சீதையின் அம்சம் ஆண்டாள்: வாழ்க்கைத் துணைக்கு வரம் தரும் திருப்பாவை!

சீதையின் அம்சம் ஆண்டாள்: வாழ்க்கைத் துணைக்கு வரம் தரும் திருப்பாவை!

நல்ல வாழ்க்கைத் துணைக்கு திருப்பாவை பாடி, மார்கழியில் மாலோனை வழிபட்டு வந்தால், நல்ல குணமுள்ள வாழ்க்கைத் துணையை அமைக்கப் பெறலாம். அதனை நமக்கு அருளிச்செய்வார் திருமால் என்று போற்றுகிறது புராணம்.

ஸ்ரீரங்கமன்னாருக்கு பூமாலையைச் சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாள் ஆண்டாள், நமக்காகப் பாமாலையையும் பாடி அருளியிருக்கிறார். அதுவே திருப்பாவை. இதில் உள்ள முப்பது பாடல்களும் முத்துக்கள்.

‘’திருப்பாவையின் ஒவ்வொரு வரியும் பலாச் சுளைக்கு ஈடானது. அவை அனைத்தும், கண்ணனையே கணவனாக, ரங்கனையே மணாளனாக எண்ணி உருகிப் பாடியவை! தந்தை பெரியாழ்வார், மதுராவில் ஸ்ரீகண்ணன் செய்த லீலைகளைச் சொல்லச் சொல்ல, அவனையே நினைக்க ஆரம்பித்தாள் ஆண்டாள். ‘நீயே என் பதி’ என முடிவு செய்தாள். அவனைப் பார்க்கவேண்டுமே என மருகினாள். தவித்தாள். ‘என்னை ஏற்றுக் கொள்வாயா?’ எனக் கெஞ்சினாள். இவளின் இந்த ஏக்கமும் கனவும் திருப்பாவைப் பாடல்களாக மலர்ந்து, இன்றைக்கும் மணம் பரப்பி வருகிறது’’ என்கிறார் மதுரை அழகர்கோவில் அம்பி பட்டாச்சார்யர்.

“திருப்பாவைல எனக்கு ரொம்பவும் பிடிச்ச, ‘எல்லே இளங்கிளியே இன்னம் உறங்குதியோ...’ங்கற பாட்டு கூடுதல் விசேஷம். ஆண்டாளோட மொத்த சந்தோஷமும் எனக்குள்ளே பரவி, என்னமோ பண்ணிச்சு. மேற்கொண்டு யாராலயும் பாடமுடியாம, ஏதோ பண்ணிரும்’’ என்று மெய்யுருகிச் சொல்கிறார் அம்பி பட்டர்.

‘’திருப்பாவையில் முப்பது பாட்டு இருந்தாலும், பதினைஞ்சாவதா இருக்கிற அந்த ஒரு பாட்டைப் பாடினா, மொத்தப் பாடல்களையும் பாடினதுக்குச் சமம்னு அழகிய மணவாள மாமுனிகள் சொல்றார். அதுதான் திருப்பாவையோட மகத்துவம். பக்தன் என்பவன் எப்படி இருக்கணும். அவன் எப்படி நடந்துண்டா, பகவானை அடையலாம்னு ரொம்ப அழகாச் சொல்லியிருப்பா, ஆண்டாள்!

மார்கழி மாசத்துல, சில்லுன்னு குளிர் இறங்குற அதிகாலை வேளைல, குளிச்சு முடிச்சு, பூஜையறையில உட்கார்ந்து, திருப்பாவை பாடல்களைச் சொல்லி, ரங்கமன்னாரையும் ஸ்ரீஆண்டாளையும் மனசாரப் பிரார்த்தனை பண்ணினா, நாம வேண்டினது நிச்சயம் நிறைவேறும். அந்த ஆண்டாள் விரும்பினபடி ஆண்டவனே கிடைச்சது போல, நல்ல குணமுள்ள கணவனை அடைவார்கள், பெண்கள்’’ என்று விவரிக்கிறார் அம்பி பட்டாச்சார்யர்.

மார்கழியில், இதமான குளிர் நிறைந்த மனதையும் குளுமையாக்கும் மாதத்தில், பெருமாள் கோயிலுக்குச் சென்று, ஆண்டாள் பாசுரம் பாடி, பிரார்த்திப்போம். நல் வாழ்க்கையும் நிச்சயம்; நல்ல வாழ்க்கைத்துணை கிடைப்பதும் உறுதி!

அதேபோல, சீதையின் அம்சம் ஆண்டாள் என்று போற்றுகிறது புராணம்.

திருப்பாவை சொல்லி முடித்து, வாழி திருநாமங்களைச் சொல்லும்போது வைணவர்கள் இப்படிச் சொல்வார்கள்... ‘திருவாடிப் பூரத்து செகத்துதித்தாள் வாழியே; திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே..!’

- இந்த உலகில் இருள் நீங்க ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூரம் மகிமை பொருந்தியது. தன்னிகர் இல்லாதது. அதனால்தான் வைணவ ஆச்சார்யர் மணவாள மாமுனிகள், ஆண்டாளுக்கும் ஆடிப்பூரத்துக்கும் ஈடே கிடையாது என்றார்.

பெரியாழ்வார் பெண்பிள்ளையாய் ஆண்டாள் பிறந்த

திருவாடிப் பூரத்தின் சீர்மை - ஒருநாளைக்கு

உண்டோ மனமே உணர்ந்துபார் ஆண்டாளுக்கு

உண்டாகில் ஒப்பு இதற்கும் உண்டு.

எதையும் எதற்கும் ஒப்புமை கூறிவிடலாம்; ஆனால், ஆடிப்பூரத்துக்கும் ஆண்டாளுக்கும் எதையும் எவரையும் ஒப்பிடவே முடியாது என்பது அவர் அருளியவை. அதேபோல், மார்கழி மாதத்துக்கும் பாவை நோன்புக்கும் ஆண்டாள் பாசுரங்களுக்கும் ஒப்புமிக்கவை எவையுமில்லை உலகில் எதையும் என விவரிக்கிறார்கள் வைஷ்ணவ ஆச்சார்யர்கள்.

ஆண்டாள்... சீதை மற்றும் பூமாதேவியின் அம்சம் என்கின்றன புராணங்கள்.

ஆண்டாள் பெருமையை அவள் அவதரித்த ஆடிப்பூர நாளில் மட்டுமா சிலாகித்து வணங்குகிறோம். மார்கழி மாதத்திலும்தான்.

திருச்சி குணசீலம் பிச்சுமணி பட்டாச்சார்யர், மெய்யுருகி விவரித்தார்.

’’அது திரேதா யுகம். மிதிலை நகரை ஆண்ட ஜனகர், கர்மத்தாலேயே ஸித்தியடைந்தவர். அவர், யாகசாலை அமைக்க கலப்பை கொண்டு பூமியை உழுதபோது, அங்கே தேவி வடிவாக பெண் குழந்தை தோன்றினாள். அவளை சீதை என்று பெயரிட்டு மகளாகவே வளர்த்தார் ஜனகர். அவளை, அவதார புருஷன் ராமபிரான் மணந்தான். மனைவியைக் காரணமாகக் கொண்டு புவியில் தீயோரைக் கொன்று நல்லோரைக் காத்தான். இதை நமக்கு உணர்த்துவதுதான் ராமாயணம். அயனம் என்றால் பாதை. இது ராமன் காட்டிய பாதை என்பதால், ராமாயணம்!

இது கலி யுகம். வில்லி புத்தூரில் சிறப்புறத் திகழ்ந்த பெரியாழ்வார், பக்தியாலே ஸித்தியடைந்தவர். அங்கே கோயில் கொண்ட வட பெருங்கோயிலுடையானுக்கு பூமாலையும் பாமாலையும் சமர்ப்பித்து பக்தி யாகம் செய்தவர். நந்தவனம்தான் அவருடைய வேள்விச் சாலை. அதில் ஒரு நாள்... துளசிச் செடிகளின் அடியில் ஒரு குழந்தையைக் கண்டார். கோதை எனப் பெயர் சூட்டி மகள் போல் வளர்த்தார். பூமாதேவியே, இவ்வுலக மக்களை நன்னெறிப்படுத்த சீதையைப் போல் கோதையாக அவதரித்தாளாம். அவளின் அந்தரங்க பக்தி, அந்த அரங்கனின் மீது இருந்தது.

ஆழ்வாரிடம் இருந்து பக்தியும் கவியும் கோதைக்கு கைவரப்பெற்றது. கிருஷ்ண லீலைகள் குறித்து அவர் சொன்னவை அவள் உள்ளத்தில் ஆழப் பதிந்தன. குழந்தை கிருஷ்ணன் தன்னிடம் விளையாட வருவது போலவும், தன்னுடனேயே இருப்பது போலவும் எண்ணினாள். இளமை முதலே எம்பெருமான் மீது பக்திப் பெருவேட்கை கொண்டிருந்த கோதை, அரங்கனாகவே மாறிப்போனாள்’’ என்கிறார் குணசீலம் பிச்சுமணி பட்டாச்சார்யர்!

மார்கழியில் திருப்பாவை பாடினால், திருமண வரம் கிடைக்கப் பெறலாம். வாழ்வில், கடுகளவு துன்பம் வந்தாலும் ஆண்டாளை தன் திருவடியிலும் மனதிலும் ஏற்றுக்கொண்ட அரங்கனைத் தரிசித்துத் தொழுவோம். அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று ‘நீயே கதி’எனச் சரணடைவோம். நம் வாழ்க்கையில் சந்தோஷங்களைத் தந்து அருள்பாலிப்பார் பெருமாள் என்பது உறுதி.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in