செவ்வாயும் அஸ்வினியும் இணைந்தநாள்: சனி தோஷம் போக்கும் தயிர்சாதம்!

திருநள்ளாறு சனீஸ்வர பகவான்
திருநள்ளாறு சனீஸ்வர பகவான்

செவ்வாய்க்கிழமையும் அஸ்வினி நட்சத்திரமும் இணைந்த நாள் ரொம்பவே விசேஷமானது. இந்தநாளில், எளிய வழிபாட்டின் மூலம் சனி தோஷத்தைப் போக்கிக் கொண்டு நிவர்த்தி பெறலாம் என்பது ஐதீகம்.

பொதுவாகவே செவ்வாய்க்கிழமைகளில் அம்மன் வழிபாடு செய்வதற்கும் முருக வழிபாடு செய்வதற்கும் உகந்த நாட்கள் என்கிறார்கள். காலையும் மாலையும் அம்மனை வணங்கி வழிபடலாம். அதேபோல், முருகப்பெருமானுக்கு செவ்வரளி மாலை சார்த்தி வேண்டிக்கொண்டால், செவ்வாய் முதலான கிரக தோஷங்கள் நீங்கும் என்கிறார் பாலாஜி குருக்கள்.

முக்கியமாக, செவ்வாய்க்கிழமைகளில் துர்கை வழிபாடும் அவசியமானது. துர்கை என்றாலே துக்கத்தைப் போக்குபவள் என்று அர்த்தம். துர்காதேவியை, செவ்வாய்க்கிழமை ராகுகால வேளையான மாலை 3 முதல் 4.30 மணி வரையிலான நேரத்தில் எலுமிச்சை தீபம் அல்லது நெய் தீபம் ஏற்றி செந்நிற மலர்கள் சார்த்தி வேண்டிக்கொள்வது எண்ணற்ற நன்மைகளைத் தந்தருளும் என்கிறார்கள்.

அதேபோல் செவ்வாய்க்கிழமையும் அஸ்வினி நட்சத்திரமும் இணைந்த நாள் மகத்துவம் மிக்கது. இதனை பவுமாஸ்வினி என்று சொல்கிறது ஜோதிட சாஸ்திரம். புரட்டாசி மாதத்தில், செவ்வாய்க்கிழமையும் அஸ்வினியும் இணைந்த பவுமாஸ்வினி நன்னாளில், பெருமாள் கோயிலுக்குச் சென்று வழிபடுவது ரொம்பவே பலன்களைத் தந்தருளக் கூடியது. அதேபோல், பன்னிரு ஆழ்வார்களுக்கு மாலைகள் சார்த்தி வணங்கலாம். அல்லது ஏதேனும் ஒரு ஆழ்வாருக்கு மாலை சார்த்தி வேண்டிக்கொள்ளலாம்.

இந்தநாளில், பெருமாள் தரிசனம் செய்வது நற்பலன்களை வழங்கவல்லது. நாலாயிர திவ்விய பிரபந்தத்தில் இருந்து பாடல்களைப் பாராயணம் செய்யலாம். ஆழ்வார் பாசுரங்களைச் சொல்லி பாராயணம் செய்து வழிபடலாம். விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்லி வேண்டிக்கொள்ளலாம். எல்லாவற்றையும் விட முக்கியமாக, பெருமாளையும் ஆழ்வார்களையும் தரிசித்துவிட்டு, அவர்களுக்கு கோயிலிலோ அல்லது நம் வீட்டிலோ தயிர்சாதம் நைவேத்தியம் செய்து, ஐந்து பேருக்கு தயிர்சாதப் பொட்டலம் வழங்கலாம். வீட்டில் இல்லாமல், வெளியூரில் தங்கி வேலை செய்பவர்கள், ஆலயத்துக்குச் சென்று தரிசித்துவிட்டு, தெருவோரத்தில் வசிப்போருக்கு தயிர்சாதப் பொட்டலம் வாங்கிக் கொடுக்கலாம். இதனால் சனி பகவானின் கோபம் குறையும். சனி கிரக தோஷம் நீங்கும். நம் சங்கடங்கள் அனைத்திலிருந்தும் விடுபடுவோம். இல்லத்திலும் உள்ளத்திலும் மகிழ்ச்சி எல்லையற்றுத் திகழும் என்கிறார் பாலாஜி குருக்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in