்டான நியமங்களைச் செய்யலாம். உபதேசம் பெற்ற மந்திரங்களை ஜபித்துக் கொண்டே இருக்கலாம். வீட்டில் நாம் பயன்படுத்துகின்ற பொருட்களின் மீது மறக்காமல், மதியம் தொடங்கியதுமே தர்ப்பையைப் போட வேண்டும். கிரகணம் ஆரம்பம் முதல் முடிவு வரை எதுவும் சாப்பிடக்கூடாது. தண்ணீர் கூட அருந்தாமல் இருப்பது உத்தமம்.

கிரகணம் முடிந்ததும் குளித்துவிட்டு, வீட்டில் விளக்கேற்றிவிட்டு, வீட்டில் சிறிய நாகர் சிலை இருந்தால், அதற்கு பாலால் அபிஷேகம் செய்யலாம். பக்கத்தில் உள்ள கோயிலின் நவக்கிரகத்தில் உள்ள ராகு - கேது பகவானுக்கு பாலபிஷேகம் செய்து விளக்கேற்றலாம். புற்றுக்கோயில் இருந்தால் பால் விடலாம். இதனால் ராகு , கேது தோஷம் மட்டுமின்றி கிரகண தோஷங்கள் இல்லாமல் போகும் என்கிறார் பாலாஜி வாத்தியார். கிரகணம் முடிந்ததும், வீட்டை தண்ணீரால் கழுவியோ துடைத்தோ சுத்தம் செய்யவேண்டும். பிறகு விளக்கேற்ற வேண்டும்.

அந்த ஐந்து நட்சத்திரக்காரர்கள்...

கிரகணத்தால், கிரகண தோஷத்துக்கு ஆளாகும் நட்சத்திரக்காரர்களாக, சித்திரை, விசாகம், சுவாதி, திருவாதிரை மற்றும் சதயம் நட்சத்திரக்காரர்களைச் சொல்கிறார்கள் ஆச்சார்யர்கள். ஆகவே, இந்த நட்சத்திரக்கார அன்பர்கள் கிரகண சாந்தி பரிகாரம் செய்துகொள்ளவேண்டும்.

கிரகண காலத்தையொட்டி, கிரகணம் முடிந்த பின்னர் அல்லது மறுநாள் நம்மால் முடிந்த தானங்களை எவருக்கேனும் வழங்கலாம். ஆடையாக இருக்கலாம். பாத்திரங்களாக இருக்கலாம். உணவாக இருக்கலாம். எவருக்கேனும் செருப்பு வாங்கித் தரலாம் என்று ஸ்காந்த புராணம் சேது மஹாத்மியத்தில் கூறப்பட்டுள்ளது. இந்தத் தானங்களை எல்லோரும் வழங்கலாம் என்றபோதும் இந்த ஐந்து நட்சத்திரக்காரர்கள் நிச்சயமாக வழங்கினால், ஸூர்யோபராக தோஷ நிவர்த்தியாகும் என்கிறார் பாலாஜி வாத்தியார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in