இன்று மகா சிவராத்திரியுடன் சனி பிரதோஷமும் வருகிறது!

இன்று மகா சிவராத்திரியுடன் சனி பிரதோஷமும் வருகிறது!

சனிப்பிரதோஷமும் மகா சிவராத்திரியும் இணைந்த அற்புதமான இன்றைய நன்னாளில், அருகில் உள்ள சிவாலயத்துக்குச் சென்று கண் குளிர சிவனாரைத் தரிசிப்போம். நம் பிறவிப்பயனுகாக அருளித்தருவார் தென்னாடுடைய சிவனார்.

சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமையில் வரும் பிரதோஷமும் சனிக்கிழமையில் வரும் பிரதோஷமும் மிகவும் வலிமைமிக்கவை என்றும் வளமெல்லாம் தருபவை என்றும் ஆச்சார்யர்கள் விவரித்திருக்கிறார்கள்.

எந்தக் கிழமையில் பிரதோஷம் வந்தாலும் குறிப்பிடாத வகையில், சனிக்கிழமையன்று வருகிற பிரதோஷத்தைத்தான், சனி மகா பிரதோஷம் என்று குறிப்பிடுகின்றன சிவஞான நூல்கள். மேலும், ‘சனிப்பிரதோஷம் சர்வ பாபவிமோசனம்’ என்கிற சொலவடையே உண்டு. ஆகவே, மற்ற பிரதோஷ நாளில், சிவாலயங்களுக்கு வருகிற கூட்டத்தை விட, சனி மகா பிரதோஷத்தன்று பல மடங்கு மக்கள் வந்து தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.

இன்று சனி மகா பிரதோஷம். இந்தநாளில், மாலை வேளையில் மறக்காமல் சிவன் கோயிலுக்குச் சென்று நந்தியம் பெருமானுக்கும் சிவலிங்கத் திருமேனிக்கும் நடைபெறும் அபிஷேக ஆராதனைகளையும் தீப தூப ஆராதனைகளையும் கண் குளிரத் தரிசிப்போம்.

இன்றைய நாள்... சனிப்பிரதோஷம் மட்டுமல்ல. மகா சிவராத்திரித் திருநாளும் கூட! மாத சிவராத்திரியில் விரதம் மேற்கொள்ளாமல் தவற விட்டவர்கள் கூட, மகா சிவராத்திரிப் பெருநாளில் அவசியம் விரதம் மேற்கொள்வார்கள்.

வாழ்வில் ஒருமுறையேனும் திருவண்ணாமலைக்குச் சென்று தரிசிக்க வேண்டும், வாழ்வில் மூன்று முறையேனும் கங்கையில் நீராட வேண்டும், ஏழு முறையேனும் காவிரியில் நீராடுவது புண்ணியம் என்றும் சொல்லிவைத்திருக்கிறார்கள். அதேபோல், மனிதனாகப் பிறந்த நாம், நம் வாழ்வில் 12 முறையோ 24 முறையோ, மகா சிவராத்திரி நன்னாளில் விரதம் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்கள்.

ஆக, சனிப்பிரதோஷமும் மகா சிவராத்திரியும் இணைந்தநாளில், நமசிவாய மந்திரத்தையும் பதிகங்களையும் பாராயணம் செய்து, சிவன் கோயில்களில் மாலையில் நடைபெறும் பிரதோஷ பூஜையிலும் இரவு வேளைகளில் நடைபெறும் மகா சிவராத்திரி பூஜைகளிலும் தவறாமல் கலந்துகொண்டு தரிசிப்போம். முடிந்தால், அபிஷேகப் பொருட்களையும் மலர்களையும் வில்வங்களையும் வழங்கி பிரார்த்திப்போம்.

பிரதோஷ தரிசன புண்ணியமும் மகா சிவராத்திரி விரதப் புண்ணியமும் இணைந்து நமக்கு நல்ல சத்விஷயங்களும் சத்பலன்களுமாக கிடைக்கப் பெறலாம். சகல யோகங்களையும் வழங்கி அருளுவார் சிவபெருமான்.

தென்னாடுடைய சிவனே போற்றி; எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in